Wednesday, 11 October 2023

சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாத்திகம்

 

2023-Oct-11

சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாத்திகம் 

பரிதி:  (தொல் முன்பு எழுதியது குறித்துப் பின்னூட்டம்)

>>>
இவ்வுலகில் நாம் காணும் இன்ப துன்பங்களை எப்படி அணுகுகிறோம் என்பதே மாற வேண்டும். அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு ஒரு உணர்ச்சியும் செயலும் இல்லாமல் யாராலும் விலங்குகள் போல் வாழ முடியாது.
<<<
👌🏽

>>>
கடவுள் நமக்கு சிந்திக்கும் திறனைக் கொடுத்துள்ளார் என்றால் அதைப் பயன்படுத்தத்தான். அதைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாத்திகம் ஆகும்.
<<<
🤔

தொல்:

இங்கு கடவுள் என்பது இயற்கையையே குறிக்கும், என் கருத்தில். இயற்கையும் இறைவனும் ஒன்றே.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தக்கவாறு நான் அச்சொல்லைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

ஆத்திகர்கள் அனைவரும் கடவுள் என்றால் என்ன என்று ஒரே கருத்தைக் கொண்டிருக்கவில்லை. சிலர் முருகன், சிவன்... போன்ற உருவத்தில் கடவுள்(கள்) இருப்பதாக நினைக்கிறார்கள். சிலர் அவை நாம் உருவாக்கிய உருவங்களே என்றும் அவை அடையாளங்களே, குறியீடுகளே என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்.

நம் கருத்தைப் பிறர் சிந்திக்க வைக்க உதவக் கூடிய‌ எந்த உபாயத்தையும் பயன்படுத்தலாம். ஆனால் அதைத் தந்திரமாகவோ, மேதாவித்தனமாக இல்லாது பிறர் நம் திறந்த மனத்தை, நம் கருத்துகளிலும் தவறுகள் இருக்கலாம் என்று நாம் உண்மையில் நினைப்பதை உணரும் வகையில் இருந்தால் தான் பயன் விளையும்.

பெரியார் கூட வறட்டுப் பிடிவாதமாக இல்லாமல், கடவுள் நேரில் வந்தால், ஒப்புக் கொள்கிறேன் என்றே சொன்னார்.

ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், தன்னுடைய சமன்பாட்டிற்கும் கடவுளுக்கும் போட்டி என்றால், தன் சமன்பாடே சரி என்றார். அதாவது ஒரு வகையில் பிடிவாதம் செய்தார்,அவர் அறிவியல் என்பது பல தவறுகளைச் செய்து ஒப்புக் கொண்டு மாறி வருவது என்பதையும் அறிந்திருந்தும் கூட.

பரிதி:

இந்தக் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால் என் ஐயம் இதுவன்று. (நான் விளக்கியிருக்கவேண்டும். மன்னிக்கவும்!)

எனக்கு இது என்னவென்று புரியவில்லை:
"சிந்திக்கும் திறனை...ப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாத்திகம் ஆகும்"


தொல்:

கடவுள் தந்த கைகளை, கால்களைப் பயன்படுத்தாவிட்டால் வாழ முடியுமா? 

கைகளையும் கால்களையும் பயன்படுத்தி, வளர்த்து, பலமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறோமே.

கடவுள் நம்மைப் படைத்தார் என்று எண்ணுபவர்கள் நமக்கு சிந்திக்கும் தன்மையையும், ஆய்வு செய்யும் ஆர்வத்தையும் அவற்றை அதே போல் பயன்படுத்தி, வளர்த்துக் கொள்ளத்தான் கொடுத்துள்ளார் என்று உணரலாமே. அதை விடுத்து, சொல்வதை அப்படியே நம்பினால் போதும் என்றால் அந்தத் தன்மைகளை (குணங்களை) நமக்குக் கொடுத்திருப்பாரா?

கைகளை முறுக்குவது போல் உடல் உள்ளுறுப்புகளை முறுக்க முடியுமா? ஆக, நம்மால் செய்யக் கூடியதையும் செய்ய இயலாததையும் இயற்கை / இறைவன் வகுத்து உள்ளது அவற்றை அப்படி அப்படிப் பயன்படுத்தத்தானே?

