Wednesday, 21 November 2012

கடல் கடந்த மடல் 7

2012-11-21


கடல் கடந்த மடல் 7

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நம் நிலையே சூழ்நிலை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரபல எழுத்தாளர் - பேச்சாளர், தமிழர்களின் மோசமான மனப்பான்மையை எண்ணி வருந்தி, தமிழர்களின் குருதியை (இரத்தம்) முற்றாக இறுத்து (வடித்து) விட்டுப் புது தன்மானக் குருதியை ஏற்றினால் தான் தமிழர்கள் உருப்படுவார்கள் என்று சொன்னார். அதாவது தமிழர்களின் இயல்பிலேயே ஏதோ குறை உள்ளது என்பது தான் அதன் பொருள். இது உண்மையாக இருக்குமா? தமிழர்களுக்கு என்று தனி இயல்பு உள்ளதா?

சென்னையில் முட்டி மோதிக் கொண்டு பேருந்தில் ஏறும் தமிழன் பெங்களூர் சென்றால் வரிசையில் நின்று ஏறவில்லையா? அதே போல் பெங்களூர் கன்னடன் சென்னைக்கு வந்தால் இடித்துத் தள்ளிக் கொண்டு ஏறவில்லையா? இது ஒரு சிறு எடுத்துக்காட்டு தான். ஆனால் மனிதர் குணம் என்பது குருதியிலோ தலை எழுத்தாகவோ இல்லை என்று காட்டுகின்றது. மனிதர் சூழ்நிலையையும் சூழ்நிலை மனிதரையும் பாதித்து இயங்குகின்றன. நாம் சூழ்ந்து உருவாக்கும் நிலை தான் சூழ்நிலை. அதில் வரலாற்றுப் பின்னணியும் (சூழ்நிலை) அடங்கும்.

பிரிட்டனில் 1997-இல் ஆட்சியைப் பிடித்த தொழிற்கட்சி (டோனி பிளேர் தலைமையில்) தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியத்தைச் (minimum hourly rate) சட்டமாக்கியது. டோனி பிளேர் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின் இலாப நோக்கமுள்ள ஒரு தொழிலை ஆரம்பித்தார். அதில் வேலை செய்யப் புதிய பட்டதாரி இளைஞர்களை நியமித்த போது அவர்களுக்கு ஊதியம் தராமல் இலவசமாக வேலை வாங்கினார். நீடித்து வேலைக்கு வைத்தால் ஏமாற்ற முடியாது என்பதால் மூன்று மாதங்களுக்கு மேல் யாரையும் வைத்துக் கொள்ளாமல் புதியவர்களை ஊதியமில்லா வேலைக்கு அமர்த்திக் கொண்டார். இதைச் சமூகப் பொறுப்புள்ள நிறுவனங்கள் கண்டறிந்து கண்டனம் தெரிவித்துக் குட்டு வெளிப்பட்டவுடன் இப்போது குறைந்த பட்ச ஊதியம் தருவதாக அவர் நிறுவனம் அறிவித்துள்ளது. டோனி பிளேர் பல கோடிப் பணக்காரர் (multi millionaire). கத்தோலிக்க மதத்திற்கு மாறியவர். ஈராக் மீது அத்துமீறல் போர் தொடுக்கக் 'கடவுளைக்' காரணம் காட்டியவர்.

உள்ளத்தனையது உயர்வு

மேலும் மனிதர் எதைத் தொடர்ந்து ஆழமாக நம்புகின்றனரோ அந்த நம்பிக்கையே அதை உண்மையாக்கி விடும் ஆபத்து உள்ளது. அதற்காக மனிதர் தன்னால் பறக்க முடியும் என்று ஆழமாக நம்பினால் பறந்து விட மாட்டார்கள். ஆனால் நமக்கு மொழிப் பற்று இல்லை, இனப்பற்று இல்லை, நம்மிடையே ஒற்றுமை இல்லை நேர்மை இல்லை, நியாயம் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் அதுவே அப்பண்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே போல் பொய்யாகவும் போலித் தனமாகவும் மொழிப்பற்று, இனப்பற்று, ஒற்றுமை இருப்பதாக ஆரவாரம் செய்து கொண்டு இருப்பதால் மட்டுமே அப்பண்புகள் வளர்ந்து விடா. அதிலும் இத்தகைய போலி ஆரவாரம் செய்து கொண்டு நடைமுறையில் எதிராக வாழ்ந்து கொண்டு இருப்பதே பெரிய தீமை விளைவிக்கும்; அதுவே தமிழ்நாட்டில் நடந்துள்ளது; நடந்து வருகின்றது. இதில் இவரை, அவரை என்று சிலரைக் குறை சொல்லிக் கொண்டு இருப்பது நம் பொறுப்பை, கடமையைத் தட்டிக் கழிப்பதாகும்.

