2011-08-27
எனக்குத் தெரிந்த அளவில் தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை (அறுபது ஆண்டுத் தொடர் பற்சக்கர முறையாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது எந்தப் பல்/ஆண்டு என்ற குழப்பம் வருவதால்) தமிழ் அறிஞர்கள், புலவர்கள் (முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ உள்பட) 1920 களில் கூடித் திருவள்ளுவரின் பிறப்பைக் கொண்டுத் தமிழுக்குத் தொடர் ஆண்டாகத் திருவள்ளுவர் ஆண்டைப் (ஆங்கில் ஆண்டுடன் 31 ஐக் கூட்டி) பின்பற்ற முடிவு செய்த போது 'சித்திரை' ஆண்டுப் பிறப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டச் சில தெளிவற்ற, நிச்சயமற்ற இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் 'தை'த் திங்களைத் திருவள்ளுவர் ஆண்டிற்குத் தொடக்கமாகக் கொண்டார்கள்.
அவர்கள் அறுபது ஆண்டு பற்சக்கர முறையை எதிர்த்தார்களா அல்லது சித்திரைத் தொடக்கத்தை வெறுத்தார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை; அப்படி இல்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களோ, கடவுள் மறுப்பாளர்களோ இல்லை.
தமிழுக்கு என்ற தொடர் ஆண்டை (திருவள்ளுவர் ஆண்டை) தனித்தமிழ், பிராமண, ஆரிய எதிர்ப்புப் பகுத்தறிவுடன் போட்டுக் குழப்பியதில் என் தந்தையாருக்கும் பங்கு உண்டு என்பதை (ஏனெனில் இந்த அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டைக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பரப்பி வருபவர்) ஒப்புக் கொண்டாக வேண்டும்.
இதை நான் தொடக்கத்தில் உணராவிட்டாலும் உணர்ந்த உடன் (நாம் பிறந்து வளர்ந்து வந்த சூழலால் வந்தனவற்றிலிருந்து கொள்வன கொள்ளுதல் தள்வன தள்ளுதல்) என் தந்தையாருக்கு எடுத்துச் சொன்னேன். அவர் மறுத்துப் பேசவில்லை. உடனே ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்காததால் ஏமாற்றமும் இல்லை. இதனால் நான் சரி என்றோ என் தந்தையார் தவறு என்றோ அல்லது எதிராகவோ முடிவு செய்ய இயலாது.
தமிழர் என்ற அடிப்படையில் சாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழர்களுக்கு என்று ஒரு தொடர் ஆண்டைக் கொள்வதன் மூலம் அதற்கு வழி செய்வது என்ற நோக்கில் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டும், 'தை' முதல் தொடக்கத்தையும் 'இந்து' மத அடிப்படையிலான அறுபது ஆண்டுப் பற்சக்கர முறைக்கும் 'சித்திரை' பிறப்பிற்கும் எதிராகக் காட்டியிருக்கக் கூடாது என்பது என் கருத்து.
இன்று நாம் 'சித்திரை / தை' புத்தாண்டையும் ஆங்கிலப் புத்தாண்டையும் எல்லாத் தமிழர்களும் கொண்டாடுவது போல் இந்துத் தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டையும் கிறித்துவத் தமிழர்கள் கிறித்துவப் புத்தாண்டையும் முகமதியத் தமிழர்கள் முகமதியப் புத்தாண்டையும் பகுத்தறிவுத் தமிழர்கள் பெரியார் ஆண்டையும்.... கொண்டாடிக் கொண்டே அனைத்துத் தமிழர்களும் சேர்ந்து 'தை' தொடக்கமாகக் கொண்ட திருவள்ளுவர் ஆண்டைத் தமிழ் இன மொழிப் புத்தாண்டாகக் கொண்டாடலாமே?
சமுதாயத்தைக் கறுப்பு/வெள்ளையாகப் பார்க்கும் நோயைப் போக்க இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கொள்ளலாமே. We have to work with each other, not against each other.
தமிழ்ச் சமுதாயம் இப்படித் தான் இருக்க வேண்டும், இப்படி இருக்கவே கூடாது போன்ற கறுப்பு/வெள்ளைப் பார்வை, பற்றுகளே நம் காலில் நமக்கு நாமே கட்டிக் கொண்டு இருக்கும் பாறாங்கற்கள்; நம்மை நீந்தி மேலே செல்லவிடாமல் இழுத்து அமிழ்த்தி அழுக வைத்துக் கொண்டு இருக்கும் கருத்து (கழுத்து) நுகத்தடிகள்.
மற்றபடி 'சித்திரை' தொடக்கத்திற்கும் 'தை' தொடக்கத்திற்கும் எந்தவிதமான (பழக்கம் என்பதைத் தவிர) கேள்வி, ஐயத்திற்கு இடமில்லாத ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.
