Friday, 20 May 2011

முன்பயிற்சி இல்லாத முக்கியப் பணி

2011-05-20


மனித சமுதாயத்தில் எந்தப் பொறுப்பான‌ வேலைக்கும் முன்பயிற்சி தேவைப்படுகிறது; எதிர்பார்க்கப்படுகிறது; அதனால் அப்படித் தேவையான முன்பயிற்சி கொடுக்கப்படுகிறது; அதில் தேர்வு வைத்துத் தேறியவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பயணிகள், பாதையில் செல்வோர் எனப் பலரின் உயிர்களுக்குப் பொறுப்பான வேலை செய்யும் பேருந்து ஓட்டுநருக்கு அத்தகைய முன்பயிற்சி, தேர்வு, சான்றிதழ் தேவைப்படுகிறது. வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் சிற்பிகள் என அழைக்கப்படும் ஆசிரியர் பணிக்குக் கல்வித் தகுதி, பயிற்சி, தேர்வு எனப் பலப் படிக்கட்டுகள் உள்ளன.

அதே போல் மருத்துவப் பணிக்கு, பொறியியல் பணிகளுக்கு, கணக்காயர் பணிக்கு எனத் தகுதியும் முன்பயிற்சியும் தேர்வுச் சான்றிதழ்களும் இல்லாத பணியே இல்லை என்று சொல்லி விடலாம்.

ஆனால் சமுதாயத்தின் முக்கியமான இரண்டு வேலைகளுக்கு முன்பயிற்சி எதிர்பார்க்கப்படுவதில்லை.

திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் குடும்பம் நடத்துவதற்கும் அரசியலில் ஈடுபட்டு அவை உறுப்பினர், அமைச்சர் என அதிகாரம் உள்ள, பொறுப்பான பதவிகளுக்குச் செல்வதற்கும் தகுதி, முன்பயிற்சி, தேர்வு சான்றிதழ் தேவைப் படுவதில்லை; எதிர்பார்க்கப் படுவதில்லை. அதனால் அத்தகைய கல்வியோ, முன்பயிற்சியோ சமுதாயத்தில் இல்லை.

வயதாகி விட்டாலே திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று வளர்க்கத் தகுதி வந்து விட்டதாகக் கருதப்படுகிறது. அதே போல் வயது ஆகி விட்டாலே அரசியல், ஆட்சி, அதிகாரத்திற்குத் தகுதி வந்து விடுகிறது. இதை விட (அரசியலில்) அவலம் என்னவென்றால் அடுத்தவரைத் (ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரை) திறமையாகக் குறை சொல்லத் தெரிந்திருந்தாலே அப்படிக் குறை சொல்பவருக்கு ஆட்சி, அதிகாரம் பெறுவதற்குத் தகுதி இருப்பதாகக் கருதுவது போல் சமுதாயத்தின் நடைமுறை உள்ளது. நேற்று வரை எந்த வேலை செய்து கொண்டு இருந்தவர்களும் இன்று முதல் அரசியல் குதிக்கவும் செயலாளர், தலைவர், தளபதி என்று அழைக்கப்படவுமான நிலை உள்ளது.

பேருந்தை ஓட்டத் தெரியாதவன், அதற்குப் பயிற்சி எடுக்காதவன் பேருந்து ஓட்டுவதை பற்றியும், அறுவை சிகிச்சைக்குப் படிக்காதவன், பயிற்சி பெறாதவன் அறுவைச் சிகிச்சை செய்வதைப் பற்றியும் குறை சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிக் குறை சொல்வதில் உண்மை இருக்கிறது என்பதற்காகக் குறை சொல்பவனிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியுமா?

வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழத் திருமணம் செய்து கொள்ளும் முன் முன்பயிற்சிக்காக ஒரு பயிற்சித் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் வாழ்வின் பல வாய்ப்புகளில் நாம் ஒவ்வொருவரும் எப்படி மனித உறவுகளில் பக்குவப்பட்டுள்ளோம் என்று பார்க்கலாமே. பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன், உறவு சுற்றத்தினருடன், நட்பினருடன், உடன் பணிபுரிவோருடன், அன்றாடம் சந்திக்கும் முன்பின் தெரியாதவர்களுடன் நாம் பழகும் விதம் எப்படி உள்ளது என்று அளவிடலாமே. அதற்கு ஒரு தேர்வு வைக்கலாமே. அப்படித் தேறியவர்களுக்கு மட்டுமே திருமண உரிமம் வழங்கலாமே. அதன் பின் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் முன் அதற்குத் தகுதியான உடல், உள நலங்களைப் பொறுத்தே பெற்றோர் ஆகும் உரிமம் வழங்கலாமே. இவை இன்று ஏளனத்திற்குரியவையாக இருந்தாலும் வருங்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடி வரலாம்.

அதே போல் சட்டசபை, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளுக்கு ஒருவர் முன்வந்தால் அவர் இதற்கு முன் செய்துள்ள அவற்றை ஒத்த பொதுப்பணி அனுபவங்கள், அதில் அவரின் சாதனைகள், அவரைப் பற்றி உடன் பணி செய்தவர்களின் கருத்துகள் எனப் பலவகைகளில் சோதனை செய்ய முடியும்; சோதனை செய்ய வேண்டும்.

இந்த இரண்டிலும் கவனம் செலுத்துவது / புறக்கணிப்பது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிப் பக்குவத்தின் நிலையைக் காட்டுகிறது. இன்றைய போக்கில் போய்க் கொண்டு இருந்தால் உடல் நோயின்மை குறித்த சான்றிதழ் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள யாரும் முன் வராத நிலை சீக்கிரத்தில் வந்து விடலாம். ஆனால் அதே போல் உள நோயின்மை (மனப் பேதலிப்பு, பைத்தியம்...) மட்டும் போதாது; மனித உறவுத் திறன் (people skill maturity) பக்குவம் பற்றிய சான்றிதழும் வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை.

மனித சமுதாயத்தின் மிக முக்கியமான சிக்கல் மனித உறவுகளே. அதற்கு மிக முக்கியமான காரணம் மனிதர் இயல்புகளே (மனப் போக்குகளே). எனவே சிக்கலுக்கான மிக முக்கியமான தீர்வும் மனிதர்களின் மனப் பக்குவமே. இதை உணர, செயல்படுத்த நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான பங்கு மனிதர்களே, அவர்களுடன் நாம் கொள்ளும் பரிமாற்றங்களே என்பதைப் புரிந்து கொண்டு பின்பற்றினால் தான் முடியும்.

இந்தப் பின்னணியுடன் இங்கு சில கருத்துகள் சிந்திக்கவும் கலந்து பேசவும் ஆய்ந்து உணர்ந்து கொள்ளவும் பின்பற்றிச் சோதனை செய்து வளர்த்துக் கொள்ளவும் முன்வைக்கப்படுகின்றன.

நாம் கடவுளால் மனிதன் படைக்கப் பட்டான் என்று நம்பினாலும் சரி அல்லது கண்மூடித் தனமான இயற்கை போக்குப் பரிணாம வளர்ச்சியால் மனிதன் உருவானான் என்று நம்பினாலும் சரி அல்லது இந்த இரண்டும் பல விழுக்காடுகளில் கலந்த பல விதமான கருதுகோள்களை நம்பினாலும் சரி, மனிதனின் இயல்புகள், பண்புகள், குணங்கள் எதுவும் முழுக்க நல்லது என்றோ தீயதோ என்றோ இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்ற திருவள்ளுவர் வாக்குப் படி குணங்கள் (அன்பு, வன்பு, பொறாமை, பொறுமை, போட்டி, ஒத்துழைப்பு, சுதந்திரம், கட்டுப்பாடு, தன்னலம், பொது நலம்...) குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இயங்க முயலும் முயற்சியே வாழ்க்கை (வாழ்க்கைப் போராட்டம்) ஆகும்.

