2012-07-17
ஆனி 31, திருவள்ளுவர் ஆண்டு 2043 (15 சூலை 2012)
ஆனி 31, திருவள்ளுவர் ஆண்டு 2043 (15 சூலை 2012)
கடல் கடந்த மடல் 3
தமிழ்நாட்டு நலம் நாடிகளே!
நாடும் வீடும் நலம் பெறப் பயன் தரும் செய்திகளையும் சிந்தனைகளையும் நாடுவோம், தேடுவோம். அவற்றைப் பகிர்ந்து கொண்டு செயல்படக் கூடுவோம்.
நாற்காலி மக்களாட்சி
நாடுகளுக்கிடையிலான போட்டிகள் பல விதம். அதில் விமானதளப் போட்டி ஒரு விதம். இலண்டனில் மூன்று பெரிய விமானதளங்கள் இருக்கின்றன. அதில் ஹீத்ரோ விமானதளம் மிகப் பெரியதும் முக்கியமானதாகும். அதைக் கட்டிய காலத்தில் அது இலண்டன் மாநகருக்கு வெளியே இருந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் விமானதளம் விரிவடைந்தது. இலண்டன் மாநகரும் விரிவடைந்து ஹீத்ரோவை விழுங்கி விட்டது. ஹீத்ரோவைச் சுற்றி மக்கள் நெருக்கமான குடியிருப்புகள். சாலைப் போக்குவரத்து நெரிசல்.
விமானதளத்தை மேலும் விரிபடுத்த வேண்டும் என்று ஒரு புறம் கோரிக்கை. ஏற்கனவே அதைச் சுற்றி வாழும் மக்கள் விமான இரைச்சல், போக்குவரத்து நெரிசல், மாசு இவற்றால் அவதிப்படுகின்றனர். அவர்களில் பலர் மேற்கொண்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் படியான எந்த விரிவு திட்டத்தையும் எதிர்க்கிறார்கள். ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு விமானதளத்தின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும், அது அவசியம், இல்லாவிடில் அப்படியான பொருள் வரவு பக்கத்து நாடுகளுக்குப் போய் விடும்; போய்க் கொண்டு இருக்கிறது என்று வாதங்கள் மறுபுறம். எது முக்கியம்? யார் தீர்மானிப்பது?
தேர்தல் வாக்குகளைக் கணக்கிடும் அரசியல்வாதிகள் (மூன்று முக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும்) வழக்கம் போல் வழவழா கொழகொழா செய்கின்றனர். ஒரு பொது மக்கள் விவாதத்திற்கு ஏற்பாடு செய்வதைத் தள்ளிப் போடுகின்றனர்.
'நாற்காலி' மக்களாட்சி என்பது பதவிப் போட்டிக்கான காட்சி. ஆனால் உண்மையான நாற்காலி மக்களாட்சி என்றால் நான்கு கால்களால் நடைபோடும் மக்களாட்சி ஆகும். அவற்றை நான்கு தூண்கள் என்பார்கள். தூண்கள் அசையா. அதனால் நடைபோடும் கால்கள் என்றால் பொருத்தமாக இருக்கும்.
கால் 1: மக்கள் பிரதிநிதிகளால் ஆன அரசு.
கால் 2: அரசு செய்யும் சட்டத்தை நடைமுறைப் படுத்தும் நிர்வாகம்.
கால் 3: நிர்வாகம் சட்டப்படி இயங்குவதை உறுதிப்படுத்தும் நீதி, காவல் துறை.
கால் 4: மேற்கண்ட மூன்றையும் கண்காணித்து மக்களின் கண்களாகவும் காதுகளாகவும் வாய்களாகவும் செயல்பட வேண்டிய ஊடகத் துறை.
இலண்டனில் மாலையில் வெளிவரும் ஈவினிங் ஸ்ண்டார்ட் என்ற நாளிதழ் இந்தச் சிக்கலில்
(விமானதளத்தை விரிவு படுத்துவதா, புதிய விமானதளம் கட்டுவதா, எங்கு கட்டுவது) மக்களாட்சிப் பொறுப்புணர்வுடன் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பொது விவாதத்திற்குத் தன் செலவில் ஏற்பாடு செய்தது. அதில் எல்லாக் கட்சிப் பிரதிநிதிகள், வணிகப் பிரதிநிதிகள், விமானதள சேர்மன் எனப் பலரையும் பங்கேற்கச் செய்தது. பொது மக்கள் எவரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கலாம் என வரவேற்றது. இவ்விவாதம் இலண்டன் நகரில் சூன் 22, 2012 அன்று இமானுவேல் சென்டர், வெஸ்ட் மின்ஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்றது(1). பொது மக்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு தான் செல்ல முடியும். பொருளாதாரத்தைப் புறக்கணித்து விட முடியாது. ஆனால் இலாப நோக்கம் தான் (பணம் பண்ணுவது) முக்கியம் என்றால் இத்தகைய விவாதங்களை விடக் பொழுது போக்குக் கலை, கேளிக்கைகளை நடத்தியிருக்கலாம்.
ஐனநாயகத்தின் நான்கு கால்களாக உள்ளவை அரசு, நிர்வாகம், நீதி-காவல் துறை, ஊடகங்கள் ஆகும். ஒரு காலை மட்டும் சீர் செய்ய முடியாது; செய்து பயனில்லை. நான்கு கால்களும் சரியாகத் தங்கள் கடமைகளைச் செய்யாததால் தான் நம் நாட்டின் மோசமான நிலை நேர்ந்தது என்று உணர வேண்டும்; உணர்த்த வேண்டும். எனவே தீர்வு நான்கு கால்களும் ஒரு சேர மாறுவதில் தான் சாத்தியமாகும். ஒரு காலை மட்டும் குறை சொல்லிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. இதில் இந்த நான்கு துறைகளிலும் உள்ள, அடிப்படை உயிர் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியான, நடுத்தர, மேல்தட்டுப் படித்தவர்கள், அறிவு ஜீவிகளின் பங்கு மிக முக்கியமாகும். இந்த நான்கு கால்களோடு ஒத்துழைத்துச் செயல் பட வேண்டியவை மற்ற சமுதாய (சீர்திருத்த, மத, சாதி, தொண்டு, அற, கலை, இலக்கிய, பண்பாட்டு, மரபு, வரலாற்று, கேளிக்கை, விளையாட்டு, தொழில் துறை, முறை சாராக் கல்வி...) இயக்கங்களின் கடமை ஆகும்.
இங்கிலாந்தின் பிரெஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர்
பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் ஐக்கிய இராச்சியத்தில்
(United Kingdom) வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் பிரதிநிதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஒதுக்கியுள்ளார்கள். ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ஒரு இலட்சம் பிரெஞ்சு மக்கள் தங்கள் பிரதிநிதியாக அக்செல் லெமேர் என்ற 37 வயதுப் பெண்மணியைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர்(2). உலகிலேயே இது போன்ற நடைமுறையை பிரான்ஸ் தான் முதன்முதலாக நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த வெளிநாட்டு எம்.பி.க்கு பிரான்ஸின் உள்நாட்டு எம்.பி.க்குச் சமமான அந்தஸ்து உண்டு. பிரெஞ்சு குடிமக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் அவர்கள் நலத்தைப் பற்றிப் பிரெஞ்சு அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
தமிழ்நாடி
(1)
Evening Standard – London Monday 18
June 2012 Page 2
(2)
Evening Standard – London Monday 18
June 2012 Page 23