Sunday, 9 September 2012

வினையும் விளைவும்

2012-06-30

வளர்ந்த மேற்கு நாடுகளிலேயே (பெருமளவு rule of law இருந்து வரும் நிலையிலும்) அரசியல் வாதிகளின் சுயநலப் போக்காலும் வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் அரசியலும் ஊடகங்களும் இருப்பதாலும் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், விலகி நிற்கின்றனர். வாக்களிப்பதிலும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஏனெனில் அதன் மூலம் எந்த உருப்படியான மாற்றத்தையும் கொண்டு வர இயலவில்லை. மக்கள் கருத்தை அரசுகள் மதிப்பதும் இல்லை. 

இந்திய அரசியல் வாதிகளுக்கும் மேற்கத்திய அரசியல் வாதிகளுக்கும் வேறுபாடுகள் (அவர்களின் பண்பு, பழகும் முறை, அவர்கள் அதிகாரச் செல்வாக்கின் எல்லை, மனசாட்சி...) பல இருந்தாலும் ஒட்டு மொத்தமாகச்  சீரழிந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும்.

ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன் (வெளிநாட்டு வேலை, வாழ்க்கை அனுபவங்களைப் பெறும் முன்) இலக்கிய வீதி இனியவன் ஐயாவிடம் சென்னையில் பேசிக் கொண்டு இருந்த போது, "இன்றைய சமுதாய சூழ்நிலை சீர்ப்படும் என்ற நம்பிக்கைக்கு இடம் தரவில்லை. ஆனால் நம்பி நம்மால் இயன்றதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று குறிப்பிட்டேன். இன்று அந்தக் கருத்து உலகளவிலும் பொருந்துகிறதை, வலுப்பட்டுள்ளதைக் காண்கிறேன்.

அதே சமயம் மனம் ஒன்றை ஆராய்ந்து நம்புவதை விட, ஏற்கனவே நம்பியதற்கு ஆராய்ந்து நிரூபணம் தேடும் இயல்புடையது. This is one of the pitfalls of our cognitive machinery.

ஆட்சியர் சகாயம், தொண்டர் மதுரைக் கிருஷ்ணன்... போன்றோரைப் பற்றி நினைக்கும் போது மனம் நம்பிக்கை பெறும். அல்லது மனம் நம்பிக்கை உடன் இருக்கும் போது அப்படிப்பட்டவர்களை நினைத்துக் கொள்ளும். மாறானவற்றைப் பற்றி நினைக்கும் போது மனம் நம்பிக்கை இழக்கும். மனம் நம்பிக்கை இழந்து உள்ள போது அதற்கு ஒத்துப் போகின்றவற்றைத் தேடிப் பிடித்துச் சொல்லிக் கொள்ளும். 

இதைச் சுருக்கமாக, மு.வ., "மனம் தன் விருப்பு வெறுப்புக்குத் தக எடுத்துக்காட்டுகளைத் தேடிக் கொள்ளும்" என்று சொல்லியுள்ளார். இது இன்றைய அறிவியல் (உளவியல்) ஆய்வுகளில் உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

நம்பிக்கை, அவநம்பிக்கைகளைக் கடந்து (அதாவது அவை வந்து போவதைப் பெரிது படுத்தாது) 'அற'த்தின் (தர்மம், சத்தியம், இயல்பு, Tao...) வலிமையை எண்ணி அதில் நின்று செயல்படுவதே சிறந்தது. அறன் வலியுறுத்தல் (திருக்குறள் அதிகாரம் 4) என்பது அறத்தை வற்புறுத்திக் கூறுதல் அன்று. அது 'அறத்தின் வலிமை'யை உறுத்துதல் (உறுதியாகச் சொல்லுதல்) ஆகும்.

அறம் என்றோ சத்தியம் என்றோ (அசத்தியம், அதர்மம் என்றோ) நம்மைத் தவிர்த்துத் தனியாக எதுவும் இல்லை.