சென்ற ஆண்டு (2011) கோடைகாலத்தில் (ஆகஸ்டு) பிரிட்டனில் காவல் துறையினர் ஒரு நபரைச் சந்தேகத்தின் பேரில் (அவர் சாலையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு பயமுறுத்தியதாக) சுட்டுக் கொன்று விட்டனர். இது இலண்டனின் கிழக்குப் பகுதியில் (வறுமை, குற்றங்கள் அதிகம் உள்ள பகுதி) நடந்தது. அதை எதிர்த்துக் காவல் நிலையத்தின் முன் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். எப்படியோ அது (காவல் துறையினர் மீது இருந்த வெறுப்பு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது) பெரிய கலவரமாக மாறிப் பிரிட்டனின் பல பகுதிகளுக்கும் பரவிக் கடைகளைக் கொள்ளை அடிப்பது, உடைப்பது, தீ வைத்து எரிப்பது என்று சில நாள்களுக்கு நாட்டின் சில நகரங்கள் குறிப்பாக இலண்டன் அமளி துமளிப் பட்டது. அதில் பள்ளியின் கோடை விடுமுறையால் பல சிறுவர்களும் வேடிக்கை போலச் சேர்ந்து கொண்டனர். கடைசியாகக் காவல் துறையினரால் (கண்ணீர் புகை வீச்சு, லத்தி சார்ஜ், துப்பாக்கி சூடு எதுவும் இல்லாமல்) அடக்கப் பட்டது. அப்போது தொலைக்காட்சியில் ஓர் இடத்தில் கலவரம் நடந்ததைத் தெருவில் உள்ள வீடியோ காமிராவில் பதிவானதைக் காண்பித்ததைப் பார்த்த ஒரு தாய் அக்கலவரத்தில் தன் மகள் ஈடுபட்டுள்ளதைக் கண்டார். உடனே காவல் துறைக்குப் போன் செய்து வீட்டில் இருந்த தன் மகளைக் (காட்டிக் கொடுத்து) கைது செய்ய வைத்தார். அந்தத் தாய் இப்படிச் செய்வதற்கு முன் தனக்கு உள்ளக் குமறலாக இருந்ததாகவும் ஆனால் நேர்மையான எந்தப் பெற்றோரும் செய்யக் கூடியதையே தான் செய்ததாகவும் சொன்னார்

பயணம் செய்தவர்கள் விட்டுச் சென்ற விலையுயர்ந்த பொருள்கள், பணம் முதலியவற்றை நேர்மையாக மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பற்றிய செய்திகள் பல நாடுகளிலும் - தமிழ்நாடு உள்பட - வந்து கொண்டு இருக்கின்றனவே.

வழி தவறிய வழிகாட்டி

நமக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் பிறகு 2 + 2 = 5 என்று சொன்னால், அவரே சொல்லி விட்டார் என்று நாமும் 2 + 2 = 5 என்று பின்பற்றுவோமா? நம்மைப் புகை பிடிக்க வேண்டாம் என்று சொன்ன மருத்துவர் புகை பிடிப்பதைப் பார்த்து விட்டு அவரே புகை பிடிக்கிறார் என்று அவர் முன்பு சொன்னதைப் புறக்கணிப்போமா? அதே போல் நமக்கு ஒரு காலத்தில் உணர்வூட்டிய எழுத்தாளர், பேச்சாளர், தலைவர் பின்னால் வழி தவறினால் அவர் முக்கியமா அவர் ஊட்டிய உணர்வு முக்கியமா? இந்த மண்ணும் மரபும் மொழியும் பண்பும் கலையும் கருத்தும் (இலக்கியம்) முதலா அல்லது 'இன்றிருப்பார் நாளை இல்லை' என்ற நிலையாத் தனி நபர் முதலா?

