Monday, 1 November 2021

தத்துவம் - தர்க்கம் - அறிவியல் - பொது அறிவு - மெய்யுணர்வு

தத்துவம் - தர்க்கம் - அறிவியல் - பொது அறிவு - மெய்யுணர்வு


26-Oct-2021


தத்துவம் சரி தவறு என்ற வரையறைக்குள் வாதிடுவது. அதற்குத் தர்க்கம் பயன்படும்.

 

அறிவியல் என்பது பரிசோதனையில் நிரூபிக்க அல்லது பொய்ப்பிக்கப் படுவது.

 

ஆனால் மெய்யுணர்வு என்பது தத்துவம் அன்று; தர்க்கமும் அன்று. அறிவியலும் அன்று. பொது அறிவும் அன்று

 

ஆனால் மெய்யுணர்வு உண்மையைச் சுட்டிக் காட்டத் தத்துவம், தர்க்கம், பொது அறிவு, பரிசோதனை அறிவியல், கருதுகோள் அறிவியல், இலக்கியம், புராணம், இதிகாசம், நகைச்சுவை, கிண்டல், கேலி, விளையாட்டு... என எல்லாமும் பயன்படுத்தப்படும். 

 

மேலும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை, எதிரானவை கூடப் பயன்படுத்தப்படும்.

 

மெய்யுணர்வின் நோக்கம் சரி, தவறு போன்ற இருமை வரையறைகளைத் தாண்டி, அவை எழும் இரண்டற்ற‌ பின்புலத்தைச் சுட்டிக் காட்டுவதே. அதுவே நம் ஒவ்வொருவரின் உண்மை இருப்பு (சுயம்) என்பதை உணர்ந்து கொள்ள உதவுவதே. 'நான்' என்ற பிறவற்றிலிருந்து தூண்டித்த பிரிவினை உணர்வின் பொய்மையைப் புரிந்து கொள்ள உதவுவதே.

 

சுட்டிக் காட்டப்படுவது என்னவென்றால், எங்கிருந்து அவ்விதம் சுட்டிக் காட்டப்படுவது (மற்றும் எல்லாமும்) எழுகின்றது என்பதே.

 

அதனால் வழக்கமான படிப்பு, கேள்வி பதில், சிந்தனை ஆராய்ச்சியில் தொடங்கினாலும் மெய்யுணர்வுத் தேடல், அவற்றில் மட்டுமே நிற்கும் வரை தடைப் பட்டுத் தேங்கி விடும். மேலும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வதாகத் தோன்றும். 'நீ இல்லை' என்றும் அதே சமயம் 'நீயே எல்லாம்' என்றும் பிதற்றுவதாக இருக்கும். மாயை என்பதே ஒரு மாயை என்று வாய்க்கு வந்தபடி உளறுவதாகவும் குழப்புவதாகவும் படும்.

 

நீளத்தை அளக்க கிலோ கிராம் அலகைப் (unit of measure) பயன்படுத்த மாட்டோம். வெப்பத்தை அளக்க மீட்டர் அலகைப் பயன்படுத்த மாட்டோம்.

 

அதே போல், தத்துவத்தின், தர்க்கத்தின், பரிசோதனை அறிவியலின்... அலகுகளைக் கொண்டு மெய்யுணர்வு உண்மையை சரி / தவறு என்று அளக்க முடியாது.

 

மெய்யுணர்வு உண்மையின் அலகு / சான்று மெய்யுணர்வே தான்.

 

அப்படியென்றால் ஏன் தத்துவம், தர்க்கம், அறிவியல் போன்றவை மெய்யுணர்வுத் தேடலில் பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்வி எழும். அவை ஏற்கனவே உள்ள நம்பிக்கைகளை அசைப்பதற்கும் அவற்றின் அனுமான அடிப்படைகளை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

 

கீழ்க்கண்டது போல் ஒப்புமை, உவமைகளுக்காகவும் அவை பயன்படுத்தப் படுகின்றன.

 

கடற்கரையில் இருந்து பார்க்கும் போது கரையை விட்டுச் செல்லும் கப்பலின் அடிப்பகுதி முதலிலும் அதன் பாய்மரம் கடைசியிலும் மறைகிறது. கரையை நோக்கி வரும் கப்பலின் பாய்மரம் முதலிலும் அடிப்பகுதி கடையிலும் தெரிகின்றது.

 

இந்த தரவைக் கொண்டு பூமியின் மேற்பரப்பு வளைந்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவது போல், மெய்யுணர்விலும் தர்க்கம், தத்துவம் எனப்பல வழிகளில் சுட்டிக் காட்டப்படுவதை உய்த்து உணர (அப்படி உணருவதே அது) வேண்டும்.

