Thursday, 31 December 2020

பற்றற்ற பணி

பற்றற்ற பணி

2020-12-25

நண்பர் ஜெயரஞ்சனுக்கு அனுப்பியது:

தங்களுடைய எல்லாப் பதிவுகளையும் கேட்க இயலுவதில்லை. தங்களின் மேற்கண்ட பதிவைக் கேட்டேன்.

பெரியார் போன்றவர்கள் பற்றற்ற நிலையில் இருந்து ஒரு யோகி / துறவியைப் போல செயல்பட்டதால்தான் அவர்களால் அத்தகைய தொண்டை அவ்வளவு எதிர்ப்பு, ஏமாற்றங்களுக்கு இடையிலும் செய்ய முடிந்தது.

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு (திருக்குறள்: 266)

'கடைமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் வாசகத்திற்கும் மேற்கண்ட குறளுக்கும் ஒற்றுமை உள்ளது. கீதை மொழியை 'வர்ணாசிரம சாதித் தொழிலைச் செய்யச்' சொல்வதாகவும் பயன்படுத்தலாம். அது எதிர்க்க வேண்டியது

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (திருக்குறள்: 1028)

குடி (சமுதாய) மானத்தைக் காக்க உழைப்பவர்கள் தன்மானத்தைக் கருதினால் பணி சிறக்காது; கெட்டு விடும்.

சமுதாயப் பணி செய்பவர்கள் நன்றியை எதிர்பார்க்கக் கூடாது என்று பெரியார் சொல்லியுள்ளார்.

பெரியார், காந்தி, வள்ளலார் போன்ற பலர் அப்படிபட்டபற்றற்ற நிலையில் அதே நேரத்தில் அளவுகடந்த பொறுப்புணர்வுடன் உழைத்ததால் தான், அவர்களின் வாழ்க்கை நம் போன்றவர்களைத் தூங்க விடாமல் உலுக்கி முடிந்ததைச் செய்ய உந்துகிறது.

காந்தியை ஒரு பேட்டியில், உலகிற்கு உங்கள் தூதுரை என்ன‌ What is your message to the world (ஏனென்றால் அவர் மகாத்மா அல்லவா) என்று கேட்ட போது அவர், 'என் வாழ்க்கைதான் என் தூதுரை My life is my message' என்று சொன்னார்.

பெரியாரும் தனக்குப் பிறகு தான் எழுதியவையும் பேசியவையுமே தன் வாரிசுகள் என்று சொல்லியுள்ளார்.

நாம் அடிமைப்படுத்தப்படுபவர்களுக்கு ஆதரவாக‌, ஆதிக்க வாதிகளுக்கு எதிராக உழைக்கிறோம் என்பதை விட அடிமை, ஆதிக்க மனப்பான்மைகளுக்கு எதிராக உழைக்கிறோம் என்று புரிந்து கொண்டால் நல்லது. Given half a chance (most of) the individuals will change side.

தீயவனை வெறுக்காமல் தீமையை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று காந்தியடிகள் சொல்லியுள்ளார்.

அந்தப் பார்வையில் நாம் மனிதர்களின் இயல்புக்கு எதிராக அதை முன்னேற்ற முயல்கிறோம். அப்படி முயல்வதும் மனிதர்களின் இயல்பே. புத்தர், வள்ளுவர் முதற்கொண்டு இப்பணி தொடர்ந்து வருகின்றது.

அறிவார்ந்த சிந்தனைகளை மக்களிடம் கணிசமான அளவுக்கு (பெரும்பான்மையாக என்றைக்கும் இயலாது) அவர்கள் பழக்கமாக, வழக்கமாக, பண்பாக உருவாக்குவது என்பது பெரியார் சொன்னது போல், 'மயிரைக் கட்டி மலையை இழுக்கும் வேலை'.