கருத்து வேறுபாடுகளைக் கடந்து மனித நேயத்துடன் அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்ளுதல் வேறு. தனி நபரை முன்னிறுத்தி வழி பாடும் பழி பாடும் செய்து கொண்டு இருப்பது வேறு. முன்னது வேண்டத் தக்கது; பின்னது விடத் தக்கது.

மலிவுப் பதிப்பா - மாண்புப் பதிப்பா

தனி நபராக நம்மை நாம் பிறருடன் ஒப்பிட்டுக் கொண்டு நம்மைப் போற்றிக் கொள்வதும் தூற்றிக் கொள்வதும் நம்முடைய உண்மையான செம்மையான வளர்ச்சியைப் பாதித்துத் திரிக்கும். நம் பிள்ளைகளையும் அது போல் பிறர் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து கொண்டு அலைவது நம் முதிர்ச்சிக் குறைவுக்கு அடையாளம். இது நம் மொழி, இன அளவிலும் பொருந்தும். தொடக்க நிலையில் இது போன்ற ஒப்பிடுதல் தேவைப் படலாம். ஆனால் அதுவே வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு முழுமையான அளவு கோலாகி விட முடியாது. அப்படி ஆகி விடுமானால் ஊடகத்திலும் ஊரிலும் வெறும் மலிவுப் பதிப்புகளே மிஞ்சும்.

'திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற திரைப் படப் பாடலைக் கேட்டு ஆமோதிக்கிறோம். எவ்வளவு சட்டம், தண்டனைகள் போட்டாலும் 'திருடுவது தவறு; நெறி அன்று' என்ற பிடிப்புறுதி ஒவ்வொருவருக்கும் இல்லாவிடில் திருட்டை ஒழிக்க முடியாது. அதே போல் 'நாமாகப் பார்த்து நெறியில் நடக்கா விட்டால் நன்னெறி தழைக்காது' என்றும் பாடலாம். எவ்வளவு சட்டம், தண்டனைகள் போட்டாலும் 'நெறிப்படி வாழ வேண்டும்' என்ற பிடிப்புறுதி ஒவ்வொருவருக்கும் இல்லாவிடில் நன்னெறி தழைக்காது.

நம்மிடம் 5 ரூபாய் தான் இருக்கும் போது அடுத்தவருக்கு 10 ரூபாய் கொடுக்க முடியுமா? நம்மிடம் இருப்பதைத் தான் பிறருக்குக் கொடுக்க முடியும்; இருக்கும் அளவுக்குத் தான் கொடுக்க முடியும். மாண்பும் மானமும் இதற்கு விதிவிலக்கல்ல. நாம் மாண்புப் பதிப்பாகாமல் பிறருக்கு மாண்பை உணர்த்தவும் முடியாது; பிறரிடம் மாண்பை வளர்க்கவும் முடியாது. அதே போல் நாம் மாண்பைப் போற்றாமல் மலிவுகளைப் போற்றிக் கொண்டு இருந்தால் மலிவுகள் தான் பெருகும்.

அந்த இனத்தைப் பார், இந்த இனத்தைப் பார் என்று அவர்களின் நிலைக்கு நாம் போகத் தேவையில்லை. நமக்கு என்று ஓர் இலக்கு தனி நபராகவும் இனமாகவும் கொள்ள வேண்டும்.  'தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அவர்க்கென குணம் உண்டு' என்று நாமக்கல் கவிஞர் பாடியதை முழங்குகின்றோம். ஆனால் அந்தத் தனிக் குணம் என்ன என்று தெரிந்து கொண்டோமா? புரிந்து கொண்டோமா? வகுத்துக் கொண்டோமா? பொதுவான மனித இயல்பு வரையறைகளுக்கு உள்பட நமக்கு எனத் தனித்தன்மையை வகுத்துக் கொள்வதில் தான் நம் வாழ்வின் பொருள் (அர்த்தம்) உள்ளது.

