Saturday, 16 July 2011

பெயரின் கதை - கதையின் பெயர்

07-02-2011

அன்புள்ள அ,

ஆண் குழந்தைக்கு, பே, பொ, ஜ, ஜீ என்ற எழுத்துகளில் தொடங்கும் பெயர்களைக் கேட்டுச் சிந்தனைகளைக் கிளறி விட்டதற்கு நன்றி.

உடனே பெயர்ப் பட்டியலைப் பார்க்க வேண்டும் என்றால் கடைசிப் பகுதிக்குச் செல்லவும். கொஞ்சம் (பெயர்க்) கதை படித்து விட்டுப் பார்க்கலாம் என்றால் தொடரவும்.

பெயரின் கதை

மனிதன் மட்டும் தான் பெயர் வைக்கிறான். 'மனிதன்' என்ற பெயரை விடப் 'பெயரன்' என்ற பெயர் மனிதனுக்குப் பொருத்தமானதாகும்.  மற்ற உயிருள்ள, உயிரற்றவற்றிற்கும் மனிதனே பெயர் கொடுக்கிறான். நாமம் (பெயர்) இல்லாது ரூபம் (வடிவம்) இல்லை. 

மற்ற உயிரினங்கள் தனி நபரை அறிந்தும் தெரிந்தும் வைத்துள்ளன என்பதை மனிதன் விலங்குகளோடு கொள்ளும் உறவாலும் அறிவியல் ஆய்வுகளாலும் அறிகிறோம். ஒரு மாடு/ஆடு/நாய்/சிங்கம்/புலி/எறும்பு... தன் இனத்தை/குழுவைச் சேர்ந்த மற்றொரு தனி நபரை அடையாளம் கண்டு கொள்வது வேதியியல் சமிஞ்கைகள் மூலமே. அதாவது ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவமான வாசனை இருக்கிறது. மனிதனும் இப்படி தான் பிறப்பில் இருக்கிறான். மனிதக் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்வது பார்வையால் அன்று. அதற்குச் சில மாத வளர்ச்சி தேவை. அதற்கு முன் அது தாயின் வாசனையைக் கொண்டே அறியும். அதே போல் தொடுதல் மூலமும் அறியும்.

'ஔவை சண்முகி' திரைப்படத்தில் கமல், 'சண்முகி' வேடத்தில் தன் மகளுக்குக் குளித்த பின் துவட்டி விடும் போது, சிறுமி கமலை அடையாளம் கண்டு கொள்ள, 'கள்ளி, எப்படிக் கண்டு பிடிச்சே' என்று 'சண்முகி' கேட்க, சிறுமி, 'அப்பா வாசனை எனக்குத் தெரியுமே' என்பாள். கதை வசனம் எழுதிய கிரேஸி மோகன் நிச்சயம் கிரேஸி (crazy) இல்லை.

சிந்திக்கத் தொடங்கும் மனிதன் படிப் படியாக வாசனை நுட்பத்தை இழக்கிறான். மேலும் வாசனைக் குழப்பதை/ஏமாற்றதை உண்டு பண்ண பலவிதமான வாசனைப் பொருள்களைப் பூசிக் கொள்கிறான்.

மற்ற விலங்குகள் தனி நபரை அடையாளம் கண்டு கொண்டாலும் அந்தத் தனி நபர் எதிரில் இல்லாத போது எப்படி அதை அடுத்த தனி நபருக்குக் குறிப்பிட்டுத் தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பதை இதுவரை அறிவியலால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. எடுத்துக் காட்டாக, குழுவாக வேட்டை ஆடும் காட்டு நாய், ஓநாய், சிங்கம் போன்ற விலங்குகள் குழுவின் உறுப்பினர்கள் கண்ணுக்குத் தெரியாமல் (புதர் மற்ற மறைவுகளில்) இருக்கும் போது எப்படியான தகவல் பரிமாற்றம் செய்து வேட்டையாடுதலை ஒருங்கிணைக்கின்றன என்பது வியப்பே. 

அப்படியான தேவையே மனிதனையும் பெயர் வைத்துக் கொள்ளத் தூண்டி இருக்கலாம். அப்படி வந்த பெயர்கள் உடல், முக, நடை... அமைப்புகளை ஒட்டி இருந்திருக்கலாம். இன்றும் 'நெடுமாறன்', 'மலர்க்கண்ணன்' போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. இன்று நெடுமாறன் உயரமாகவோ, மலர்க்கண்ணன் மலர் போன்ற கண்ணுடையவனாகவோ இருக்க வேண்டியதில்லை. இன்று அப்படிப் பெயரின் பொருளை வைத்து ஆளை அடையாளம் காண முற்பட்டால் திருப்பதியில் மொட்டைத் தலையனைத் தேடியதாக முடியும். 