இத்தகைய மாற்றங்கள் எப்போதும் மக்களிடம் கருத்துப் பதிவு செய்து நடைமுறைப்படுத்தப் படவில்லை (உலகில் எந்த நாட்டிலும்) என்பதையும் அரசு, ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்கள் மீது வலிந்து புகுத்தியதே (கிறித்துவ ஆண்டு உள்பட) என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உயர்ந்தோர்கள் (சான்றோர்கள், அறிஞர்கள்) உயர்ந்தோர்களாக இருக்க வேண்டும். அவர்களை மதிக்கும் அவர்கள் சொல்வதை மதிக்கும் பண்பு சமுதாயத்தில் வேண்டும். எல்லாவற்றிலும் எல்லோரும் அறிவுடையவர்களாகவும் உடனடி, தொலை நோக்கில் ஆய்வு செய்து புரிந்து கொள்பவர்களாவும் இருக்க இயலாது.
நம் நாட்டில் மத அடிப்படையில் வேடந் தரித்தவர்கள் சொல்வதை மதிக்கும் பழக்கம் இருக்கும் அளவுக்கு மதச்சார்பற்ற சமுதாயத் தத்துவ அறிஞர்களைப் போற்றும் பண்பு இல்லை.
எல்லாவற்றையும் நாமே தனி ஆளாக ஆய்வு செய்து, சோதனை செய்து ஏற்றுக் கொள்ள இயலாது. சமுதாய ஒழுங்கிற்கு ஆராயாது ஏற்றுக் கொண்டு இட்ட கடமைகளைச் செய்யும் மனப்பான்மையும் (அடிமைத்தனமும்) அவசியமாகும். அப்படி இல்லாமல் மனித சமுதாயமோ தேனீக்களின் கூடோ எறும்புகளின் புற்றோ.... இயங்க இயலாது. குடும்பத்தில் ஒற்றுமை கருதி நமக்குப் பிடிக்காதவற்றைப் பொறுத்து ஏற்றுக் கொண்டு ஒத்து வாழ்வது போல் சமுதாய அளவிலும் செய்ய வேண்டிய தேவையை உணராவிடில் ஒற்றுமை வராது; வாயளவில் தான் இருக்கும்.
வள்ளலாரை வெறும் அற்புதங்கள் செய்த துறவியாகப் பார்த்துப் பயனில்லை. அவரின் சமூகச் சீர்திருத்தப் பணிகளை அறிந்தோர் மிகக் குறைவே. அதே போல் பெரியாரை வெறும் பிராமண எதிர்ப்பாளராகப் பார்ப்பவர்கள் அவரின் பரவலான (அவரின் பெண்ணடிமைத் தன எதிர்ப்பு கருத்துகள் பிராமணப் பெண்களையும் உள்ளடக்கியதே) சிந்தனைத் தாக்கத்தைத் தவற விடுவார்கள்.
அதே போல் திராவிட இயக்கங்களின் இன்றைய சீரழிந்த நிலையை மட்டும் கணக்கில் கொண்டு அது எந்த விதமான மறுமலர்ச்சிக்குத் தொடக்கமாக இருந்தது என்பதைப் புறக்கணித்தால் கணக்கு தப்பாகவே முடியும். அதனால் தான் திராவிட, தமிழ், ஆரிய மயக்கங்கள் எழுகின்றன.
அது போல் வள்ளலார், பெரியார்... என்று தனிமைப் படுத்தி அவர்கள் பிறக்கவில்லை என்றால்...என்று பேசுவது சரியாகாது. அவர்களைப் போல் பலர் அவர்களுக்கு முன்பு இருந்ததன் வெளிப்பாடே அவர்கள். அதனால் அவர்களால் விளைந்த நன்மை, தீமைகளும் அவ்வாறே. அவற்றைத் தனித்துப் பார்த்து புகழ்வதும் இகழ்வதும் செய்யாமல் ஏற்பட்ட நல்ல, தீய விளைவுகளை ஆராய்ந்து செம்மைப்படுத்திக் கொண்டு செல்வதே நல்லது.
பிரித்து அறிவது சேர்த்துப் புரிந்து கொள்வதற்கே. ஆன்மீகத்தில் ஞானம் பெறுவதற்கும் லௌகீகத்தில் ஒத்திசைவு அடைவதற்கும் (ஒற்றுமையாக வாழ்வதற்கும்) வழி ஒன்றே. உள்ளதை உள்ளபடி பிரித்து அறிந்து கொண்டு அதற்குத் தக நடந்து கொண்டு எல்லாவற்றையும் ஒத்து, சேர்த்து இயங்க வைப்பதே ஆகும்.