ப்ரெயன் வில்லியம் ஹா என்ற ஆங்கிலேயர் பிரிட்டனின் ஈராக் போரை எதிர்த்து, பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்பு பத்தாண்டுகள் 24 மணி நேரமும் பகல், இரவு, வெயில், மழை, பனி எல்லா நேரங்களிலும் அங்கேயே இருந்து அமைதி வழியில்  போராடி உயிரை விட்டார்
(http://en.wikipedia.org/wiki/Brian_Haw)

சுயக் கட்டுப்பாடும் சுற்றுப் புறக் கட்டுப் பாடும்

தமிழர்க்கு என்றோ அல்லது வேறு எந்த இனத்தினருக்கோ இயற்கையிலேயே எந்தத் தனி இயல்பும் கிடையாது. எல்லோருக்கும் பொதுவான மனித இயல்பே உள்ளது. ஆனால் அதில் உள்ள ஒவ்வொரு குணங்களும் (கூறுகளும்) சூழ்நிலையைப் பொறுத்து வெளிப்படுகின்றன அல்லது அமிழ்ந்து கிடக்கின்றன. சூழ்நிலை எப்படி உருவாக்கின்றது? நிலம், நீர், காற்று போன்ற இயற்கைச் சுற்றுப் புறத்திற்கு அப்பால் மனிதரின் சமுதாயச் சூழ்நிலை அச்சமுதாயத்தில் வாழும் மனிதர்களால் தான் உருவாகின்றது. அதில் எல்லோருக்கும் சம அளவு பங்கு இல்லை. ஆனால் பங்கே இல்லாமல் இல்லை. நம்முடைய பங்கை வளர்த்துக் கொள்வதும் தேய்த்துக் கொள்வதும் சூழ்நிலையால் நடக்கலாம்; அப்படி வளர்த்துக் கொள்வதும் தேய்த்துக் கொள்வதும் சூழ்நிலையைப் பாதிக்கலாம்.

ஒவ்வொரு மனிதரும் தன்னைத் திருத்திக் கொண்டால் உலகம் சீர்ப்படும் என்பது ஒரு பக்கம். சமுதாயம் தனி மனிதர் நெறியாக வாழ வழி வகுக்க வேண்டும் என்பது மறு பக்கம். சுயக் கட்டுப்பாடும் தேவை. சுற்றுப் புறக் கட்டுப் பாடும் தேவை. நம்மை நாம் நெறிப் படுத்திக் கொள்வதுடன் சமுதாயத்தில் பிறர் அப்படி நெறியுடன் வாழ உதவுவது, உழைப்பது, குரல் கொடுப்பது, போராடுவது என்பன முடிவில் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும்.

"நாம் பிறருக்கு உதவும் போது நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம்"
                - ரமண மகரிஷி

“It is one of the most beautiful compensations of life that no man can sincerely try to help another without helping himself.” – Ralph Waldo Emerson
"வாழ்க்கையின் அற்புதமான சமச்சீர் என்னவென்றால் நாம் பிறருக்கு உதவுவதன் மூலம் நாமும் பயனடைவது தான்."
                - ரால்ப் வால்டோ எமர்சன்

தமிழ்நாடி.
கார்த்திகை 6, திருவள்ளுவர் ஆண்டு 2043 (நவம்பர் 21, 2012)

Sunday, 11 November 2012

கடல் கடந்த மடல் 6

2012-11-11


தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

சட்டத்தின் முன் சிலர் அதிக சமம்

இந்தியாவின் நிதிஅமைச்சர் .சிதம்பரம் ரயிலில் இரண்டாம் வகுப்புப் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு முதல் வகுப்பில் பயணம் செய்தார். டிக்கெட் பரிசோதகர் வந்த போது மாட்டிக் கொண்டு தண்டனைப் பணம் செலுத்தினார். நடக்குமா? நம்ப முடிகிறதா? இந்தியா என்பதைப் பிரிட்டன் என்றும் .சிதம்பரம் என்பதை ஜார்ஜ் ஆஸ்போர்ன் என்றும் மாற்றிக் கொள்ளுங்கள்.

