2012-10-18
கடல் கடந்த மடல் 5
தமிழ்நாட்டு நலம் நாடிகளே!
நலம் நாடுவதில் நம் குறைகளையும் நாடுவதும் அடங்கும். அவரவர்
குற்றம் அவரவருக்குத் தெரிவதில்லை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உலகளாவிய உயர்ந்த சிந்தனைக்குச்
சொந்தக்காரர்கள் என்று ஒரு பக்கம் நாம் பெருமைப்பட்டுக் கொண்டே, மறுபுறும்
மலையாளி, தெலுங்கர், கன்னடர், ஆரியர், வடவர், சிங்களவர்... என
ஒட்டு மொத்த பழி, வெறுப்பு அடையாளக் கூச்சல் இடுகின்றோம்.
அதை நியாயப்படுத்தும் விதத்தில் அவர்களில் சிலர் நடவடிக்கைகளும்
இருப்பதை மறுக்க முடியாது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பழி
சொல்லிக் கொண்டு உழன்று கொண்டு இருக்கின்றோம்.
சுயநலக் கிருமிகளும், சந்தர்ப்பவாதிகளும்,
பரந்த மனமுடையோரும் எல்லாக் குழுக்களிலும் உள்ளனர். ஆனால் பேராசைக் கூத்தாடிகள் கெடுப்பதில் மட்டுமன்று, ஊரார் ஒன்றுபடுவதைத் தடுப்பதிலும் வல்லவர்களாக
உள்ளனர். நல்லவர்கள் வல்லவர்களாக இல்லை. அதனால்
தான், முவ, ‘நல்லவர்களாக மட்டும் இருந்து பயனில்லை, வல்லவர்களாகவும்
இருக்க வேண்டும்’ என்று
வலியுறுத்திச் சொன்னார். வல்லமை என்றால் வன்முறை என்று மட்டும் பொருள் அன்று. நம்மைச் சுலபமாக ஆட்கொள்ளும் உணர்வுகளை (easy emotions) எதிர்த்து
நிற்கும் வலிமை என்றும் பொருள்.
வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது.
நல்ல தன்மை இல்லாத வல்லமை நிலைக்காது.
மொழிகளை
மதிக்கும் முதலாளித்துவம்
19, 20-ஆம் நூற்றாண்டுகளில் சூரியன் மறையாப் பேரரசாக ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கம்
விரிவடைந்து வளர்ந்து இருந்தது. அது 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படிப்படியாகக்
குறைந்து இப்போது 21-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு சில சிறு தீவுகள்
எனக் குன்றி விட்டது. என்றாலும் உலகம் முழுவதும் ஆங்கில மொழியின்
ஆதிக்கம், பயன்பாடு படிப்படியாகப் பெருகி வருகின்றது.
அதிலும் கணினி, தகவல் தொடர்புகளின் (கைபேசி, வலை) அதிவேக வளர்ச்சியால்
ஆங்கில மொழியின் வீச்சு அகிலமெங்கும் ஆழிப்பேரலையாக (சுனாமி)
அடித்து வருகின்றது; அந்தந்த நாடுகளின் தாய்
மொழிகளை அழித்தும் வருகின்றது. ஆங்கில மொழி பயிற்றுவிக்கும்
ஆசிரியர்களுக்கு உலகின் எல்லா கண்டங்களிலும் தேவை கூடி வருகின்றது.
(அதே சமயம் கணினி, தகவல் தொடர்பு வளர்ச்சிகள் எல்லா
மொழிகளுக்கும் ஒரு புத்துயிர், புது சகாப்தம் கொடுத்துள்ளது என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக, இன்று தமிழில் எழுதுவதும்
பரப்புவதும் பெரிய ஊடக, பதிப்பக நிறுவனங்களைச் சாராமல், சாதாரணமானவர்கள்
கூடச் செய்ய முடிகின்றது.)