எந்த ஆற்றல் நம்மை இயக்குகிறதோ அதே தான் எதிர்ச் செயல்களுக்கும் (இயல்புகளுக்கும்) மூலமாக விளங்குகிறது என்று அறிவியல் அடிப்படையிலும் அறிந்து கொள்ளலாம்; ஆன்மிக அடிப்படையிலும் தெளிந்து கொள்ளலாம்; பொதுஅறிவு அடிப்படையிலும் புரிந்து கொள்ளலாம்; அனுபவத்தாலும் உணர்ந்து கொள்ளலாம். அந்த நிலையில் வேர் கொண்டு (rooted) இயங்கும் போது தான் சூழ்நிலைச் சமிக்ஞைகளில் ஆழ்ந்து மூழ்கி விடாது உறுதியாகச் செயல்பட இயலும். அப்படி நாம் செயல்படுவதும் சூழ்நிலைச் சமிக்ஞைகளாகப் பரவும்.

நம் மின்னஞ்சல் பரிமாற்றத்தில் பலமுறை பகிர்ந்து கொண்டது தான். "சிக்கல்களை உருவாக்கிய அதே மனப்பான்மையைக் கொண்டு அவற்றைத் தீர்க்க முடியாது" ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் மனநுட்பம் முதிர்ச்சி அடைந்துள்ளதா? குறிப்பிட்டுச் சொல்லும் படியாக உலகில் எங்குமே இல்லை. ஒப்பிட்டளவில் செல்வம் கொழிக்கும் நிலையில் கூட மேற்கு நாடுகளில் பரவலாக மக்கள் மனம் முதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரியவில்லை. மேம்போக்கான பழக்க வழக்கங்களே மாறியுள்ளன. பற்றாக்குறை வந்தால் பழக்க வழக்கங்கள் பாழாய்ப் போனாலும் போகும்.

அப்படி மன நுட்பம் முதிர்ச்சி அடையுமா? அதற்கு நம் உயிரியல் அமைப்பில் வழி உள்ளதா? மரபணு மாற்றங்களின் மூலம் மனிதன் தன் மன இயல்பை மாற்றிக் கொள்வானா? எதை எப்படி மாற்றுவது என்று யார் முடிவு செய்வது? எந்த இயல்பு சரி எந்த இயல்பு தவறு? என்ன அளவு கோல்? இவற்றிற்கு விடையளிக்க இயலாது.

ஆனால் பரவலாக மக்கள் மனப்பான்மை மாறாமல், முதிர்ச்சி அடையாமல் மனித இனம் இந்தச் சுழற்சியிலிருந்து தப்பிக்க முடியாது என்று நம்மைப் போன்றோருக்குப் புரிவதே 'மன நுட்பம் முதிர்ச்சி' அடைவதற்கு அடையாளம். அது சாத்தியம் என்பதற்குச் சான்று. நம்மைச் சமுதாயத்திலிருந்து தனியாகப் பிரித்து கொண்டு நினைக்கும் மாயையைக் கண்டு விட்டால், நாம் எப்படி/இப்படி இருக்கிறோம் என்பதே சமுதாயத்தின் நம்பிக்கை; அறம்; தர்மம்; சத்தியம்; இயல்பு....

கடமையைச் செய். பலனை எதிர்பாராதே (கீதை)

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு (திருக்குறள்: 266)

இலர் பலர் ஆகியக் காரணம் நோற்பார் 
சிலர்; பலர் நோலா தவர் (திருக்குறள்: 270)

"தன் நோய்க்குத் தானே மருந்து" (திருக்குறள்: 1102)

மனிதன் சமுதாய விலங்கு. அவன் நினைத்தாலும் 'தான் உண்டு, தன் குடும்பம் உண்டு' என்று வாழ முடியாது. சமுதாய இயக்க அலை அவனை (அவளை) அடித்து இழுத்துச் செல்வதைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் (அத்தகைய மன முதிர்ச்சியை அடைந்து) அது வினை (action / proactive). இல்லாவிடில் அது விளைவு (result / reactive). 