நம் உடலில் வெப்பம் அதிகம் ஆனாலும் குளிர்ச்சி அதிகம் ஆனாலும் நோய் தான். அதே போல் தம்பதியராகத் திருமண வாழ்க்கை, பிள்ளைகளுடன் ஆன குடும்ப வாழ்க்கை, பிறருடன் ஆன சமுதாய வாழ்க்கை என்பனவற்றிலும் உரிமையும் கடமையும் போட்டியும் ஒத்துழைப்பும் ஆளுமையும் அடங்கிச் செல்வதும் அறிவும் அன்பும் அமைதியும் ஆர்ப்பாட்டமும் மென்முறையும் வன்முறையும் வழி நடப்பதும் வழி காட்டலும் சுதந்திரமும் கட்டுப்பாடும் பாராட்டலும் கண்டித்தலும் பரிசும் தண்டனையும் மானமும் பெருமையும் புத்திசாலித்தனமும் முட்டாள்தனமும் அதிகமாகவோ குறையாமலோ இருக்கும் போது தான் சிறக்கிறது. இது ஓர் இயக்கச் சமநிலை ஆகும்.

உடலில் தேவைக்கதிமாகக் கொழுப்பு இருந்தாலும் சிக்கல் தான். நம்மிடம் தேவைக்கதிகமாக செல்வம் இருந்தாலும் அது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் கெடுக்க வாய்ப்புண்டு. அதே போல் நம்மிடம் தேவைக்கதிமாக அறிவு இருந்தாலும் தொல்லை, தீமை வர வழியுண்டு. நம் அறிவை அடக்கி வைப்பதிலும்  (துறப்பதிலும்) பயன் விளையும் சூழ்நிலைகள் உண்டு.

பேருந்து ஓட்டுவதற்குப் பயிற்சி கொடுப்பது போல் திருமண வாழ்க்கைக்கோ, பிள்ளைகளை வளர்ப்பதற்கோ முன் பயிற்சி முழுமையாகக் கொடுக்க முடியாது. ஏனென்றால் திருமண வாழ்க்கையே, பிள்ளைகளை வளர்ப்பதே பிறருடன் ஆன சமுதாய வாழ்க்கையே பயிற்சிகள் தான். பிறருடன் ஆன சமுதாய வாழ்க்கை என்பதில் அரசியல், ஆட்சி, அதிகாரப் பதவிகள், பொறுப்புகள், உரிமை, கடமைகளும் அடங்கும். இதைத் தான் திருவள்ளுவர் 'சாகும் வரை கற்க வேண்டும்' என்றார்.

தம்பதியராகத் திருமண வாழ்க்கை உறவில் ஒருவரை ஒருவர் பாதித்து அடுத்தவரின் குண நலன்களைச் சிதைக்கவோ செம்மைப்படுத்தவோ செய்கிறோம். அதே போல் பிள்ளைகள் வளர்ப்பிலும் ஆகும். பிள்ளைகளின் பிடிவாதமோ, நல்ல பழக்க வழக்கங்களோ பெற்றோரின் சொல், செயல்களின் பாதிப்பு இல்லாமல் வந்து விடவில்லை. பிறருடன் கொள்ளும் சமுதாய உறவிலும் இதே கதை தான். அதனால் அரசியல், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்மையும் நாம் அவர்களையும் பாதிக்கிறோம்.

இந்தப் புரிதல் வந்தால் பிறரின் (வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், சமுதாய உறுப்பினர்) சொல், செயல் நம்மை முள்ளாகக் குத்தும் போது, அவர்கள் மேல் வெறுப்பும் பகைமையும் வருவதற்குப் பதிலாக அந்த முள் முள்ளாக வளர, குத்த நேர்ந்ததில் நம் பங்கு என்ன என்று ஆய்வு செய்வோம். மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கும். மாற்றம் என்பதால் பொறுமை, சகிப்பு, விட்டுக் கொடுத்தல் என்று மட்டும் பொருள் கொண்டு விடக் கூடாது. அந்த மாற்றம் எதிர்ப்பு, போர்க்குணம், கண்டிப்பு, வன்முறை, தண்டனை என்பனவற்றையும் தேவையைப் பொறுத்து உள்ளடக்கும்.