என்றாலும் இலண்டன் மாநகரப் போக்குவரத்து நிறுவனத்தின் இணைய
தளம் (http://www.tfl.gov.uk/)
ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழ் உள்பட 12 மொழிகளில் உள்ளது.
இலண்டன் பாதாளத் தொடர்வண்டி (underground
train) பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்திலும் (Ticket vending
machine) தமிழ் உள்பட பல மொழிகளில் அறிவிப்புகள் உள்ளன. இங்கு கார் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப் படும் செயற்கைக் கோள் வழி
காட்டியும் (satellite navigator) தமிழில் வழி சொல்கின்றது.
இலண்டனில் ஆடம்பரமான பொருள்கள் விற்கும் பெரிய அங்காடிகள்
வருகின்ற உலகச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, செலவு செய்வதைப்
பொறுத்து அந்நாட்டினரின் மொழியில் அறிவிப்புகளையும் பேசுவோரையும் வைத்துள்ளன.
அப்படி வந்து செலவளிப்பவர்களில் ஆப்பிரிக்க நைஜீரிய நாட்டினர்
கணிசம் என்பதால் அந்த அங்காடிகளில் நைஜீரிய நாட்டு மொழியில்
அறிவிப்புகள் வைத்துள்ளதைக் குறிப்பிட்டுச் சில கிழமைகளுக்கு முன் இங்கு செய்தி
வந்தது.
கருவுற்ற பெண்மனிகளுக்கு உதவும் தாதிகளுக்கான
குறிப்புகளைத் (சில பக்கங்கள்) தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன்.
அதைக் கேட்டவரிடம் பின் விசாரித்ததில் அது மருத்துவமனையில்
பயன்படுத்தப் பட என அறிந்தேன். இந்நாட்டில் மொழி
பெயர்ப்புக்கு என்று மட்டும் செலவிடப்படும் தொகையை விட அந்தக் கரிசனையைப் பாராட்ட
வேண்டும்.
இந்தியாவில் அப்பா வைத்துள்ள கைபேசியில் தமிழில்
பெயர்களைப் பதிவு செய்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் இப்போது
தான் முதலாளித்துவத்தின் சரியான வளர்ச்சி வரத் தொடங்கி உள்ளது போலும். முதலாளித்துவம்
இலாபத்திற்காக மொழிகளுக்குத் தரும் மதிப்பைத் தேசியங்கள் தரவில்லையே. ஆகாஷவாணியை
வானொலி ஆக்கச் சுலபத்தில் முடிந்ததா? ஏர் இந்திய
விமானங்களில் தமிழில் அறிவிக்கின்றார்களா? ஏன்
பெங்களூரில் வாழும் தமிழர் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழுக்கு இடம் உண்டா?
இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மாநகரப் பேருந்துப்
பலகையில் பேருந்து எண்கள் கூடப் பொதுவான எண் வடிவில் (1, 2, 3..) இல்லாமல் அம்மாநில மொழியிலேயே உள்ளன. 'பிறர் உளர் எனும்
நினைவும் பெறல் வேண்டும்' என்று பாவலரேறு
பெருஞ்சித்திரனார் இவர்களை எண்ணித்தான் பாடினார் போலும்.
அட, சோசலிசம்
தான் பரவாயில்லை என்று சொல்ல முடிகிறதா? சோவியத் சோசலிசத்தின் (அது உண்மையான சோசலிசம் இல்லை என்பது
வேறு; அது போல் உண்மையான, தூய்மையான
முதலாளித்துவம் என்றும் எங்கும் இல்லை) வீழ்ச்சிக்கு ரஷ்ய
மொழித் திணிப்பும் ஒரு காரணம் தானே. சீனா, திபெத்திய
மொழியை வாழ விடுகிறதா?