கடந்த அக்டோபர் மாதம் இப்படி நடந்தது என்றால், 2000-ஆம் ஆண்டில் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பூத் டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்ததற்காகக் கட்டணமும் அபராதமும் செலுத்தினார் என்பதும் இந்நாட்டின் நடப்பு ஆகும். நிதி அமைச்சரும் பிரதமரின் மனைவியும் ரயிலில் பயணம் செய்கிற அளவுக்கு இந்தியா இன்னும் 'தாழ்ந்து' விடவில்லை! வளர்ச்சி அடைந்து விடவில்லை!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மக்களாட்சியின் ஓர் அடிப்படை. ஆனால் நடைமுறையில் செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்கள் மற்றவர்களை விட 'அதிக சமம்' என்று தான் எங்கும் உள்ளது. பிரிட்டிஷ் பேரரசி எலிசபெத் அவர்களின் காருக்கு விதிவிலக்காக நம்பர் பிளேட் கிடையாது. அவர் எந்த கம்பெனிகளில் பங்கு (share) வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்று சட்டச் சலுகை உள்ளது.

மக்களாட்சியை உலகிற்குத் தந்த பிரிட்டனில் இன்றும் பேரரசியும் அரச குடும்பத்தினரும் மக்கள் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் செலவுக் கணக்கு திறந்த புத்தகமாக உள்ளது. அரச குடும்பத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் ஓர் ஆண்டிற்கு ஒரு ஸ்டெரிலிங் பவுண்டுக்கும் குறைவாகவே வரி சுமக்க வேண்டியுள்ளது என்று துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். சென்ற ஆண்டு பிரிட்டனில் செலவுக் கணக்கில் மோசடி செய்ததற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சிறைக்குச் சென்றார்.

முன் 'ஏமாற்று'வது

மன்னர்களை ஒழித்துக் கட்டிய இந்தியக் குடியரசில் அரசியல்வாதிகள ராஜா, ராணிகளைப் போல் உலா வருகிறார்கள்துதி பாடப் படுகிறார்கள்துதி பாடுபவர்கள் ஏதோ ராஜவிசுவாசத்தாலோ மதிப்பாலோ செய்யவில்லை. பதவி, செல்வம், செல்வாக்குப் பிரதிபலன்களுக்காகவே செய்கிறார்கள். இக்கதை படிப்படியாகக் கீழே தொண்டர், குண்டர் வரை தொடருகிறது. ஆனால் சட்டம் பெயரளவுக்கு உள்ளது. சட்டம் மீறுவதற்காகவே உள்ளதாகச் சொல்வார்கள். அது இல்லாவிடில் எதை மீறுவது? எப்படி முன்னேறுவது? அதாவது ஏமாற்றுவதில் முன் நிற்பது என்பது தான் 'முன்னேறுவது' ஆகும்! சட்டத்தின் படி நடக்கும் கணிசமானோர் ஏமாற்றுவதில் பின்னேற்றம் அடைவற்கே 'சட்டங்கள்' உள்ளன!

ஆனால் இதைத் தனிநபர் சார்ந்ததாகப் பார்ப்பது சரியன்று. இங்கு இருப்பவர் அங்கு சென்றால் அவரும் அப்படித் தான் (பெரும்பாலும்) இருப்பார். சுருக்கமாக, திருட 'வக்கில்லாத'வர்கள் நல்லவர்களாக உள்ளனர் என்றும் சொல்லலாம். 'ஒழுக்கம் என்பது வழுக்குவதற்கு வாய்ப்பின்மையே' என்று சொல்வது போல் தான். மு.. அவர்கள், 'காரில் போகிறவர்கள் நடந்து போகிறவர்களை வைவதும், நடந்து போகிறவர்கள் காரில் போகிறவர்களை வைவதும் வியப்பில்லை; ஒரே ஆள் தான் காரில் போகும் போது  நடந்து போகிறவர்களைக் கடிந்து கொள்வதும் பின் அவரே நடந்து போகும் போது காரில் போகிறவர்களைப் பழிப்பதும் தான் வியப்பாகும்' என்று சொல்லியுள்ளார். பரமசிவன் கழுத்தில் இருந்தால் பாம்பும் கருடனைக் குசலம் விசாரிக்கும். நிலையே நினைப்புக்கும் நினைப்பே நிலைக்கும் ஆதாரமாக உள்ளது.

