Sunday, 17 July 2011

அருவி எங்கள் அருவியாம்

2006.09.08

அருவி எங்கள் அருவியாம்

என் தம்பியின் மகள் அருவிக் குட்டியுடன் மகிழ்ந்த நாள்களின் நினைவாகவும் கோவைக் குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த நினைவாகவும் எழுந்த பாடல். வரிகள் பல இரண்டு அருவிகளையும் தழுவி வருகின்றன.

அருவி எங்கள் அருவியாம்
ஆர்த்து விழும் அருவியாம்
உருவில் கருணை வெள்ளமாம்
உலகைக் காக்கும் மூலமாம் (உள்ளமாம்)

ஆறு கொடுக்கும் அருவியாம்
அடர்ந்த காட்டின் அருவியாம்
சீறும் மலையின் முழக்கமாம்
செறிந்த அன்பு பிறக்குமாம்

சின்னக் கைகள் அருவியாம்
செல்ல நடை அருவியாம்
குன்று (குண்டு) குளம் கண்களாம்
கோளம் முழுதும் தெரியுமாம்
[அருவி (நீர் வீழ்ச்சி) விழும் இடத்தில் உள்ள குளத்தில் சுற்றுப் புற மலைகளும் வானமும் தெரியும். அது அருவியின் கண்கள்.]

அடவி தங்கை அருவியாம்
ஆடும் மங்கை அருவியாம்
படரும் பாறை முல்லையாம்
பரவும் திவலைச் சேலையாம்
[பாறையின் மீது வெண் நுரையாகப் பாய்ந்து வரும் அருவி பாறை-முல்லை என்று வருணிக்கப்படுகிறது.]

வருத்தம் தீர்த்த அருவியாம்
வாழ்வு தந்த அருவியாம்
கருத்த மேகம் கூந்தலாம்
கட்டிப் பிடிக்கும் சிந்தலாம்
[நீர்த் திவலைகள் நம் உடலைத் தழுவுகின்றன. அருவி நம் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுகிறாள்.]

வெள்ளை நுரை அருவியாம்
வெடிச் சிரிப்பு அருவியாம்
கொள்ளை அழகு தீட்டுமாம்
குதித்து தலை ஆட்டுமாம்

மருந்து நீர் அருவியாம்
மலையின் தார் அருவியாம்
விருந்து என்றால் பிடிக்குமாம்
வீடு எல்லாம் நிறையுமாம்
[தார் என்றால் கழுத்தில் அணியும் மாலை. நீர் வீழ்ச்சியில் மகிழ நிறைய பேர் வருவர். அருவிக்கு நிறைய விருந்தினர்களைப் பிடிக்கும்; விருந்தும் பிடிக்கும்.]

திறந்த வாய் அருவியாம்
தெளிந்த பேச்சு அருவியாம்
மறைந்த பெண்(தாய்) வந்ததாம்
மகிழ்ச்சிப் பண் தந்ததாம்
[நீர் வீழ்ச்சியின் வாய் ஓயாது. மறைந்த அம்மா அருவியாக வந்துள்ளார். குன்றுகளிடையே மறைந்து வந்து அருவி கொட்டுகிறது.]

அம்மா அப்பா அருவியாம்
அருமை பெருமை அருவியாம்
அம்மா மீண்ட அருவியாம்
அமைதி கண்ட அருவியாம்
[அம்மா அருவியாக மீண்டுள்ளார். மெய்யுணர்வுக் கருத்துகள் குடும்பத்தில் விரவி மன அமைதி (ஒடுக்கம்/அடக்கம்) காணும் காலத்தில் அருவி உதித்துள்ளாள்.]

No comments:

Post a Comment