வீணர்களை விட்டு விலகி நிற்கலாம். ஆனால் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய‌ வினைகளை விட்டு விலகி இருக்கக் கூடாது. அதை நாமும் புரிந்து கொண்டு சுற்றியுள்ளவர்களுக்கும் புரிய வைத்து எப்படியான வினைகள் தற்போதுள்ள சூழ்நிலையில் நடைமுறைச் சாத்தியம் என்று குறிப்பாக இளைஞர்களை இணைக்க (engage) வேண்டும். இளைஞர்கள் விலகி இருப்பது அவர்கள் தவறான வழியில் (இயக்கம்) செல்வதை விட ஆபத்தானது. அலட்சியம் செய்வது (கோப தாப‌) அர்ச்சனை(!) செய்வதை விட (குடும்பத்திலும் குமுகாயத்திலும்) மோசமானது.

மனித இனம் உறுதியாக முதிர்ச்சி அடையும்; முன்னேறும்; தளிர்க்கும். ஆனால் அதில் 'தமிழர்/இந்தியர்...' இருப்பார்களா? மாறாதது (வினை புரியாதது) மறைந்து (விளைவு ஆகிப்) போகும்.

அறிவு (மன முதிர்ச்சி) அற்றம் (அழிவு) காக்கும் கருவி (திருக்குறள்: 421)

மூன்று (நான்கு) வகை உண்மைக‌ள்

2012-09-09

திருக்குறளோ, பைபிளோ, குரானோ, கீதையோ...ஏன் அறிவியல் ஆய்வுகளிலோ நாம் ஒவ்வொரும் நம் அனுபவத்திற்கு ஏற்பவே அதைப் புரிந்து கொள்கிறோம். அதனால் அதே வரிகள் ஒருவருக்கே அவரின் வயது, அனுபவத்திற்கு ஏற்ப வேறுபாடான, மாறுபாடான‌ பொருள் / புரிதல் தருவதைத் தவிர்க்க முடியாது.

மேற்கண்ட 'உண்மை' (அல்லது உளறல்) புரிவதும் அதே உண்மை/உளறல் செயல்முறைக்கு (process) உட்பட்டதே.

'உண்மை' மூன்று வகைப் படும்.
1. உள்ளதை உள்ள படி உணர்வது.

2. உள்ளதிற்கான (இருப்பு, நடப்பு object and process) காரணமாக (விதியாக / முறையாக...) உய்த்துணர்வது (அனுமானிப்பது) தொடர்ந்து ஆய்வு, பரிசோதனையில் ஒத்து (consistent results) வருவது.

3. எங்கும் எப்பொழுதும் மாறாத, நிலையானது.

மூன்றனுக்கும் எடுத்துக்காட்டுகள்:

1. மேலிருந்து பொருள் கீழே விழுவது. (டேய், என்ன நடந்ததுன்னு உண்மைய, உள்ளது உள்ள படி, நடந்தது நடந்த படி சொல்லு. எது ஏன் நடந்தது என்பதற்கு உன்னோட கருத்து, ஊகமெல்லாம் வேண்டாம்)

2. அப்படி விழுவதற்கு பொருள்களுக்கிடையே இருப்பதாக அனுமானிக்கப்படும் 'புவியீர்ப்பு' விசை என்பது தொடர்ந்து அந்த அனுமானித்தின் அடிப்படையில் செய்யப்படும் ஆய்வு, பரிசோதனை, செயல்களில் எதிர்பார்த்த, கணக்கிட்ட விளைவை தருவது. அதனால் 'புவியீர்ப்பு' விசை என்ற அனுமானம் ஒரு செயல் உண்மையாக (working truth) ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்பதற்கு அப்பால் முதல் வகை உண்மை அடிப்படையில் 'புவியீர்ப்பு' விசை என்ற ஒரு விசை 'உள்ளது' என்று சொல்ல முடியாது. பொருள்களுக்கிடையே எந்தவிதமான ஈர்ப்பும் இல்லை; அவற்றின் நிறையால் (mass) அவற்றை சுற்றியுள்ள வெளி (space) 'பொருள் விழும் படியாக' வளைக்கப் பட்டு (curved) விடுகிறது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வேறு அனுமானம் கூறி அதுவும் பல பரிசோதனைகளில் 'செயல் உண்மை'யாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ஆக இரண்டுமே அனுமானங்கள். முதல் வகை உண்மையைச் சார்ந்தவை அல்ல.