வரலாற்று ரீதியாகப் பிரஞ்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயர்
என்றாலே ஆகாது. சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் நகரத்திற்குச் சென்று இருந்த
போது அங்கு ஆங்கில மொழியில் அறிவிப்புகள் எங்கும் பார்க்க முடிந்தது. இலண்டனில் பிரெஞ்சு மொழியில் அந்த அளவு அறிவிப்புகள் இல்லை. இலண்டனிலிருந்து பாரீஸ் நகருக்குப் பயணம் செய்த தொடர்வண்டியில் முதலில்
ஆங்கிலத்திலும் பிறகு பிரெஞ்சு மொழியிலும் பயண அறிவிப்புகளைச் செய்தார்கள்.
கடலைத் தாண்டிப் பிரான்ஸ் மண்ணில் நுழைந்ததும் முதலில் பிரெஞ்சு
மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பயண அறிவிப்புகளைச் செய்தார்கள். திரும்பி வரும் போது அதற்கு மாற்றாகச் செய்தார்கள். கேட்டுப்
பெறுவது மரியாதை அன்று. தேசியத்தில் கேட்டாலும், போராடினாலும் மரியாதை கிடைப்பதில்லையே. இங்கு
தேசியம் என்பது மனப்பான்மை என்று கொள்ள வேண்டும். எந்த ஒரு
குறிப்பிட்ட அரசு, இனம், இயக்கத்தை
மட்டும் சொல்வதாகாது. 'தேசியம் என்பது குழந்தைப் பருவ நோய்' என்று பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லியுள்ளார்.
முதலாளித்துவத்தில், இலாபம் என்ற ஒரே குறுகிய குறிக்கோளில்
இயங்கும் போது வேறு பல குறுகிய தடைகள் தானாக அடிபட்டுப் போகின்றன. (அப்படிப் போகவில்லை என்றால் அதைத் தடை செய்து கொண்டு இருப்பது எது என்று ஆய்வு செய்ய வேண்டும்). எதைச் செய்தால் நுகர்வோரிடம் சுலபமாகப்
பணம் கறக்கலாம் என்பது ஒன்றே இலக்காகி விடுகின்றது. ஒரு முள்ளை எடுக்க
இன்னொரு முள் தானே உதவுகின்றது.
முதலாளித்துவமோ பிரதிநிதித்துவ மக்களாட்சியோ
அப்பழுக்கற்றவை அல்ல. ஆனால் அவற்றைத் தாண்டிக் குதித்துச் செல்ல
முடியாது. அதன் வழியே சென்று தான் அவற்றை விடச் செம்மையான
ஒன்றை வடிவமைக்க முடியும்; வளர்த்தெடுக்க இயலும். வயதும் வாழ்வும் முன்னால் தான் போக முடியும்; ஒவ்வொரு நொடியாகத் தான் நகர்ந்தாக வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பேரரசு, நாடுகள்
எதுவும் இன்று இல்லை; அல்லது அந்த வடிவில், எல்லையில், அமைப்பில் இல்லை. இன்றைக்கு
ஆயிரம் ஆண்டுகள் கழித்து இன்றுள்ள எந்த தேசிய நாடும் (Nation state) இதே
போல் இருக்க வாய்ப்பில்லை. அது தான் மாற்றம், வளர்ச்சியின் போக்கு. தேசியமும் முதலாளித்துவமும்
நிலையானவை அல்ல. ஆனால் சமுதாய விலங்குகளான மனிதர் என்றும் ஏதோ ஒரு குழு
வடிவில் வாழ்ந்து வருவர். அவ்வடிவிற்கு என்ன பெயர் என்பது
முக்கியமன்று. அது மனிதர் இயல்பில், வாழ்வில்
உள்ள சிக்கல்களை, முரண்பாடுகளை எப்படிச் சந்திக்கப்
போகின்றது என்பதே சவால்.
தமிழ்நாடி.
ஐப்பசி 2, திருவள்ளுவர் ஆண்டு 2043
(18 அக்டோபர் 2012)