 

அதே சமயம் கீழ்க்கண்ட உவமைகளால் அறிவுணர்வுப் பின்புலத்தை உய்த்துப் புரிந்து கொள்ளலாம்.

 

கட்புலன் இருப்பதற்குச் சான்று காண்பது. செவிப்புலன் இருப்பதற்குச் சான்று கேட்பது. இது போல் மற்ற புலன்களுக்கும்.

 

எதையும் காணாவிடில் கட்புலன் இல்லை என்று ஆகி விடாது. எதையும் கேட்காவிடில் செவிப்புலன் இல்லை என்று ஆகி விடாது. அப்புலன்கள் இருக்கவே செய்யும்.

 

அதே போல் அறிவுணர்விற்குச் சான்று அறிவது. எதையும் அறியாத போதும் (கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில், மயக்கத்தில்...) அறிவுணர்வு இருக்கவே செய்யும்.

 

அதே போல் பயன்படுத்தப் படும் மற்றோர் உத்தி தோற்ற இருப்பு / மாயை (as-things-appear), உண்மை இருப்பு (as-things-really-are) என்ற பிரிவு ஆகும். தேடலின் முதல் கட்டங்களில் ஏற்கனவே உள்ள நான், உலகப் பார்வைகளின் கதைத் தன்மையை உணர்த்த அப்பிரிவு பயன்படுத்தப்பட்டாலும் தேடலின் இறுதியில் அப்பிரிவும் பொய்யே (அதாவது உள்ள இருப்பு ஒன்றே, அதுவே தோற்றமாகவும் அத்தோற்றத்திற்கு அப்பாற்பட்டதாகவும் ஒளிர்கிறது) என்று உணர்ந்து கொள்வதில் வந்து முடியும்.

 

அடுத்து இதை உணருவதால் என்ன பயன், உணராவிடில் என்ன நட்டம் என்று கேட்கலாம்.

 

இதை உணர வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உணர்ந்தாலும் உணராவிடிலும் உள்ளது உள்ளபடியே உள்ளது.

 

பயன் / நட்டம் என்பன தோற்றத்திற்குள் உள்ள கருத்துகள். அவை அப்படியானவை (தோற்றத்திற்குள் உள்ள கருத்துகள்) என்று உணர்வதே அதன் பயன் என்றும் அப்படி உணராததே நட்டம் என்று ஒரு வகையில் சொல்லலாம்.

 

தங்கத்தின் மதிப்பு என்று தனியாக எதுவும் இல்லை. மனிதர்களிடம் மட்டுமே தங்கத்திற்கு மதிப்பு உண்டு. மனிதர்களிலும் 'நாகரிக' சமுதாயத்தோடு தொடர்பற்ற‌ வேட்டையாடி வாழும் காட்டு வாசிகள் சமூகத்தில் அதற்கு மதிப்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை.

 

அதே போல் அன்றாட வாழ்வில் ஒரே சமுதாயத்திற்குள் ஒரு குழுவினருக்கு முக்கியம் என்று படுவது பிற குழுவினருக்குப் படுவதில்லை.

 

அதே போல் மெய்யுணர்வுப் புரிதல் எல்லோருக்கும் முக்கியமில்லை என்றும் சொல்லலாம்.

 

என்றாலும் எல்லாக் குழுவினரும் முக்கியம் என்று கருதுபவையும் (சாலை விதிகள் போன்றவை) உள்ளன.

 

சாலை விதிகள் முக்கியம், பயனுடையவை என்று எல்லோரும் கருதினாலும் அதைப் பின்பற்றுவதில் பெரும்பாலோர் கவனம் செலுத்தினால் தான் அதன் பயன் கூடும்.

 

அந்த வகையில் மெய்யுணர்வுப் புரிதல் எல்லோருக்கும் முக்கியம் இல்லை என்றாலும் எல்லோரும் (சமுதாய அளவில்) அதனால் (அது வாழ்வின் வளர்ச்சி, முதிர்ச்சிக் கட்டத்தில் பரவலாக வரவில்லை என்றால்) பாதிக்கப்படுவதால் (நட்டம்) கணிசமானோர் அதைப் புரிந்து, உணர்ந்து, பின்பற்றி வாழும் போது அதன் முக்கியத்துவம் பயன் கூடும். ஆனால் அது பக்கவிளைவே தவிர, மெய்யுணர்விற்குப் பொருட்டன்று. மெய்யுணர்விற்கு மெய்யுணர்வே பயன்.