3. தொடர்ந்து மாறும் எதுவும் உண்மையாக இருக்க முடியாது. பிரபஞ்சத்தில் மாறாது (நம் உடல்,மனம் உள்பட) எதுவுமே  இல்லை. எனவே அவை எல்லாம் தோற்றங்களே. [காலை மலம் கழித்த போது (அதுவரை என் குடலுக்குள் தொல்லாக இருந்த) கொஞ்சம் 'தொல்' சாக்கடையில் போய் விட்டது! ]. ஆனால் எல்லாவற்றையும் அறியும் அறிவுணர்வு மட்டுமே மாறாமல் நிலையாக (சாசுவதமாக) இருக்கிறது. 'அவ்வறிவுணர்வு இல்லாத போது' என்று நினைப்பதற்குக் கூட அவ்வறிவுணர்வு இல்லாது இயலாது. எனவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும் சாட்சியாகவும் அதே சமயம் எந்தத் தோற்றத்தாலும் எந்த விதத்திலும் பாதிக்கப் படாமலும் இருப்பது / இருக்கும் அதுவே உண்மை. அஃது இரண்டற்ற உண்மை (non-dual). அந்த விதத்தில் அஃது 'உண்மை' என்பதன் நான்காவது வகை, அதாவது 'உண்மை என்றால் ஒன்றுதான்' (Truth can be only ONE) என்பதற்கும் உண்மையாக விளங்குகின்றது.

இஃது உண்மையின் ஐந்தாவது வகைக்கும் [அதாவது உண்மை என்பது தனக்குத் தானே வெட்ட வெளிச்சமாக, சான்றாக இருக்க வேண்டும். அதன் உண்மைத் தன்மை வேறு ஒன்றைச் சார்ந்து இருக்குமானால் அஃது தன் ‍(சுய‍) உண்மை அன்று; சார்பு (relative) அல்லது பயன்பாட்டு (useful) உண்மையே ஆகும்] உண்மையாக விளங்குகின்றது.
  • எந்த வகை உண்மையைப் பற்றிப் பேசுகிறோம் என்று தெளிவு இல்லாவிடில் வெவ்வேறு அலை வரிசைகளில் (waves) நாம் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுக் கொண்டு (பழி சொல்லிக் கொண்டு) இருப்போம்.
  • 'இருவேறு உலகத்து இயற்கையை' / 'இருமை வகை தெரிந்து' உணராத நிலையிலும் உணர்ந்த நிலையிலும் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது வெவ்வேறு புரிதல்களைத் தரும்.
  • உண்மை வகை ஒன்றிற்கும் இரண்டிற்கும் இடையே வேறுபாடு பொருளை (semantic) விடச் சொல்லில் (syntactic) தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது 'உள்ளதை உள்ளபடி உணர்தல்' என்பதில் நூறு விழுக்காடு சார்பற்ற தன்மை (100% objectivity) என்பது இருக்க இயலாது.
இந்த உண்மை உளறலை (அல்லது உளறல் உண்மையை) 'கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்'. அதனால் தான் அஃது உண்மையாகவும் உளறலாகவும் ஒரே காலத்தில் ஒன்றி ஒளிருகின்றது! சித்தனும் பித்தனும் சிவமயமே!