ஓட்டுநர் பயிற்சி கூடச் சான்றிதழ் வாங்கியதும் முடிந்து விடுவதில்லை. திறமையான பாதுகாப்பான ஓட்டுதல் (safe and skillful driving) என்பது 10 விழுக்காடு தொழில் திறன் (technical skill) என்றும் 90 விழுக்காடு மனப்பான்மை (attitude எவ்வாறு சாலையில் பிறருக்கு வழி விட்டும் பிறரிடம் வழி கேட்டும் மதித்து நடப்பது) என்றும் சொல்லப்படுகிறது.

திருமண வாழ்வும் பிள்ளைகளை வளர்ப்பதும் பிறருடன் ஆன சமுதாய உறவுகளும் அவ்வாறே. இவற்றிற்கு முன் பயிற்சி, தேர்வு, சான்றிதழ் இன்று இல்லை; நாளை வரலாம். என்றாலும் அவை 10 விழுக்காடே. 90 விழுக்காடு அன்றாட வாழ்வில் விழுந்து எழுந்து கற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் அந்த 10 விழுக்காடு மிக முக்கியம். அது தான் மீதி 90 விழுக்காட்டை நமக்கு வெளிப்படுத்துகிறது. இல்லாவிடில் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருப்போம். இன்றைய (தனி நபர், திருமண, குடும்ப, சமுதாய) வாழ்க்கையைப் பார்த்தால் நாம் இப்படி மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்து உழன்று கொண்டு இருப்பது விளங்கும்.

அதனால் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே தொடர்ந்து கற்றுக் கொண்டு வளர ஒரு வாய்ப்பாகப் பார்த்தால் பின்பற்றினால் நடைமுறைப்படுத்தினால் சிறக்கும். இது எல்லோருக்கும் தெரிந்த பொது அறிவு தான் என்றாலும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதன் மூலமே அதை நாம் நம் மையமான‌ குணமாக (central character) மாற்ற முடியும்.

Tuesday, 17 May 2011

யாதும் ஊரே யாவரும் கேளிர்

2011-05-17

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
             - கணியன் பூங்குன்றனார் (புறநானூறு: 192)

ஒன்றாம் உயிர், பல கோடி 'நான்' என எழுந்து, 'நாம்' என்ற நாடகமாகத் தோற்றமளிக்கிறது. நான் தன்னலம், நாம் தந்நலம் (தம்மைச் சார்ந்தவர் நலம்) என விரியும். மேலும், 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்'. அதனினும், 'எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையதாய்' உயர்ந்து, பின் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி...' என்றும் 'கண்ணில் காண்பதுன் காட்சி... ...மண்ணொடு ஐந்தும் வழங்குயிர் யாவுமே அண்ணலே நின் அருள் வடிவாகுமே' என்று விளங்கும்.

இதில் ஒரு காட்சியே (கட்டம்) இப்பாடல்.

எந்த ஊரும் நம்முடைய ஊரே. எவரும் நம் உறவே. நன்மை, தீமை நமக்குப் பிறரால் வருவது இல்லை. நோயும் தீர்வும் அவ்வண்ணமே. உறங்குவது போல் சாவு, தினமும் நடப்பதே. புதியது அன்று. வாழ்வை இனிமை என்பதும் இல்லை; இடர் வரின் கொடுமை என்று வருந்துவதும் இல்லை. 'மின்னும் வான் முகிலின் குளிர்ந்த நீர்த்துளி, அங்கேயே இருக்க இயலாது. பாறைகளை உருட்டும் பெரிய ஆறாக விழுந்து ஓடுவதில் ஒரு தெப்பம் எப்படி ஒழுங்கைமைதியாகச் செல்லுமோ அது போல உயிர் தன் வழிப் படும்' என்பதைக் கண்டு தெளிந்தவர் சொன்னதை அறிந்தால், பெருமைக்காகப் பெரியோரை வியக்க வேண்டியதோ, அதை விடச் சிறுமைக்காகச் சிறியோரை இகழ வேண்டியதோ இல்லை.