"பலர் சிந்திப்பதை விடச் சீக்கிரம் செத்துப் போகத் தயாராக உள்ளார்கள்; உண்மையில் அப்படிச் செத்துப் போகவும் செய்கிறார்கள்"
- பெட்ராண்ட் ரஸ்ஸல்
"Many people would sooner die than think. In fact they do"
- Bertrand Russell

இதை அரசியல் சட்டத்தின் மூலம் செய்ய இயலாது. எனவே தான் பெரியார் வாக்கு அரசியலுக்குச் செல்லவில்லை. தன் இயக்கத்திற்கு 'நாத்திக இயக்கம்' என்று பெயரிடவில்லை; 'திராவிட இயக்கம்' என்று பெயரிடவில்லை; 'தமிழ்த் தேசிய'ப் பெயரிடவில்லை. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்றே பெயரிட்டார். ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்கப் பழக வேண்டும் என்பதே அவரின் அடிப்படையான இலக்கு; பணி. அறிவுக்கு விடுதலை தா என்பதே அவர் முழக்கம்

மற்றபடி தமிழ், திராவிடம், ஆதிக்க, அடிமை மனப்பான்மை எதிர்ப்பு, கடவுள், மத, சாதி எதிர்ப்பு என்பதெல்லாம் அதை நோக்கி அந்தந்த சூழலுக்குத்தக (சமயங்களில் முன்னுக்குப் பின் முரணாகக் கூட) மேற்கொண்ட நடைமுறை உத்திகளே

எடுத்துக்காட்டாக, கடவுள், மத எதிர்ப்பு, நாத்திகம் என்பது சாதியைக் கடவுள், மதத்தைக் கொண்டு நியாயப்படுத்துவதை உடைக்கவே ஆகும். அதனால், ஒரு புறம் கடவுள் சிலையைப் போட்டு உடைத்துக் கொண்டே, மறு புறம் கோயில் நுழைவு உரிமைப் போராட்டமும் நடத்தினார்.

அறிவார்ந்த சிந்தனை என்பது உயர் ஆற்றல் நிலை. Rational thinking is high energy state. நம்புவது எளிது. It is easy to believe.

எனவே பலரால் (பெரும்பான்மையோரால்) அறிவார்ந்த சிந்தனை என்பது இயலாது. ஆனால் கணிசமானவர்களால் இயலும். சிக்கல் என்னவென்றால் தொடர்ந்து உழைப்பு கொடுக்காவிடில் அது சறுக்கி வழுக்கி விடும் என்பதே வரலாறு காட்டும் பாடம். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

இது முதலில் நம் ஒவ்வொருவரும் நம்மீது செய்து கொள்ள வேண்டிய உண்மை வேள்வி (சத்திய சோதனை).

வெறும் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு கடவுள் கதைகளைக் கிண்டல் செய்வதால் பகுத்தறிவுவாதி ஆகி விட மாட்டோம். அதே போல் சிவப்பு சட்டை போட்டுக் கொண்டு பொதுவுடைமை பேசி விடுவதால் நம் தன்முனைப்பு குறைந்து விடாது; பொருள், புகழ் பற்று கரைந்து விடாது.

நாம் பிறருக்கு பொருள் உதவி செய்ய முதலில் நாம் அதை ஈட்டினால் தான் முடியும்; தொடர்ந்து ஈட்டிக் கொண்டே இருந்தால் தான் முடியும். அறிவும் சிந்திக்கும் முறையும் அதே போல்தான்.

நாம் பிறருக்குச் சொல்லும் போது நமக்குப் பிறர் சொல்லிச் சென்றுள்ளதை நாம் தொடர்ந்து படித்து, சிந்தித்து, விவாதித்து நம்மை வளர்த்து செம்மைப்படுத்திக் கொண்டால், நாம் தொய்வில்லாமல் தொடரலாம்; உழைப்பு, உற்சாகம் கொடுக்க கொடுக்க நம்மிடமிருந்து வந்து கொண்டே இருக்கும்.