பி.கு.:
அப்பா! உளறி சில மாதங்கள் ஆகி விட்டதால், இன்று நன்கு உளறிய நிறைவுடன் உணவு செரிக்கும்; உறக்கம் பிடிக்கும்! உளற வாய்ப்பளித்த உள்ளங்களுக்கு நன்றி!


Tuesday, 17 July 2012

கடல் கடந்த மடல் 3

2012-07-17

ஆனி 31திருவள்ளுவர் ஆண்டு 2043 (15 சூலை 2012)

கடல் கடந்த மடல் 3

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நாடும் வீடும் நலம் பெறப் பயன் தரும் செய்திகளையும் சிந்தனைகளையும் நாடுவோம், தேடுவோம். அவற்றைப் பகிர்ந்து கொண்டு செயல்படக் கூடுவோம்.

நாற்காலி மக்களாட்சி

நாடுகளுக்கிடையிலான போட்டிகள் பல விதம். அதில் விமானதளப் போட்டி ஒரு விதம். இலண்டனில் மூன்று பெரிய விமானதளங்கள் இருக்கின்றன. அதில் ஹீத்ரோ விமானதளம் மிகப் பெரியதும் முக்கியமானதாகும். அதைக் கட்டிய காலத்தில் அது இலண்டன் மாநகருக்கு வெளியே இருந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் விமானதளம் விரிவடைந்தது. இலண்டன் மாநகரும் விரிவடைந்து ஹீத்ரோவை விழுங்கி விட்டது. ஹீத்ரோவைச் சுற்றி மக்கள் நெருக்கமான குடியிருப்புகள். சாலைப் போக்குவரத்து நெரிசல்.

விமானதளத்தை மேலும் விரிபடுத்த வேண்டும் என்று ஒரு புறம் கோரிக்கை. ஏற்கனவே அதைச் சுற்றி வாழும் மக்கள் விமான இரைச்சல், போக்குவரத்து நெரிசல், மாசு இவற்றால் அவதிப்படுகின்றனர். அவர்களில் பலர் மேற்கொண்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் படியான எந்த விரிவு திட்டத்தையும் எதிர்க்கிறார்கள். ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு விமானதளத்தின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும், அது அவசியம், இல்லாவிடில் அப்படியான பொருள் வரவு பக்கத்து நாடுகளுக்குப் போய் விடும்; போய்க் கொண்டு இருக்கிறது என்று வாதங்கள் மறுபுறம். எது முக்கியம்? யார் தீர்மானிப்பது?

தேர்தல் வாக்குகளைக் கணக்கிடும் அரசியல்வாதிகள் (மூன்று முக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும்) வழக்கம் போல் வழவழா கொழகொழா செய்கின்றனர். ஒரு பொது மக்கள் விவாதத்திற்கு ஏற்பாடு செய்வதைத் தள்ளிப் போடுகின்றனர்.

'நாற்காலி' மக்களாட்சி என்பது பதவிப் போட்டிக்கான காட்சி. ஆனால் உண்மையான நாற்காலி மக்களாட்சி என்றால் நான்கு கால்களால் நடைபோடும் மக்களாட்சி ஆகும். அவற்றை நான்கு தூண்கள் என்பார்கள். தூண்கள் அசையா. அதனால் நடைபோடும்  கால்கள் என்றால் பொருத்தமாக இருக்கும்.

கால் 1:                  மக்கள் பிரதிநிதிகளால் ஆன அரசு.
கால் 2:                  அரசு செய்யும் சட்டத்தை நடைமுறைப் படுத்தும் நிர்வாகம்.
கால் 3:                  நிர்வாகம் சட்டப்படி இயங்குவதை உறுதிப்படுத்தும் நீதி, காவல் துறை.
கால் 4:                 மேற்கண்ட மூன்றையும் கண்காணித்து மக்களின் கண்களாகவும் காதுகளாகவும் வாய்களாகவும் செயல்பட வேண்டிய ஊடகத் துறை.