All our kin; any town our own;
Good and bad given by none;
By the same source, pain or relief;
Death nothing new, but wrong belief;
Rejoice not, living as bliss;
Suffer not, calling it stress;
Away with such muttering,
Sway not from clear uttering:
Like a raft on roaring river
Life flows drifting for ever;
Knowing thus, the wise eschew
To wonder at, less persecute
The great and the mean.

குடும்பமும் குமுகாயமும்

2011-05-17

வளர்ந்த மேற்கு நாடுகளில் வாழும் ஆசியர்களின் (Asians) வளரச்சிக்கு அவர்களின் குடும்ப விழுமியங்கள் (family values) பெரும் காரணங்களாகக் கருதப்படுகின்றன. அப்படியான குடும்பப் பற்றின் (family attachments) மறுபக்கமே ஆசிய நாடுகளில் குடும்ப ஆட்சிக்கும் வழி வகுக்கிறது.

இன்று குடும்பம் என்று கருதப்படுவது கருக்குடும்பம் (nuclear family - father, mother and their children). கடந்த நூறு ஆண்டுகளிலேயே குடும்பம் என்பது கூட்டுக் குடும்பமாக (joint family), கருக்குடும்பமாக (தனிக் குடும்பம்) மாறி இன்று ஒரு பெற்றோர் குடும்பம் (single parent family), உடனுறைக் குடும்பம் (co-habiting), தனிநபர் குடும்பம் (singles) என்று தேய்ந்தும் திரிந்தும் வருகிறது.

ஒரு வகையில் அந்தந்தக் காலக் கட்டக் குடும்ப வலையில் சிக்காதவர்களே (பெருந்தலைவர் காமராசர், அம்மையார் ஜெயலலிதா போல்) சமுதாயத்தின் ஆட்சி, அதிகாரப் பொறுப்பில் வர வேண்டும் என்று சட்டம் வைத்துக் கொண்டால் ஓரளவு நன்மை பயக்கலாம்; அல்லது குடும்பப் பற்றின் தீய பக்க விளைவுகளைத் தவிர்க்க முயலலாம்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனிதன் அப்போது இருப்பதே (நாட்டின் எல்லை, அரசியல் அமைப்பு, குடும்ப உறவுகள்...) ஏதோ என்றும் இருந்து விடும் என்ற நினைப்பில் மிதக்கிறான். இதுவரை மாறி வந்துள்ள குடும்பத்தின் வடிவம் இனியும் மாறத்தான் போகிறது. எப்படி மாறும் என்பது உற்பத்தி உறவுகள் எப்படி மாறும் என்பதைப் பொறுத்து உள்ளது என்று மார்க்சியத்தின் அடிப்படையில் சொல்வார்கள்.

அது மக்கள் தொகைப் பெருக்க நெருக்கடியாலும் மாறலாம். இயற்கை வளங்களின் (தண்ணீர், மூலப் பொருள்கள்...) பற்றாக்குறையால் வரும் நெருக்கடியாலும் மாறலாம். இவற்றால் வரும் பெரும் போர்களால் அதன் அழிவுகளால் மாறலாம். அதே போல் இயற்கைப் பேரழிவுகளால் மாறலாம். இத்தகைய ஆபத்து, விபத்துகளுக்கு மறுபக்கமாக மனித உறவுகள் மாற வழி வகுக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியால் மாறலாம்.