இவை உங்களுக்குத் தெரியாதவை அல்ல. இவை அறிவுரைகளோ அறவுரைகளோ அல்ல. எனக்கு நானே சொல்லிக் கொள்வதை நட்பு முறையில் பகிர்ந்து கொள்கிறேன். இவை நம்மைப் போன்றவர்கள் அடிக்கடி நமக்கு நாமே (சத்துள்ள உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது போல்) நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்; அந்த அவசியத்தை உணர்வது, ஒப்புக் கொள்வது, செயல்படுத்துவது என்பதே இது.

முற்போக்கு மாற்றங்களுக்குத் தேவையான சமூக ஆதரவு மூலதனம்
Social Support Capital for Progressive Changes

முற்போக்காளர்கள் (கம்யூனிஸ்டு, பெரியாரிஸ்டு...) அனுமானித்துக் கொள்வது போல் மக்களிடம் பரவலாக, பெரும்பான்மையாக சமூகநீதி சமத்துவ உணர்வு இல்லை என்றே (நான் படித்துப் புரிந்து கொண்டு அளவில்) தோன்றுகிறது. அத்தகைய உணர்வு (வாய் வார்த்தையாக இல்லாமல் ஒரு அடிப்படையான பண்பாட்டுக் கூறாக இருக்க வேண்டும்; ஆனால் அப்படியும் இல்லை; நிச்சயமாக உயிரியல் கூறாகவும் இல்லை). இல்லாததால், தனக்கு/தன்னைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் வரை ஒரு நியாயமும் நீதியும் பேசுகிறோம்; நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைத்த பிறகு 'எல்லோரும் பல்லக்கில் ஏற ஆசைப்பட்டால் யார் தூக்குவது' என்று வேறு நியாயம் நீதி பேசுகிறோம்; செயல்படுகிறோம்.

மனிதாபிமானம் மனித நேயம் என்ற அளவுக்கு அப்பால் சமத்துவ சமூக நீதி உணர்வு என்பது பரிணாம வளர்ச்சி அடிப்படையில் ஆழமாக நிலை கொள்ளவாய்ப்போ, வழியோ, அவசியமோ இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் இவ்வுணர்வும் அதனால் அமையும் அமைப்பும் நிலைக்க முடியாமல் திணறித் திண்டாடுகின்றது. அதனால் நாம் மனத்தளர்ச்சி அடையத் தேவையில்லை. அநியாயம், அநீதி, ஓரவஞ்சனை, ஆதிக்க அராஜகங்கள் போன்ற உணர்வுகளும் அதனால் அமையும் அமைப்புகளும் வரலாற்றில் நிலைக்க முடியாமல் மீண்டும் மீண்டும் விழுந்து சிதைந்துள்ளன என ஆறுதல் அடையலாம்.

மேற்கண்டது அறிவியல் பார்வை. ஆனால் சமுதாய அறிவியல் (sociology) இயல்பியல் அறிவியல் (physics) போல் வளர்ந்து விடவில்லை; வளருமா என்பதும் ஐயமே.

அதனால், நிலவுக்கு மனிதனை அனுப்பிப் பாதுகாப்பாகத் திரும்பச் செய்வது போல், சமுதாயப் போக்குகளை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே காரணத்திற்காக, எது சாத்தியம் சாத்தியமில்லை என்பதும் (நியூட்டன் விதிகளின் உறுதி போல்) உறுதி இல்லை. நாம் கொடுக்கும் உழைப்பைப் பொறுத்து எந்தக் கருத்தையும் வலிமையான ஆற்றலாக மாற்றலாம். அக்கருத்து முற்போக்காகவோ, சமூகநீதிக் கண்ணோட்டத்தோடோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

மக்களின் உணர்வுகளைத் (முக்கியமாக சுயநலம், பேராசை, வெற்றுப் பெருமை...) தூண்டுவது சுலபம். அறிவைத் தூண்டுவது கடினம்.

