Monday, 29 August 2011

சனாதனக் குரங்குகளும் சமத்துவக் குரங்குகளும்

2011-07-16

திண்டாடும் குரங்குகள் - சனாதனக் குரங்குகளும் சமத்துவக் குரங்குகளும் - குத்தர் சொன்ன கதை

அன்றொரு நாள் சரியார் மனிதர்களின் அவலமான அற்புத நிலையைப் பற்றி ஆழ்ந்து யோசித்துக் கொண்டு இருந்த போது ஒரு குத்தர் (குரங்குச் சித்தர்) தன் அருகில் வந்து அமர்ந்து அதே போல் யோசித்துக் கொண்டு இருந்ததைக் கவனிக்கவில்லை.

குத்தர் விட்ட பெருமூச்சால் யோசனை கலைந்து திரும்பிப் பார்த்தார் சரியார்.

"ஆனந்தமாக மரத்தின் கிளைகளில் தாவிக் கொண்டு இராமல் இங்கு என்ன குந்திக் கொண்டு..." கேட்டார் சரியார்.

"எங்கள் குரங்கு உலகத்தின் அற்புதமான அவல நிலையைத் தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றார் குத்தர்.

"அப்படியா, அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்" தன் கவலையை மறக்கக் கதை கேட்கும் ஆர்வமுடன் சரியார்.

"கேளுங்கள், உங்களுக்கு நல்ல தீர்வு தோன்றினால் சொல்லி உதவுங்கள்" என்ற வேண்டுகோளுடன் குத்தர் சொன்ன கதை:

"எங்கள் குரங்கு உலகத்தை என்னவென்று சொல்வது? சொல்லிப் பெருமைப் படச் சில‌ ஆயிரம் சாதனைகள் உண்டென்றால் சொல்லாமல் மறைக்கப் பல ஆயிரம் வேதனைகளும் உள்ளன. சூரிய குடும்பத்தைப் பாருங்கள். அந்தந்தக் கிரகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காவிட்டால் நம் பூமி இப்படி இருக்க முடியுமா, சூரியக் குடும்பம் தான் உருப்படுமா? எல்லாக் கிரகங்களும் பூமி போல் ஆக முடியுமா, சூரியனாக ஆசைப் பட்டால் நடக்குமா? நாங்களும் அப்படித்தான் அவரவர் வேலை, இடத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தோம். ஆண் குரங்கும் பெண் குரங்கும் அரசக் குரங்கும் அமைச்சர் குரங்கும் வேலைக்காரக் குரங்கும் வேட்டையாடும் குரங்கும் சண்டை போடும் குரங்கும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பெரியவர், சிறுவர் குரங்குகளும் அவரவர் வேறுபாடான இடம், நிலை, தகுதி, வெகுமதி, பொறுப்புகளை ஒத்துக் கொண்டு போனதால் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒழுங்கு என்றால் எல்லாம் சனாதனமாக‌ அதனதன் இடத்தில் இருப்பது தானே?



ஆனால்,  விதி யாரை விட்டது" என்று குத்தர் சொன்னதைக் கேட்ட சரியார் புருவத்தை உயர்த்த, "சரி, ஆசை யாரை விட்டது" என்று குத்தர் தொடர்ந்தார்.

"நாங்கள் குரங்குகள் குசியா, குஸ்திரேலியா, குரோப்பா, குமெரிக்கா எனப் பல கண்டங்களிலும் இவ்வாறு தான் சனாதனமாக‌ வாழ்ந்து வந்தோம். எங்களில் சிலர் புது உலகம் காணப் புறப்பட்டுக் கண்ட வட குமெரிக்கா நாட்டில் இருந்து தான் இந்த சமத்துவ நோய் பரவியது என்று சொல்கிறார்கள்.

ஒரு சிலர் அது சோசலிச நோயின் உடன்பிறப்பு என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ எங்களை இப்போது சமத்துவ நோய் பிடித்துக் கொண்டது. யார் வேண்டுமென்றாலும் முயற்சி செய்தால் எதுவாகவும் ஆகலாமாம். அது அவர்கள் பிறப்பு உரிமையாம். ஒருவர் பிறப்பதே அவர் உரிமையாக இல்லாத போது, 'பிறப்பு உரிமை' எங்கிருந்து வரும்?

ஆக, உழைப்புப் பிரிவையும் அதனால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வையும் கடவுள், மதத்தின் பெயரால் சனாதனம் என்ற முன்வாசல் பொய்யைச் சொல்லி வந்தது போய் இப்போது அவற்றை, 'எல்லோரும் சமத்துவம்' என்ற பின்வாசல் பொய்யால் நியாயப்படுத்தி வருகிறோம்.

தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக உயிரினங்களிடையே உள்ள உழைப்புப் பிரிவுகளுக்கும் எங்கள் சமுதாயத்தில் உள்ள உழைப்புப் பிரிவுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவை நடைமுறைப் படுத்தப் படும் விதத்தில் தான் வேறுபாடு. தேனீக்கள், எறும்புகள் வேதியியல் சமிக்கைகள் அடிப்படையில் இயங்கினால் குரங்குகளாகிய நாங்கள் சனாதனம், சமத்துவம் போன்ற பொய்களின் அடிப்படையில் இயங்குகிறோம்.

இப்படியான எங்கள் குரங்குச் சமுதாயம் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே உழன்று வரும் அற்புதமான அவல நிலையை ஆழ்ந்து யோசித்துக் கொண்டு இருப்பது மரத்தில் தாவித் திரிவதை விட ஆனந்தமாக இருக்கிறது" என்று முடித்தார் குத்தர்.

அதைக் கேட்ட சரியாருக்குத் தன் கவலை புரிந்து கரைந்து விட்டது. எழுதியவருக்கும் படித்தவருக்கும் புரிந்ததா? கரைந்ததா?

No comments:

Post a Comment