இலண்டனில் மாலையில் வெளிவரும் ஈவினிங் ஸ்ண்டார்ட் என்ற நாளிதழ் இந்தச் சிக்கலில் (விமானதளத்தை விரிவு படுத்துவதா, புதிய விமானதளம் கட்டுவதா, எங்கு கட்டுவது)  மக்களாட்சிப் பொறுப்புணர்வுடன் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பொது விவாதத்திற்குத் தன் செலவில் ஏற்பாடு செய்தது. அதில் எல்லாக் கட்சிப் பிரதிநிதிகள், வணிகப் பிரதிநிதிகள், விமானதள சேர்மன் எனப் பலரையும் பங்கேற்கச் செய்தது. பொது மக்கள் எவரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கலாம் என வரவேற்றது. இவ்விவாதம் இலண்டன் நகரில் சூன் 22, 2012 அன்று இமானுவேல் சென்டர், வெஸ்ட் மின்ஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்றது(1). பொது மக்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு தான் செல்ல முடியும். பொருளாதாரத்தைப் புறக்கணித்து விட முடியாது. ஆனால் இலாப நோக்கம் தான் (பணம் பண்ணுவது) முக்கியம் என்றால் இத்தகைய விவாதங்களை விடக் பொழுது போக்குக் கலை, கேளிக்கைகளை நடத்தியிருக்கலாம்.

ஐனநாயகத்தின் நான்கு கால்களாக உள்ளவை அரசு, நிர்வாகம், நீதி-காவல் துறை, ஊடகங்கள் ஆகும். ஒரு காலை மட்டும் சீர் செய்ய முடியாது; செய்து பயனில்லை. நான்கு கால்களும் சரியாகத் தங்கள் கடமைகளைச் செய்யாததால் தான் நம் நாட்டின் மோசமான நிலை நேர்ந்தது என்று உணர வேண்டும்; உணர்த்த வேண்டும். எனவே தீர்வு நான்கு கால்களும் ஒரு சேர மாறுவதில் தான் சாத்தியமாகும். ஒரு காலை மட்டும் குறை சொல்லிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. இதில் இந்த நான்கு துறைகளிலும் உள்ள, அடிப்படை உயிர் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியான, நடுத்தர, மேல்தட்டுப் படித்தவர்கள், அறிவு ஜீவிகளின் பங்கு மிக முக்கியமாகும். இந்த நான்கு கால்களோடு ஒத்துழைத்துச் செயல் பட வேண்டியவை மற்ற‌ சமுதாய (சீர்திருத்த‌, மத, சாதி, தொண்டு, அற, கலை, இலக்கிய, பண்பாட்டு, மரபு, வரலாற்று, கேளிக்கை, விளையாட்டு, தொழில் துறை, முறை சாராக் கல்வி...) இயக்கங்களின் கடமை ஆகும்.

இங்கிலாந்தின் பிரெஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர்

பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் பிரதிநிதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஒதுக்கியுள்ளார்கள். ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் ஒரு இலட்சம் பிரெஞ்சு மக்கள் தங்கள் பிரதிநிதியாக அக்செல் லெமேர் என்ற 37 வயதுப் பெண்மணியைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர்(2). உலகிலேயே இது போன்ற நடைமுறையை பிரான்ஸ் தான் முதன்முதலாக நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த வெளிநாட்டு எம்.பி.க்கு பிரான்ஸின் உள்நாட்டு எம்.பி.க்குச் சமமான அந்தஸ்து உண்டு. பிரெஞ்சு குடிமக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் அவர்கள் நலத்தைப் பற்றிப் பிரெஞ்சு அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

தமிழ்நாடி


(1)     Evening Standard – London Monday 18 June 2012 Page 2
(2)     Evening Standard – London Monday 18 June 2012 Page 23


Saturday, 23 June 2012

கடல் கடந்த மடல் 2

ஆனி 9  திருவள்ளுவர் ஆண்டு 2043 (23 சூன் 2012)

