Monday, 29 August 2011

புதிய ஆரோக்கியமான அரசியல் --> புதிய பெயர்

2011-08-29


வைகோ தேர்தல் சீட்டுகளுக்காக வேடம் தரிக்காமல் தனி நபர் தாக்குதலை மையப்படுத்தாமல் தான் கடந்த காலத்தில் செய்த தவறுகளையும், தவறான செயல் திட்டங்களையும் பொது மன்றத்தில் ஒப்புக் கொண்டு ஒரு தீர்க்கமான நடைமுறைச் சாத்தியமான மாற்று அரசியல் அணியை, அரசியல் பண்பாட்டை வளர்த்தெடுக்க நாம் ஆதரவு அளிப்போம்; துணை நிற்போம்.

முதலில் வைகோ, மதிமுக என்ற பெயரை மாற்றிக் கொள்ளலாம். 'தமிழ்நாட்டு வளம்' / 'தமிழ்நாட்டோர் அணி' / ''தரமிக்கத் தமிழ்நாடு'' / 'தன்னிகர் தமிழ்நாடு' / 'மறுமலர்ச்சித் தமிழ்நாடு' போன்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். அதில் தமிழ் மொழி, தமிழர் (தமிழ் நாட்டில் வாழ்வோர் அனைவரும்), தமிழ் நாடு மூன்றும் அடங்கும்.

பெரிய வணிக நிறுவனங்களும் பன்னாட்டுக் குழுமங்களும் தங்கள் அடையாளப் பெயரை மாற்றுவதற்கு முக்கியத்துவம் தருவதையும் செலவழிக்கும் தொகையையும் கருத்தில் கொண்டால் வைகோ பழைய பாழாய்ப் போன அரசியலிருந்து வேறுபடுத்திக் காட்ட, செயல்பட‌ (உண்மையிலேயே விரும்பினால்) பெயர் மாற்றம் முக்கியமாகும். இது 'திராவிட' அடையாளத்தை நீக்க விரும்புவோருக்கும் உகந்ததாக இருக்கும்.  இதையும் அவரின் முடிவாகச் செய்யாமல் கட்சியில் கலந்து, விவாதித்து அதே சமயம் இவர் அதை வலியுறுத்திப் பேசி, மக்களாட்சி முறையில் முடிவு செய்யலாம்.

அரசியல் அணியும் சமுதாய சீர்திருத்த அணியும் இந்த புதிய அமைப்பின் இரண்டு சம அளவிலான முக்கியப் பிரிவுகளாக இருக்க வேண்டும். யாரும் அரசியல் அணியில் நேரடியாக நுழைய இடம் (விதி முறை) இருக்கக் கூடாது. சமுதாய சீர்திருத்த அணியில் வேலை செய்து பக்குவப்பட்ட பிறகே ஒருவர் அரசியல் அணிக்கு (விரும்பினால்) தேர்தெடுக்கப் பட வேண்டும்.

இத்தகைய அமைப்பைக் கட்டி எழுப்பப் பத்தாண்டுகள், அதற்கு மேலும் கூட ஆகலாம். ஆனால் வைகோ போடும் பாதையில் மற்ற கட்சியினரும் வர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவார்கள். அது தான் நம் நோக்கமும் கூட. மக்களும் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று உறவாடித் துணை புரிந்து மாறி வளர வேண்டும். இன்றுள்ள தகவல் தொழில் நுட்ப வசதிகளைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இதை விரைவு படுத்தவும் இயலும்.

பெயர் மாற்றம் பெருமளவு இளைஞர்களைப் பங்கு கொள்ள வைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். ஆனால் அது அவர்களுக்கு எப்படிப் பங்களிக்கவும் பொறுப்பேற்கவும் வாய்ப்பு தரப்படும் என்பதைப் பொறுத்து உள்ளது.

காலாவதி ஆகி விட்ட, கறை படிந்து விட்ட‌ 'திராவிடம்', 'முன்னேற்றம்', 'கழகம்' போன்ற அடையாளங்கள் இன்றைய சூழ்நிலையில் (வெறுக்காமல்) புறக்கணிக்கப்பட வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

தமிழ் மொழி, தமிழ் நாட்டில் வாழ்வோர், தமிழ் நாடு (பூகோள எல்லைகள், வளங்கள்...) என்ற ஒருங்கிணைக்கும் அடிப்படையிலான அரசியல் அடையாளம் எடுத்துக் கொள்ளப்படக் காத்திருக்கின்றது.

'பெயரில் என்ன இருக்கிறது' என்பதும் தவறு. 'பெயரில் எல்லாம் இருக்கிறது' என்பதும் தவறு. பெயரைச் சரியாகப் பயன்படுத்தினால் பெரிய சாதனைகளைச் செய்ய, பெரிய திருப்பங்களைக் கொண்டு வர‌ப் பெரிய‌ உதவியாகும்.

இது இன்றைய நிலையில் எல்லாக் கட்சி, தலைவர்களையும் இணைத்து நடைபெற வாய்ப்பில்லை. வைகோ தன்னளவில் தன் கட்சி அளவில் நடைமுறைப் படுத்த முயன்றாலே அதில் சிறு வெற்றி பெற்றாலே பெரிய சாதனை, நல்ல தொடக்கம்.

வைகோ, மதிமுக (எடுத்துக் காட்டுகளே) என்பதற்குப் பதிலாக வேறு பெயர்களைப் போட்டுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment