Tuesday, 26 July 2011

ஆணவமும் ஆசையும் - குட்டுப்பட்டக் குரங்கன்


2011-07-26

ஆணவமும் ஆசையும் - குட்டுப்பட்டக் குரங்கன்
                               (உருவகக் கதை)

குரங்கன் ஒரு துடிப்பான, கூர்மையான குரங்கு. அவன் மரத்தில் கிளைக்குக் கிளை தாவுவதிலும் மரத்திற்கு மரம் தாவுவதிலும் வல்லவன். அதில் அவனுக்கு அலாதி இன்பம்; சாதனைப் பெருமிதம். அவ‌ன் தன்னம்பிக்கையும் தன்முனைப்பும் 'தன்னால் தாவ முடியாது எதுவும் இல்லை' என்ற ஆணவமாக மாறியது.

புதுப் புது மரங்களைத் தேடித் தாவி வெற்றி கொள்வது அவன் சாதகம். அப்படிப் போகும் போது ஒரு மரத்தடியில் ஒரு குத்தர் (குரங்குச் சித்தர்) சில பத்தர்களிடம் (பக்குவப்பட்டக் குரங்குகள்) சொல்லிக் கொண்டு இருந்ததைக் கவனித்தான்.

"எல்லாம் தானாய் நடக்க‌த்
தன்னால் நடப்பதாய்க் குதிக்காதே
சொல்லால் காட்ட‌ இயலாச்
சுவையைச் சும்மாவாய் மதிக்காதே

'நம்மால் எல்லாம் முடியும்' என்ற ஆணவம் ஆகாது. நம் தெய்வக்குலவர் திருக்குள்ளுவர் 'வலியறிதல்' என்ற அதிகாரத்தில் 10 திருக்குரள்களை எழுதி வழிகாட்டியுள்ளார். அதில் முக்கியமான குரள்,

தன்காலும் கையளவும் தாவும் தொலைவ‌ளவும்
உன்வாலும் தூக்கிக் குதி (திருக்குரள்: -471) 

ஆகும்."

[திருக்குள்ளுவரின் திருக்குரளைக் கற்போரிடமிருந்து ஆணவம், ஆசை என ஒவ்வொன்றாகக் கழிந்து கொண்டே போகுமாதலால் அவரின் குரள்களுக்குக் கழித்தல் குறியுடன் -1, -2, -3,...வரிசை எண் இடுவது என்று தமிழ்க் குரங்குச் சங்கப் பலகையில் கற்றடங்கிய குலவர்களால் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.]

இதைக் கேட்டக் குரங்கனோ, 'ஏமாளிப் பத்தர்களுக்கு ஏற்றச் சோம்பேறிக் குத்தர்' என்று நினைத்த வண்ணம் அம்மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று தாவினான்; குச்சி உடைந்து பொத்தென்று விழுந்தான். ஆணவம் அடி வாங்கியது. ஆர்ப்பாட்டம் அடங்கியது. அன்று முதல் குரங்கன் ஆணவத்தை விட வேண்டியது பற்றி அனைவரிடமும் அளந்தான்; மின்னஞ்சலில் கூட மிகவும் வலியுறுத்தி எழுதினான். 

என்றாலும் உச்சிக் கிளை ஆடியது; அழைத்தது. ஆணவம் இல்லை என்றாலும் ஆசை இருந்தது. முயற்சியும் பயிற்சியும் முடிக்கலாம் எதையும் என்று ஆசைக்குத் தூபம் போட்டது. குரங்கன் அரைப் பட்டினி கிடந்து உடல் இளைத்தான், உச்சிக் கிளையில் உடலைத் தாங்கும் பொருட்டு. பறக்கவும் பயிற்சி எடுத்துக் கொண்டான். குத்தர் கவனித்தார். குறிப்பாய்ச் சொன்னார்.

"தவம்செய்வார் தாவுவார் தாவிக் குதித்தே
அவம்செய்வார் ஆசையுள் பட்டு" (திருக்குரள்: -266) 

பயனில்லை. குரங்கனை ஆசை உச்சிக்கு இழுத்தது. உருட்டி விட்டது. இம்முறை குச்சியுடன் குரங்கனின் உச்சியும் உடைந்தது. உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் ஆசைக்கு ஆபத்து.

உணர்த்தும் படிக் குத்தர் குத்தினார்.

"ஆணவம் போனால் அரைக் கிணறு
ஆசையும் போனால் முழுக் கிணறு
பாதியில் நின்றவன் பாடு தினறு
ஆதியில் நின்றதை அறிந் துணரு"

குரங்கன் குத்தரிடம், 'ஆசை இல்லாமல் வாழ்வது எப்படி?' என்று வினவினான். குத்தர், 'வாழ்வதற்காக ஆசைப் பட்டால் அது உன்னை வருத்தாது. ஆசைக்காக வாழ முற்பட்டால் அது உன்னை வதைக்கும்' என்றார். 

குட்டுப்பட்டக் குரங்கன் விழித்தது; குடும்பம் சிறந்தது. குமுகாயம் சீர்ப்பட்டது.

- குரங்கார்

குரங்கார் பற்றிச் சிறு குதிப்பு:
சரியார் குரங்கார் ஆனார். சரியார் தத்து எடுத்த குரங்கு அவரின் உளறலால் உரம் பெற்று வளர்ந்தது. சரியார் எட்டடி ஆழத்திற்கு உளறினால் குரங்கார் பதினாறு அடி உயரத்திற்கு உளறுவார். சரியார் வளவளவென்று பேசி உளறினால் குரங்கார் பேசாமலேயே உளறுவார். சரியார் குரங்காரின் வளர்ச்சியால் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார். சரியார் குரங்காரை உற்று நோக்கினார். குரங்காரின் சலனமற்ற‌ கண்கள் 'குரங்கு ஆர் (யார்)?' என்று வினவின. அன்று முதல் சரியார் குரங்கார் ஆனார்.

No comments:

Post a Comment