ஆனால் பெரியார் (அவருக்கு முன் இருந்தவர்களும், அவர் காலத்தில் பலரும்) அந்தக் கடின வேலையைத் தன் அயராத, உண்மையான, நன்றியை எதிர்பாராத, பலனில் ஆசைப்படாத, புகழுக்கு, பதவிகளுக்கு அடிமையாகாதஉழைப்பால் ஓரளவுக்குச் சாதித்து 'முற்போக்கு மாற்றங்களுக்குத் தேவையான சமூக ஆதரவு மூலதன'த்தை உருவாக்கினார்.

சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட அங்கீகரிப்புக்கு முன்பே நடந்தன. இது போன்ற சமூக மாற்றங்களில் அரசுச் சட்டம் பின்னால் தான் வரும். அந்த இடமே (மக்கள் கருத்தை உருவாக்குவது; அவர்கள் சிந்தனை மாற்றுவது) நாம் வேலை செய்ய வேண்டிய இடம் என்பதில் பெரியாருக்கு இருந்த தெளிவுடன் அந்தப் பணி தொடர்ந்து நடைபெறவில்லை.

இன்று தமிழ்நாட்டில் திருமண அழைப்பிதழில் தவிர யாரும் தன் பெயருக்குப் பின் சாதி பின்னொட்டைப் போட்டுக் கொள்வதில்லை என்பது அரசுச் சட்டத்தால் வந்த மாற்றம் இல்லை. அதைப் பின்பற்றும் இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்குப் பெரியாரைப் பற்றியோ, திராவிட இயக்கத்தைப் பற்றியோ தெரிந்து கூட இல்லாமல் இருக்கலாம்.

பெரியார் போன்றவர்கள் சேகரித்து வைத்த முற்போக்கு மாற்றங்களுக்கான சமூக ஆதரவு மூலதனம் இல்லாமல் வெறும் சட்டம் செய்து மாற்றங்களை கொண்டு வந்து விட முடியாது.

அந்த மூலதனத்தை இதுவரை வந்த ஆட்சி அதிகாரப் போட்டியில் திராவிடக் கட்சிகள் செலவளித்த அளவுக்கு வளர்க்கவில்லை; வளர்ப்பதை ஊக்குவிக்காதது மட்டுமல்லாமல் தங்கள் ஊழல், குடும்ப ஆட்சிச் சர்வாதிகாரத்திற்கு ஆபத்து என்று அதை முடக்கியும் விட்டார்கள். அதற்கு நாம் அனைவரும் மறைமுகமாகவோ நேர‌டியாகவோ துணை போய் இருக்கின்றோம் என்ற வகையில் அதில் நம் பங்கு பழியும் உள்ளது.

இப்போது நாம் மீண்டும் அந்த மூலதனத்தை உழைத்துச் சேகரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

தங்கள் நேரத்திற்கு நன்றி.

 

ஜெயரஞ்சன்:
உண்மையை குட்டி (தலையில்) சொல்வதற்கு நன்றி. நான் பலன் எதிர்பார்க்கவில்லை. ஒயாமல் இவை பற்றியே பேசவேண்டியது குறித்த சோர்வும், அயர்ச்சியும்

தொல்:
நான் உங்களுக்காக மட்டும் எழுதவில்லை; நம்மைப் போன்ற அனைவருக்கும் பொதுவாக எழுதியது. சோர்வும் அயர்ச்சியும் வருவது இயல்பே. பெரியாருக்கே அது வந்தது. அப்போது அண்ணா பெரியாருக்கு, 'எந்த சமூகப்புரட்சியாளரும் தன் வாழ்நாளிலேயே தான் போராடிய மாற்றங்கள் இந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்ததைப் பார்க்கவில்லை' என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்.

 

பெரியாரின் உழைப்பின் பயனைப் பெரியவா நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்; நாம் தான் புரிந்து கொள்ளவில்லை


Subramanian Swamy @Swamy39 - Jan 21, 2020

"Parmacharya also told me to learn from Periyar EVR how one man can change the thinking of crores of people with nothing but ideas."