பிறகு மனிதக் குழுகள் பல திசையிலிருந்து வந்து கூடிப் பொருள், உறவு பரிமாற்றம் நடந்த காலத்தில் வந்த திசை குறித்த (தென்னவன், மேலையன்...) போன்ற பெயர்கள் தேவைப் பட்டிருக்கலாம். பிறகு வாழ்விடம், தொழில் குறித்த பெயர்கள் தோன்றியிருக்கலாம். ஆங்கிலத்தில் இன்றும் West, South, North, East, White, Rose, Black, Goldsmith, Blacksmith, Shepherd, Longfellow, True, Honest, Green, Red, Tiger, Fox, Wolf, ... போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. இப்படியான பொருள் தரும் பெயர்களைத் தமிழில் வைத்துக் கொள்ள நாம் தயங்குவோம். ஆனால் ஆங்கிலத்தில் இனிக்கின்றன!

பழந்தமிழ் காலத்தில் மன்னர்களின் சாதனைகள், வெற்றிகள் அவர்களுக்குப் பெயர்களாக அமைந்தன. பொருள் தரும் பெயர்கள் பிறகு போலிமைக்குப் பலியாகின. கால் எரிந்து கரிந்து போகாமலேயே 'கரிகாலன்' என்று பெயர் வைத்துக் கொள்வதில்லையா? கண்ணால் நகைப்பவள் 'கண்ணகி' என்றால், மா(பெரிய) தவம் செய்து பிறந்தவள் 'மாதவி' என்றால், 'பொன்முடி'க்கு பொன்னால் ஆன முடியா இருக்கிறது? பெயரும் பொருளும் நாளடைவில் பிரிந்து போயின.

இயற்கை ஆற்றல்கள், பொருள்கள் அமைந்த பெயர்களை இட்டுக் கொள்ளாத மனிதக் குழுவே இல்லை எனலாம். சூரியன், சந்திரன், மின்னல், மழை, மலை, கடல், நதி, ஆறு, மரம், செடி, கொடி, மலர், காய், கனி, விலங்குகள்... குறித்த பெயர்கள் எல்லாச் சமூகங்களிலும் உள்ளன. அதே போல் இறைவனைக் குறித்த பெயர்களும் இடப்பட்டன. அதில் இந்தியாவில் தெய்வங்களுக்குக் குறைவில்லாததால் அவ்வாறான பெயர்களுக்கும் பஞ்சமில்லை. குழந்தையைக் கூப்பிடும் போதெல்லாம் இறைவனை நினைக்க எண்ணியிருக்கலாம். ஆனால் குழந்தையை வையும் போது?

உருவம் குறித்த பெயர்கள் அருவம் (கருத்து) குறித்த பெயர்களாக, அரசியல் சார்ந்தவையாக, சமூக விடுதலை நோக்கமாக வளர்ந்தன. எல்லாக் காலத்திலும் தனித்துவத் தூண்டல் மனிதரின் இயல்பாக இருந்து வருவதால், புதிய ஒலிப்புகள், சமுதாய இயக்க, மேல்தட்டுப் பாதிப்புகள் பெயர்களிலும் காண முடிகிறது. வாழ்வின் மற்ற துறைகளைப் போன்று இதிலும் தொடர்ந்து மாற்றங்கள் வந்து போகின்றன.

அப்படியான மாற்றம் கொண்டு வருபவரில் நாம் ஒருவராக இருக்க விரும்புகிறோமா என்று தெளிவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அதில் இடர்நேர்வு (risk) இருக்கிறது. என்னைப் பள்ளியில் பல ஆண்டுகள் 'பழைய காப்பி, நெஸ் காப்பி' என்று கேலி செய்தனர். அப்போது இப்படியான தெளிவு எனக்கு இருக்கவில்லை என்றாலும் என் பெற்றோருக்கு இருந்ததால் குழப்பம் இல்லை.

கதையின் பெயர்

“அம்மா, ஒரு கதை சொல்லு”

“எந்த கதை?”

“ஏதாவது ஒரு கதை”

அம்மா கதை சொல்கிறார். குழந்தை, அடுத்த முறை, 'எந்தக் கதை?' என்று அம்மா கேட்கும் போது, முன்பு கேட்ட கதைக்கு (அம்மா சொல்லாமலேயே) அந்த யானைக் கதை (அ) பூனைக் கதை (அ) நாய்க்குட்டி கதை என்று கதைப் பாத்திரத்தைக் (வழக்கமாக கதாநாயகர்) கொண்டு பெயர் வைத்து விடுகிறது.

நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு கதை. நம் பெயர் உண்மையில் அந்தக் கதையின் பெயரே. நம் கதையை யார் சொல்கிறார்? யார் கேட்கிறார்?

நல்ல வாழ்வை நான் அமைத்துக் கொண்டேன்
. . . . .
நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்
- ‘நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்’ பாடல் வரிகள்

இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்
- ‘கேள்வியின் நாயகனே’ பாடல் வரிகள்

இறைவன் என்றொரு கவிஞன் - அவன்
படைத்த க(வி)தை மனிதன் - அதில்
அறிஞனும் மூடனும் உண்டு - ஆனால்
தொடக்கமும் முடிவும் ஒன்று.

நம் கதையை (தலை விதியை) யாரோ எழுதி விட்டார் என்று எண்ணவும் இடம் உண்டு. நாமே நடித்து எழுதிக் கொண்டு இருக்கின்றோம் என்று சொல்லவும் இடம் உண்டு. முதலாவது நாடக மாந்தராக (நடிப்பவர், பார்ப்பவர், இயக்குபவர்...) நம்மை நினைத்துக் கொள்வது. இரண்டாவது நாடக மேடையாக நம்மைப் புரிந்து கொள்வது. மேடைக்கு நாடகத்தில் வரும் காட்சிகளில் பற்று இருக்க முடியுமா? காகிதத்திற்குக் கதையால் பாதிப்பு வருமா?

மாலிவுட்டில் நடிப்பவர் பாலிவுட்டில் நடிக்க ஏங்குகிறார்.
பாலிவுட்டில் நடிப்பவர் ஹாலிவுட்டில் நடிக்க ஏங்குகிறார்.

இந்தக் கதையில் அந்தக் கதை பற்றிய ஏக்கம்.
அந்தக் கதையில் இந்தக் கதை பற்றிய ஏக்கம்.
எந்தக் கதையிலும் ஏதோ பற்றாக்குறைத் தாக்கம்.

இக்கரைக்கு அக்கரைப் பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை

இல்லாத பொருள் மீது 
எல்லோர்க்கும் ஆசை வரும் (இக்கரைக்கு...)

என் வீட்டுக் கண்ணாடி 
என் முகத்தைக் காட்டவில்லை (இக்கரைக்கு...)

சம்சாரியின் ஆசை சந்நியாசம் - அந்த
சந்நியாசியின் ஆசை சம்சாரம்
கானலுக்கு நாம் அலையும்
கண் கண்ட காட்சி
கண் முன்னே காணுங்கள்
ஒரு கோடி சாட்சி (இக்கரைக்கு...)

கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்

கல்தரையில் கை போட்டு
நீந்துகின்ற மனிதா
காலம் இட்டக் கட்டளையை
மாற்றுவது எளிதா (இக்கரைக்கு...)

மழை நாளில் உள்ளங்கள் வெயில் தேடும் - கோடை
வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்

அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடருக்கு
அக்கரையில் இச்சை (இக்கரைக்கு...)
      - திரைப்படப் பாடல்

கதையும் நாமும் வேறல்ல என்று புரியும் போது
கதையே பெயராகிறது, பெயரே கதையாகிறது
நாடகமே நடப்பாகிறது, கதையே (வாழ்வே) காதலாகிறது.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
      -‘காதல் சிறகைக் காற்றினில் விரித்து’ பாடல் வரிகள்

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!

இதற்கு மேல் போனால்,

உதையே உடம்பாகி விடும், உடம்பே உதை ஆகி விடும்! அதனால் சரியாரை, 'சரி போதும்' என்று வழி காட்டி விடுவோம்.

பெயர்ப் பட்டியல்

கொடுத்த ஈற்றடிக்கு ஏற்ற வெண்பா பாடுவது போல், இருக்கும் பொருள்களைக் கொண்டு சுவையாகச் சமைப்பது போல், எப்படி சர்வீஸ்/பவுலிங் போட்டாலும் எதிர்த்து ஷாட் அடிப்பது போல், வாடிக்கையாளர் வாங்க வந்தது இல்லாது போது கடையில் இருப்பதைப் பேசி விற்று விடுவது போல், உள்ளதைக் கொண்டே உருப்படியான வேலை செய்வது போல்... கொடுத்த முதல் எழுத்துகளுக்கு ஏற்ற பெயர்களைத் தரும் முயற்சி இது.

வழக்கில் உள்ள ஒலிப்பு எடுத்துக்காட்டுகள் அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

வடமொழி எழுத்து, ஒலிப்புகளில் பெயர்கள் வருவது குறித்து விருப்பு வெறுப்பு தேவையில்லை. வடமொழி எழுத்து, ஒலிப்புகள் உயர்வு என்ற மனப்பான்மையும் நற்றமிழ் எழுத்து, ஒலிப்புகள் தாழ்வு என்ற மன‍ப்பான்மையும் அல்லது அதற்கு மறுதலையான மனப்பான்மையும் மன நோய்கள். அவற்றைத் தவிர்த்து பொது நோக்கம், சம நோக்கம் கொள்வது நல்லது.

வடமொழி தேவபாஷை என்ற ஆணவம்/ஆதிக்கம்/அறியாமைக்கு எதிராகத் தெய்வத் தமிழ் என்று அதே குறுங்குணம் கொள்ள வேண்டியது இல்லை.

அடுத்து ஒரு பெயரே காலத்திற்கு ஏற்ற படி முருகன், முருகேஷ், கணேசன், கணேஷ், நடேசன், நடேஷ் என்று ஒலிப்பு மாறுபாடுகளுக்கு உள்ளாகிறது. உணவில், உடையில், உறைவிட அமைப்பில் மாற்றம் (அதே அரிசி, கோதுமை, ஆடை, அறைகள்...) காணுவது பெயரிடுவதிலும் நடக்கிறது. நாம் ஒவ்வொருவரும் சிலவற்றில் தனித்து நிற்கவும் பலவற்றில் உலகத்தோடு ஒத்து ஒழுகவும் செய்கிறோம்.

'அருள்மொழி' என்பதை விட 'இராஜராஜன்' என்றே மன்னர்கள் மயங்கினர். ‘கருணாநிதி’ என்பது தமிழன்று, ‘அருட்செல்வர்’ (கருணை = அருள், நிதி = செல்வம்) என்பதே சரி என்று சொற்பிறப்பியல் (etymology) ஆய்வுகள் செய்யலாம்.

புதிய பெயர்ச் சொற்கள் சொல்லவும் கூப்பிடவும் முதலில் விநோதமாக இருக்கலாம். ஆனால் நாளடைவில் பழகி விடும்.

பெயரிடுவதில் தனித்து நிற்க இயலாவிடில் அது சரியோ தவறோ அன்று. அது பற்றோ குற்றமோ அன்று. அது போலவே வேறு விஷயங்களிலும் சரி தவறு, பற்று குற்ற‌ப் பார்வைகளைத் தவிர்க்க வேண்டும். இயல்பறிக்கு 29.07.2010 அன்று எழுதிய மாற்றம்-ஒழுங்கு (Change and Stability) படிப்பது பயனளிக்கும்.

பே – 

பேறு, பேறவன் (பேறு + அவன்)
பேசு (ராசு, ஏசு)
பேரிறை, பேரிறைவன், பேரிறைவி
பேரலை, பேரலைவன், பேரலைவி
பேரன்பு, பேரன்பன், பேரன்பி
பேரறிவு, பேரறிவன், பேரறிவி
பேரின்பம், பேரின்பன், பேரின்பி
பேரருள், பேரருள்வன், பேரருளி
பேரியக்க‌ன் (பெரிய இயக்கம் உடையவன்)
பேரிலக்குவன் (பெரிய இலக்கு உள்ளவன்)

பொ – 

பொறை, பொறையன்
பொறுமை
பொழில், பொழிலன்
பொருளி
பொய்கை(யன்)
பொற்செழி(யன்)
பொன்முடி(யன்)
பொன்னரசு
பொற்கை
பொன்னன்
பொக்கிஷ் (சந்தோஷ்)
பொக்கிஷம் (புதையல், பெருஞ்செல்வம்) என்பதை இப்படிச் சுருக்கி இக்கால ஒலிப்புக்குத் தக மாற்றிக் கொள்ளலாம்.
பொட்டாஷ் (நடேஷ்) - Potassium
பொட்டாசியம் எல்லா (பாக்டீரியா, தாவர, விலங்கு) செல்களிலும் மின்னீர் (electrolyte) சமநிலையைப் பேண முக்கியமாகப் பயன்படுகிறது என்ற அடிப்படையிலும் பொதுவாகத் தனிம அட்டவணைச் (periodic table) சிறப்பைப் போற்றும் வகையிலும் இப்பெயர் இடலாம்.
பொதுமொழி(யன்)
பொற்கிழி(யன்)
பொன்மொழி(யன்)

ஜ– 

ஜலன், ஜலேஷ், ஜலந்த் (சிவன், ரமேஷ், வசந்த்)

உயிர் இருந்தால் நீர்(ஜலம்) இருக்கும், நீர் இருந்தால் உயிர் இருக்கும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இரண்டும் பிரிக்க முடியாத படி உறவு கொண்டுள்ளன. இது வரை எவ்வளவோ நீர் ஆய்வுகள் நடந்திருந்தாலும் நீரின் தன்மை இன்னும் பெரும் புதிராகவே உள்ளது. எடுத்துக்காட்டாக நீர் மட்டுமே உறையும் (freezing) போது கொள்ளளவு (volume) அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. இவ்வியல்பினால் தான் பனிக்கட்டி நீரின் மேல் மட்டத்தில் மிதக்கிறது. மற்ற பொருள்களைப் போல் நீர் உறையும் போது கொள்ளளவு குறைந்தால் அடர்த்தி (density) அதிகரித்து பனிக்கட்டி நீருள் மூழ்கும். கடல் அடியிலிருந்து படிப்படியாக மூழ்கும் பனிக்கட்டியால் உறைந்து பூமி உயிர் வாழ்க்கைக்கு பயன் அற்றதாகப் போய் விடும். நீரின் இந்த ஒரு வித்தியாசமான தன்மையால் ‘உயிர்’ வாழ்ந்து (பிழைத்து) வருகின்றது.

ஜநிகா (முருகா, கிருஷ்ணா, சரவணா), ஜநிக் (கார்த்திக்), ஜநிவ் (ராஜீவ்), ஜநிகான், ஜநிவன்
ஜலம்(நீர்), நிலம்(மண்), காற்று(வளி) என்ற மூன்றின் முதல் எழுத்துக்களைக் கொண்டு நீநிகா, வமநி என்ற பெயர்கள் இடப்பட்டுள்ளன. மாசு (pollution) இம்மூன்றனுக்குள் சுழலுமே தவிர அழிந்து விடாது. அதனால் மாசுக் கட்டுப்பாடு என்பது மாசுச் சுழற்சியே. அதே போல் ஆசை (மனமாசு) இடம் பெயருமே தவிர அழிந்து விடாது. சூழலியல் சிந்தனைகள், செயல்கள் விரிவடைந்து வரும் இக்காலத்திற்கு ஏற்ற‌பெயர் இது.
ஜனப்பிரி(யன்)
ஜனசூரி(யன்)
ஜனன்
ஜனசக்தி
ஜன்மேந்த்(திரன்)
ஜனேஷ்
ஜன்மேஷ்
ஜனந்த்
ஜனித்
ஜனனம் (பிறப்பு), ஜனம்(பொது மக்கள், பொதுவானது) என்ற சொற்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஒலி பின்னொட்டுகளைப் (suffix) பொருத்திப் பார்க்கலாம்.

ஜீ – 

ஜீன் (Gene)
கடந்த நூறு ஆண்டுகளின் மிக முக்கியமான அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவது நம் மரபணு (ஜீன்) கட்டமைப்பை விளக்கியது ஆகும். வைரஸ், பாக்டீரியா முதல் தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் (மனிதன், திமிங்கிலம்...) வரை அனைத்தும் மரபணு அடிப்படையில் அமைந்து உள்ளன என்பது உயிரிகளின் ஒன்று பட்ட தன்மையைச் சான்றோடு உணர்த்துகிறது. அதைப் போற்றும் வண்ணம் இப்பெயர் இடலாம்.

ஜீவன்
ஜீவ்
ஜீவிதன்
ஜீவம் (செல்வம்)
ஜீனி

மேலே கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு சிந்தித்துப் புதுப் பெயர்களைப் புனைந்து பார்க்கலாம். 

குழந்தை பெற்றுக் கொள்வதில் (எண்ணிக்கை) கட்டுப்பாடு தேவைப்படும் காலம் இது. ஆனால் குழந்தைகளுக்குப் பெயரிடுவதில் கஞ்சத்தனம் தேவையில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் பிடித்திருந்தால் பதிவு செய்ய ஒரு பெயரும், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி... கூப்பிடப் பல பெயர்களும் வைத்துக் கொள்ளலாம்.

அன்புள்ள,
வே.தொல்

No comments:

Post a Comment