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றக் கடை (திருக்குறள்: 469)
குடும்பத்தில் சமுதாயத்தில் அவரவரின் தகுதி, திறமை அறிந்து அதற்கேற்ப அவர்களை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோரையும் வறட்டுத் தனமான சமத்துவப் பார்வையில் நடத்தினால் குடும்பமும் உருப்படாது; குமுகாயமும் உருப்படாது.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல் (திருக்குறள்: 158)
குடும்பத்திலும் குமுகாயத்திலும் தகுதியவற்றவர் தீமை, இடைஞ்சல் செய்யும் வாய்ப்பைக் கட்டுப் படுத்தி அதே சமயம் அவர்களை நாம் பெருந்தன்மையாக நடத்தி வென்று ஒன்றிணைக்க வேண்டும்.
சாதி, மத, வர்க்க... அடிப்படையிலான தீய கூறுகளைக் கட்டுப் படுத்த அவரவரின் பண்பறிந்து அதற்குத் தக அவர்களை நடத்த வேண்டும் என்பது வெறுப்பின் அடிப்படையில் இல்லாமல் அவர்களை விடப் பரந்த, பெருந்தன்மையான மனப்பான்மையால் அவர்களைப் பண்பால் வென்று ஒன்றிணைக்கும் தகுதியால் இயங்க வேண்டும்.
வகுப்பு வாதத்தை (சாதி ஏற்றத் தாழ்வுகள்) நீக்க உழைத்த பெரியார் தன்னை ஒரு வகுப்புவாதி என்று ஒப்புக் கொண்டார். வகுப்புவாதம் இருக்கும் வரை தான் ஒரு வகுப்புவாதியாகவே செயல்பட முடியும் என்று புரிந்து வைத்திருந்தார். ஆனால் அது பிரித்தறியும் (பண்பறிந்து) ஆய்வாக, நடைமுறைத் தேவையாகவே இருந்திருக்க வேண்டும். அவரும் அவருக்குப் பின்பு அது வளர்ந்திருக்க வேண்டிய வழி, பண்பு, அணுகுமுறை சரியாக இல்லை. வெறுப்பை வெல்ல வெறுப்பு உதவாது. வெறுப்பை அடையாளம் கண்டு கொண்டு அதற்கு மருந்து, சிகிச்சை (அறுவை உள்பட) செய்வது வேறு. ஆனால் நாம் அந்த வெறுப்பாக மாறி விடக் கூடாது.
சாதியின் படிக்கட்டுப் பிரிவினை முறையைச் சரியாகப் புரிந்து வைத்திருந்தால் பிராமணர்களை மட்டும் எதிர்ப்பதோ பழி சொல்வதோ கண்டிப்பதோ எப்படி முடியும்? அதற்காகப் பிராமணர்களைப் பொறுப்பிலிருந்து 'விடுவித்து' விட முடியாது. சமுதாயத்தின் மேல் தட்டில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம். இந்தியாவின் இன்றைய சீரழிவில் அவர்களுக்கும் (மத்திய அரசு அதிகாரத்துறைகளில் நீதித் துறைகளில் ஊடகங்களில் அவர்களே நிறைந்துள்ளபோது) கணிசமான பங்கு உண்டு. அதனால் அவர்களையும் இணைத்து தான் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
அவர்களும் இம்மண்ணின் மைந்தர்களே. அதே போல் தான் எல்லாச் சாதியினரையும் துறையினரையும் தொழில் செய்வோரையும் (அரசியல் வாதிகள் உள்பட) நாம் பார்த்தாக வேண்டும். அவர்கள் பண்பை அறிந்து நடக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தகுதியால் (நாம் உயர்வு-தாழ்வு மனப்பான்மைச் சிக்கலுக்குள்ளாது - superiority-inferiority complex) வெல்ல வேண்டும்.
இந்த அணுகுமுறையைப் பிராமணர்கள், பிரித்தானியர்கள்... போன்ற சமூகத்தின் மேல் தட்டில் உள்ள குழுவினர் பின்பற்றி வருவதாலேயே அவர்கள் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் இந்த அணுகுமுறையை தங்கள் குழு நல நோக்கில் மட்டும் பயன்படுத்துவதை நாம் பரந்த சமுதாய அளவில் பயன்படுத்த வேண்டும். அதில் அவர்களையும் நாம் அப்படி ஈடுபடுத்தி இணைக்க வேண்டும்.
இதையே பெரியார் பிராமணரல்லாதரைப் பார்த்து, 'உங்களுக்குத் தெரியவில்லை என்றால் பிராமணர்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினார்.
முவ இதனையே சுருக்கமாக வேறு வடிவில் 'தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்' என்று சொன்னார்.
வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது.
நல்ல தன்மை இல்லாத வல்லமை நிலைக்காது.Right without might will not live.
Might without right will not last.
Might without right will not last.
No comments:
Post a Comment