ஏமாற்றம் இல்லாத மாற்றம்

இருக்கும் இடத்தைப் பொறுத்து தான் நடப்பு இருக்கும் என்றால் எப்படி மாற்றம் வரும்? அதிலும் ஏமாற்றம் இல்லாத மாற்றம் வர வழி என்ன? இந்த மலைப்பு ஒவ்வொரு காலத்திலும் இருந்து வந்துள்ளது. என்றாலும் அதைப் பொய்த்து மாற்றங்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. இதை எழுதவும் படிக்கவும் செய்கிறோம் என்பதே அதில் ஒரு பங்கு தான். அது தான் வரலாறு காட்டும் பாடம். இந்தியா விடுதலை பெற முடியமா என்று மலைத்து இருப்பார்கள். சுயமரியாதைத் திருமணம் சட்டமாகுமா என்றும் சந்தேகித்து இருப்பார்கள். நம் வாழ்நாளுக்குள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தால் பல மாற்றங்களுக்கான அடிப்படை வேலைகளைச் செய்தவர்கள் அவற்றைச் செய்து இருக்க மாட்டார்கள். நம் நிலையும் அதே தான். கண்மூடித்தனமான, இசங்களின்  மயக்கத்திலான 'நம்பிக்கை'யும் எதிர்ப்பின் வலிமை, அளவைக் கண்டு 'அவநம்பிக்கை'யும் அடையாமல் 'ஏமாற்றம் தந்த மாற்றங்களி'லிருந்து கற்றுக் கொண்டு நம்மால் இயன்றதை தொடர்ந்து, முழு முயற்சியுடன் செய்வதே 'வெற்றி' ஆகும்; அதுவே 'வெற்றி'யை ஆக்கும்.

தமிழ்நாடி,
ஐப்பசி 26, திருவள்ளுவர் ஆண்டு 2043 (நவம்பர் 11, 2012)

Friday, 2 November 2012

நலம்நாடியும் பொருள்நாடியும்

2012-11-02


நலம்நாடியும் பொருள்நாடியும்

'சிறகு' இணைய தள இதழில் 'நலம்நாடியும் பொருள்நாடியும்' என்ற உரையாடல் வெளிவந்துள்ளது.


Thursday, 18 October 2012

கடல் கடந்த மடல் 5

2012-10-18


கடல் கடந்த மடல் 5

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நலம் நாடுவதில் நம் குறைகளையும் நாடுவதும் அடங்கும். அவரவர் குற்றம் அவரவருக்குத் தெரிவதில்லை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உலகளாவிய உயர்ந்த‌ சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒரு பக்கம் நாம் பெருமைப்பட்டுக் கொண்டே, மறுபுறும் மலையாளி, தெலுங்கர், கன்னடர், ஆரியர், வடவர், சிங்களவர்... என ஒட்டு மொத்த பழி, வெறுப்பு அடையாளக் கூச்சல் இடுகின்றோம். அதை நியாயப்படுத்தும் விதத்தில் அவர்களில் சிலர் நடவடிக்கைகளும் இருப்பதை மறுக்க முடியாது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பழி சொல்லிக் கொண்டு உழன்று கொண்டு இருக்கின்றோம்.

சுயநலக் கிருமிகளும், சந்தர்ப்பவாதிகளும், பரந்த மனமுடையோரும் எல்லாக் குழுக்களிலும் உள்ளனர். ஆனால் பேராசைக் கூத்தாடிகள் கெடுப்பதில் மட்டுமன்று, ஊரார் ஒன்றுபடுவதைத் தடுப்பதிலும் வல்லவர்களாக உள்ளனர். நல்லவர்கள் வல்லவர்களாக இல்லை. அதனால் தான், முவ, நல்லவர்களாக மட்டும் இருந்து பயனில்லை, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்என்று வலியுறுத்திச் சொன்னார். வல்லமை என்றால் வன்முறை என்று மட்டும் பொருள் அன்று. நம்மைச் சுலபமாக ஆட்கொள்ளும் உணர்வுகளை (easy emotions) எதிர்த்து நிற்கும் வலிமை என்றும் பொருள்.

வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது.
நல்ல தன்மை இல்லாத வல்லமை நிலைக்காது.