பெண்-ஆண் உடலுறவு இல்லாமல் செயற்கை முறையில் கருத்தரிப்பது இன்று நடக்கிறது. இணைய வளர்ச்சிகள் (mobile phones, email, net-forums, net-groups, social sites...) முகம் பாரா உறவுகள், அருவப்புல (virtual) உறவுகள் வளர வழி வகுத்துள்ளன. இன்று கண், காதுகளுக்கு விருந்தளிக்கும் கணினி தொழில் நுட்ப வளர்ச்சிகள் விரைவில் மற்ற புலன்களுக்கும் (தொடுதல், முகர்தல், சுவைத்தல்) இன்பமளிக்கும் வண்ணம் வளர்ந்து வருகின்றன. இளமை குன்றா இயந்திர மனிதனின் துணை (பெண், ஆண் இருபாலோருக்கும்) எதிர்காலத்தில் அமையலாம். இயந்திர, உயிரியல் மாற்று உறுப்புகளால் நாமும் இளமை குன்றாது வினை புரியலாம்.

தேவைக்கேற்ப அடிமை மனிதர்கள் (slave humans) வடிவமைக்கப் பட்டு (genetically designed), செயற்கை முறையில் கருத்தரிக்கப் பட்டு, வாடகைப் பெண்களால் கரு சுமக்கப் பட்டு, மருத்துவத் தொழிற்சாலையில் பிரசவிக்கப் பட்டுப் பிறகு பண்ணையில் வளர்க்கப் பட்டு, பருவத்தில் பயன்படுத்தப் பட்டு, பயன் முடிவில் மறு சுழற்சிக்கு உள்ளாக்கப் படலாம். இன்று நடப்பதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. நேரடியாக நடக்காமல் மறைமுகமாக நடக்கிறது, அவ்வளவு தான்.

வளர்ந்த நாடுகளில் உணவு உற்பத்தி பெருந்தொழில் மயமாகி விட்டது போல் உணவு சமைத்தல் என்பதும் பெருந்தொழில் மயமாகி விட்டது. சமைத்த உணவை வாங்கி வந்து சூடு செய்வது தான் பெரும்பாலோருக்குத் தெரிந்த சமையல் கலை ஆகி வருகிறது. இன்று கட்டப்படும் பல அடுக்கு மாடி வீடுகளில் சமையலறைச் சுருங்கித் தேய்ந்து வருகிறது. அந்த இடத்தைப் பெரிய தொலைக்காட்சி அடைத்து வருகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவை வளரும் நாடுகளிலும் இன்னும் அரை நூற்றாண்டுக்குள் பொதுவாகி விடலாம்.

குடும்பம் இன்றைய வடிவில் ஒட்டு மொத்த சமுதாய நலனுக்கு உதவியாக இருப்பதாகத் தெரியவில்லை. நாள் தோறும் ஒரு பில்லியன் மக்கள் பட்டினியுடன் படுக்கிறார்கள் என்பதிலிருந்து வறுமை, பற்றாக்குறை, வேலையின்மை... புள்ளி விவரங்கள் வரை இன்றையக் குடும்ப வடிவம் மனித உயிரினத்தைச் சரியான வழியில் நடத்திச் செல்வதற்குச் சான்றுகளாக‌ இல்லை. அவரவர் சம்பாதித்த (திருடிய) பணம், சொத்துகளைப் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல முடியாது என்று ஒரு சட்டம் செய்தால் கூடப் போதும், இன்றைய குடும்பப் பற்றின் தீய பக்க விளைவுகளைக் கணிசமாகக் கட்டுப் படுத்தலாம்.

வருங்காலத்தை கணிப்பது சுலபமன்று என்றாலும் நிகழ்காலம் எந்தெந்த திசைகளில் இழுக்கப் பட்டுக் கொண்டுள்ளது என்று ஓர் அளவு சொல்லக் கூடும். அப்படியான‌ திசைகளில் ஒன்றிலேனும் குடும்பம் உருப்படுவதாகத் (உருக்குலையாமல் இருப்பதாகத் - surviving) தெரியவில்லை. எல்லோரும் குமுகாய மாற்றத்தை விரும்புகிறோம். ஆனால் குடும்ப மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறோமா?