2011-12-27
கீழ்க்கண்ட மூன்று புரிதல்களும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் வேண்டும்.
1. இந்த உலக வாழ்க்கை நாடகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேடத்திற்குத் தக நடிப்பு (உயர்வு / தாழ்வு, உண்மை / பொய், நீதி / அநீதி, இன்பம் / துன்பம், முன்னேற்றம் / பின்னேற்றம்...).
2. எல்லாம் இயற்கை / இறைவன் செயல். அடையும் இலக்கு எதுவும் இல்லை. இக்கணத்தில் நடப்பதுதான் இருப்பதுதான் உண்மை. தனித்தனிப் பொருள்கள் / செயல்கள் என்பது அடிப்படையான மாயை / முரண்பாடு. எல்லா வேடங்களுக்கும் (கதைப் பாத்திரங்களுக்கும்) பின்னால் உள்ளது ஒரே ஆற்றலே (இறைவனே / இயற்கையே).
3. எதுவும் நடக்கவில்லை. இருக்கவில்லை. தோற்றம் மட்டுமே உள்ளது. 'நான்' என்ற அறிவுணர்வு எழாவிடில் எதுவும் இருக்கிறது இல்லை என்பதே (என்ற கருத்தே) எழாது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பன இந்த ஆதி அந்தமில்லா ஒரு கணக் காட்சியின் உள்ளடக்கமே. ஓடுவது காலம் அன்று, மனமே / அறிவுணர்வே.
சுருக்கமாக,
1. எல்லாம் நாடக வேடங்களே (many roles)
2. எல்லாம் வேடங்களுக்கும் மூலம் ஒன்றே (one source)
3. எல்லாம் தோற்றங்களே (one appears as many)
இதை இன்னும் சுருக்கமாக 'எல்லாம் ஒன்றே' (all one) என்று சொல்லி விடலாம். என்றாலும் இப்படி அதை மூன்று முகங்களாகப் புரிந்து கொள்வதில் அந்த மூன்று பரிமாணங்களை ஒத்திசைந்து இயங்க / வாழ உதவும்.
இந்த மூன்று முக உண்மையே நிலையான உண்மை. இதைப் புரிந்து கொள்ளப் படிப்போ, பயிற்சியோ அவசியமில்லை. எந்த மன மூட்டமும் இல்லாமல் பார்த்தால், சிந்தித்தாலே போதும். ஆனால் நடைமுறையில் அப்படி ஒரு நிலை (ஒரு சிலருக்குத் தவிர்த்து) இயற்கையாக அமையாததாலும் எல்லா மனங்களும் பல வகையான கற்பிக்கப்பட்டக் கருத்துகளால் மூட்டம், மாசு படிந்து இருப்பதாலும் அவற்றை நீர்த்துப் போய்த் தெளிய வைக்கப் படிப்பும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.
இந்த மூன்று பரிமாணங்களும் தனித் தனியாகவோ ஒன்றன் பின் ஒன்றோ அல்லது முக்கியத்துவத்தில் பயன்பாட்டில் முதல், இரண்டு என்று வரிசையிலோ இல்லை. இவை ஒரே நிலையில் உள்ளன. பூமி தன்னைச் சுற்றும் போதே சூரியனையும் சுற்றிக் கொண்டு அதே சமயம் சூரியக் குடும்பமாகப் பால் வெளி மண்டலத்தைச் சுற்றிக் கொண்டும் மேலும் பால் வெளி மண்டலமாகச் சுழன்று கொண்டும் நகர்ந்து கொண்டும் இருப்பதைப் போல் மூன்று முக உண்மைகள் ஒரே நேரத்தில் ஒரே அளவில் ஒரே நிலையில் ஒரே 'உண்மை'யாக உள்ளது.