மொழிகளை மதிக்கும் முதலாளித்துவம்

19, 20-ஆம் நூற்றாண்டுகளில் சூரியன் மறையாப் பேரரசாக ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கம் விரிவடைந்து வளர்ந்து இருந்தது. அது 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படிப்படியாகக் குறைந்து இப்போது 21-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு சில சிறு தீவுகள் எனக் குன்றி விட்டது. என்றாலும் உலகம் முழுவதும் ஆங்கில மொழியின் ஆதிக்கம், பயன்பாடு படிப்படியாகப் பெருகி வருகின்றது. அதிலும் கணினி, தகவல் தொடர்புகளின் (கைபேசி, வலை) அதிவேக‌ வளர்ச்சியால் ஆங்கில மொழியின் வீச்சு அகிலமெங்கும் ஆழிப்பேரலையாக (சுனாமி) அடித்து வருகின்றது; அந்தந்த நாடுகளின் தாய் மொழிகளை அழித்தும் வருகின்றது. ஆங்கில மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு உலகின் எல்லா கண்டங்களிலும் தேவை கூடி வருகின்றது.

(அதே சமயம் கணினி, தகவல் தொடர்பு வளர்ச்சிகள் எல்லா மொழிகளுக்கும் ஒரு புத்துயிர், புது சகாப்தம் கொடுத்துள்ளது என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக, இன்று தமிழில் எழுதுவதும் பரப்புவதும் பெரிய ஊடக, பதிப்பக‌ நிறுவனங்களைச் சாராமல், சாதாரமாவர்கள் கூடச் செய்ய முடிகின்றது.)

என்றாலும் இலண்டன் மாநகரப் போக்குவரத்து நிறுவனத்தின் இணைய தளம் (http://www.tfl.gov.uk/) ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழ் உள்பட 12 மொழிகளில் உள்ளது. இலண்டன் பாதாளத் தொடர்வண்டி (underground train) பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்திலும் (Ticket vending machine) தமிழ் உள்பட பல மொழிகளில் அறிவிப்புகள் உள்ளன. இங்கு கார் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப் படும் செயற்கைக் கோள் வழி காட்டியும் (satellite navigator) தமிழில் வழி சொல்கின்றது.

இலண்டனில் ஆடம்பரமான பொருள்கள் விற்கும் பெரிய அங்காடிகள் வருகின்ற உலகச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, செலவு செய்வதைப் பொறுத்து அந்நாட்டினரின் மொழியில் அறிவிப்புகளையும் பேசுவோரையும் வைத்துள்ளன. அப்படி வந்து செலவளிப்பவர்களில் ஆப்பிரிக்க நைஜீரிய நாட்டினர் கணிசம் என்பதால் அந்த அங்காடிகளில் நைஜீரிய நாட்டு மொழியில் அறிவிப்புகள் வைத்துள்ளதைக் குறிப்பிட்டுச் சில கிழமைகளுக்கு முன் இங்கு செய்தி வந்தது.

கருவுற்ற பெண்மனிகளுக்கு உதவும் தாதிகளுக்கான‌ குறிப்புகளைத் (சில பக்கங்கள்) தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன். அதைக் கேட்டவரிடம் பின் விசாரித்ததில் அது மருத்துவமனையில் பயன்படுத்தப் பட என அறிந்தேன். இந்நாட்டில் மொழி பெயர்ப்புக்கு என்று மட்டும் செலவிடப்படும் தொகையை விட அந்தக் கரிசனையைப் பாராட்ட வேண்டும்.

இந்தியாவில் அப்பா வைத்துள்ள‌ கைபேசியில் தமிழில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் இப்போது தான் முதலாளித்துவத்தின் சரியான வளர்ச்சி வரத் தொடங்கி உள்ளது போலும். முதலாளித்துவம் இலாபத்திற்காக மொழிகளுக்குத் தரும் மதிப்பைத் தேசியங்கள் தரவில்லையே. ஆகாஷவாணியை வானொலி ஆக்கச் சுலபத்தில் முடிந்ததா? ஏர் இந்திய விமானங்களில் தமிழில் அறிவிக்கின்றார்களா? ஏன் பெங்களூரில் வாழும் தமிழர் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழுக்கு இடம் உண்டா?

இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மாநகரப் பேருந்துப் பலகையில் பேருந்து எண்கள் கூடப் பொதுவான எண் வடிவில் (1, 2, 3..) இல்லாமல் அம்மாநில மொழியிலேயே உள்ளன. 'பிறர் உளர் எனும் நினைவும் பெறல் வேண்டும்' என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவர்களை எண்ணித்தான் பாடினார் போலும்.