செய்யும் தொழிலே தெய்வம்
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (கர்ம யோகம்)

எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் சிந்தனையைக் கிளறுவ‌தற்கு, நான் நாத்திகம் என்பதற்குப் புது வரையறை கொடுக்கின்றேன். அதே போல் பகுத்தறிவாளர், சமத்துவ நோக்குடையவர்களிடம் மெய்யுணர்தல் என்பதைப் பயன்படுத்துகிறேன்.

கடவுளின் படைப்பைச் சரியாக வளர்த்துக் கொண்டு பயன்படுத்துவதே உண்மையான ஆத்திகம் (கடவுளை வழிபடுதல்). அதைப் புறக்கணிப்பது தான் 'கடவுளை நம்பாத' நாத்திகத்தை விட மோசமான நாத்திகம் (கடவுளை அவமதித்தல்).

நான் ஆன்மீகத்தைப் (அதாவது மெய்யுணர்வு, நிறுவன மதங்கள் அல்ல) படித்துக் கேட்டுப் புரிந்து கொண்ட அளவில், அது ஆன்ம விசாரணை (வினா எழுப்பி விசாரித்தல், ஆய்வு செய்தல்) என்று தான் எல்லா இடங்களிலும் (ஆன்மீக வணிகர்களைத் தவிர்த்து) சொல்லப் பட்டுள்ளதே தவிர ஆன்ம நம்பிக்கை என்று சொல்லப்படவில்லை.

இறை வழிபாடு இறை ஆராய்ச்சிக்கு (மெய்யுணர்தல்) வளர வேண்டும். ஆனால் இறை வழிபாடு வெறும் சடங்கு, விழா... போன்ற நிலைகளில் முடங்கி விடுகிறது.

அதே போல் பகுத்தறிவு என்பது இறை மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு... போன்ற நிலைகளில் முடங்கி விடுகிறது. அதற்குப் பதிலாக அது மேலும் வளர்ந்து உள்ளதை உள்ளபடி உணரும் மெய்யுணர்வாக முதிர்ச்சி அடைய வேண்டும். 

இரண்டிற்குமே கேள்வி கேட்பதைப் பாதியில் (நமக்கு ஏற்கனவே உள்ள கருத்துகளுக்கு முரண்படும் போது) நிறுத்தி விடக் கூடாது.

மெய்யுணர்வு என்பது மிக எளிமை. உள்ளதை உள்ளபடி உணர்தல். அதாவது எந்தக் கருத்துக் கண்ணாடியும் (conceptual lens) இல்லாமல் இருப்பை உணர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்து, ஊகித்து, உள்ளுர்ணதல். இதற்குப் பொது அறிவு, அறிவியல், அனுபவம், தத்துவம்... எல்லாம் பயன்படும்.

அதற்குக் கடவுளை நம்புவதும் தேவையில்லை. நம்பாமையும் அவசியமில்லை. அவை இரண்டும் மற்றவை போன்ற‌ கருத்துக் கண்ணாடிளே என்பதை விசாரணையின் ஒரு கட்டத்தில் தெரிந்து கொள்ளும் வரை. 

ஒத்த கருத்துடைவர்களே ஒவ்வொரு பக்கத்திலும் (பகுத்தறிவாளர்கள், மதவாதிகள், சாதிப் பற்றாளர்கள், சமத்துவ விரும்பிகள்...) அவரவர்களுக்குள் பேசிக் கொண்டு இருந்து என்ன பயன்? 

நாம் மாற்றுக் கருத்துள்ளவர்களிடம் எப்படி நம் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதற்கு நாம் முதலில் மாற வேண்டும். பிறர் கருத்துகளையும் பொறுமையுடன் கேட்டுப் பழக வேண்டும். ஆனால் ஒத்த கொள்கையுடைவர்களிடையே கூட அக்கொள்கை சார்ந்த சிற்சில கருத்து வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ளும் பண்பு ஊறவில்லை. ஆக, நல்ல கொள்கைகள் மட்டும் போதாது. நல்ல பண்புகள் அவற்றை விட அவசியம், முக்கியம். இதையும் பிறர் சிந்திக்க வேண்டிப் பகிர்ந்து கொள்கிறேன். நான் நினைப்பதே சரி என்று அன்று.

பரிதி:

இப்போது புரிகிறது. நன்றி!

ஆம், ஒத்த கருத்துள்ளவர்கள் தமக்குள் பேசி உடன்பட்டுக்கொள்வது போதாது; மாற்றுக் கருத்து உள்ளவர்களுடன் பேச வேண்டும்.