அட, சோசலிசம் தான் பரவாயில்லை என்று சொல்ல முடிகிறதா? சோவியத் சோசலிசத்தின் (அது உண்மையான சோசலிசம் இல்லை என்பது வேறு; அது போல் உண்மையான, தூய்மையான முதலாளித்துவம் என்றும் எங்கும் இல்லை) வீழ்ச்சிக்கு ரஷ்ய மொழித் திணிப்பும் ஒரு காரணம் தானே. சீனா, திபெத்திய மொழியை வாழ விடுகிறதா?

வரலாற்று ரீதியாகப் பிரஞ்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயர் என்றாலே ஆகாது. சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் நகரத்திற்குச் சென்று இருந்த போது அங்கு ஆங்கில மொழியில் அறிவிப்புகள் எங்கும் பார்க்க முடிந்தது. இலண்டனில் பிரெஞ்சு மொழியில் அந்த அளவு அறிவிப்புகள் இல்லை. இலண்டனிலிருந்து பாரீஸ் நகருக்குப் பயணம் செய்த தொடர்வண்டியில் முதலில் ஆங்கிலத்திலும் பிறகு பிரெஞ்சு மொழியிலும் பயண அறிவிப்புகளைச் செய்தார்கள். கடலைத் தாண்டிப் பிரான்ஸ் மண்ணில் நுழைந்ததும் முதலில் பிரெஞ்சு மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பயண அறிவிப்புகளைச் செய்தார்கள். திரும்பி வரும் போது அதற்கு மாற்றாகச் செய்தார்கள். கேட்டுப் பெறுவது மரியாதை அன்று. தேசியத்தில் கேட்டாலும், போராடினாலும் மரியாதை கிடைப்பதில்லையே. இங்கு தேசியம் என்பது மனப்பான்மை என்று கொள்ள வேண்டும். எந்த ஒரு குறிப்பிட்ட அரசு, இனம், இயக்கத்தை மட்டும் சொல்வதாகாது'தேசியம் என்பது குழந்தைப் பருவ நோய்' என்று பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லியுள்ளார்.

முதலாளித்துவத்தில், இலாபம் என்ற ஒரே குறுகிய‌ குறிக்கோளில் இயங்கும் போது வேறு பல குறுகிய தடைகள் தானாக அடிபட்டுப் போகின்றன. (அப்படிப் போகவில்லை என்றால் அதைத் தடை செய்து கொண்டு இருப்பது எது என்று ஆய்வு செய்ய வேண்டும்). எதைச் செய்தால் நுகர்வோரிடம் சுலபமாகப் பணம் கறக்கலாம் என்பது ஒன்றே இலக்காகி விடுகின்றது. ஒரு முள்ளை எடுக்க இன்னொரு முள் தானே உதவுகின்றது.

முதலாளித்துவமோ பிரதிநிதித்துவ‌ மக்களாட்சியோ அப்பழுக்கற்றவை அல்ல. ஆனால் அவற்றைத் தாண்டிக் குதித்துச் செல்ல முடியாது. அதன் வழியே சென்று தான் அவற்றை விடச் செம்மையான ஒன்றை வடிவமைக்க முடியும்; வளர்த்தெடுக்க இயலும். வயதும் வாழ்வும் முன்னால் தான் போக முடியும்; ஒவ்வொரு நொடியாகத் தான் நகர்ந்தாக வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பேரரசு, நாடுகள் எதுவும் இன்று இல்லை; அல்லது அந்த வடிவில், எல்லையில், அமைப்பில் இல்லை. இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து இன்றுள்ள எந்த தேசிய நாடும் (Nation state) இதே போல் இருக்க வாய்ப்பில்லை. அது தான் மாற்றம், வளர்ச்சியின் போக்கு. தேசியமும் முதலாளித்துவமும் நிலையானவை அல்ல. ஆனால் சமுதாய விலங்குகளான மனிதர் என்றும் ஏதோ ஒரு குழு வடிவில் வாழ்ந்து வருவர். அவ்வடிவிற்கு என்ன பெயர் என்பது முக்கியமன்று. அது மனிதர் இயல்பில், வாழ்வில் உள்ள சிக்கல்களை, முரண்பாடுகளை எப்படிச் சந்திக்கப் போகின்றது என்பதே சவால்.

தமிழ்நாடி.
ஐப்பசி 2, திருவள்ளுவர் ஆண்டு 2043 (18 அக்டோபர் 2012)