கடல் கடந்த மடல் 2

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நாம் தமிழ்நாட்டின் நலம் நாடுவோர். தமிழ்நாட்டின் மோசமான நிலையை ஒப்புக் கொள்வதில் நமக்குள் ஒற்றுமை உள்ளது. ஆனால் அதற்கு என்ன காரணம் அதை எப்படிச் சீர் செய்வது என்பதில் பலவகையாகப் பிளவு பட்டு நிற்கிறோம்.  அது குறித்து சிந்திப்பதற்கு, விவாதிப்பதற்குச் சில கடல் கடந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வது பயனளிக்கலாம்.

இஸ்லாம் பெண்மணி தலைமையில் இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சி
http://en.wikipedia.org/wiki/Sayeeda_Warsi,_Baroness_Warsi

http://www.dailymail.co.uk/debate/article-2134926/The-Tories-win-unless-win-ethnic-minority-votes-says-Baroness-Warsi.html

இங்கிலாந்தில் (பிரிட்டன்) கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் டெமாக்ரெட் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை நடத்தி வருகின்றன. அண்மையில் (மே 2012) நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இரண்டும் படுதோல்வியை அடைந்தன. அப்போது கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் சொன்னார்: "வெள்ளைக்காரர்களின் வாக்குகளை மட்டும் பெற்று ஆட்சி அமைக்கத் தேவையான‌ தனிப் பெரும்பான்மையை கன்சர்வேடிவ் கட்சி இனி அடைய முடியாது. சிறுபான்மை இனத்தவரை ஈர்க்க வேண்டும்". இப்படிச் சொன்ன அத்தலைவர் யார்?

பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த இஸ்லாம் குடும்பத்தில் (இங்கிலாந்தில்) பிறந்து வளர்ந்த 41 வயதான பெண்மணி சயீதா வார்சி மே 2010 முதல் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக இருந்து வருகிறார். இவர் தான் அப்படிச் சொன்னார். கன்சர்வேடிவ் கட்சியின் பாரளுமன்றத் தலைவராக இருந்து, பிரதமராகப் பதவி வகிப்பவர் டேவிட் கேமறூன் ஆவர்.

வார்சியின் பெற்றோர் பாகிஸ்தானிலேயே இருந்திருந்தாலும் அவர் அந்நாட்டில் ஒரு கட்சித் தலைவராக வந்திருக்க முடியுமா? பெனாசிர் புட்டோ, புட்டோவின் மகளாக இல்லாவிடில் ஒரு கட்சித் தலைவராகி இருக்க முடியுமா? குடிபெயர்ந்த ஒரு தலைமுறையில், உலகில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்ட பிரிட்டனில்,  ஒரு முஸ்லீம் பெண்மணி, ஒரு பழம் பெரும் கட்சியின் தலைவராக வர முடிகிறதே.

பிரிட்டிஷ் முஸ்லீம் மதத்தவரிடம் அவருக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தேர்தலில் நின்று (2005) தோற்றுள்ளார். இவரைக் கட்சித் தலைவராக நியமித்துள்ளது, ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களில் பிரிட்டன் பங்கேற்றதால் ஏற்பட்டுள்ள‌ முஸ்லீம் மக்களின் வெறுப்பை ஈடுகட்டும் முயற்சியாகவும் இருக்கலாம்.

முஸ்லீம் மதத்தினர் தங்கள் மதத்தைப் பின்பற்றவும் மசூதிகள் கட்டிக் கொள்ளவும் இங்கு உரிமையுள்ளது. அதே போல் அரசியலில் அவர்கள் பிரதிநிதித்துவம் பெறவும் முடிகிறது. ஆனால் அதை அவர்கள் எப்படிப் பயனபடுத்திக் கொள்ளப் போகிறார்கள்? தமிழர்களுக்கும் இந்திய அரசில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம்?

வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றாலும் குறை கூறுகிறோம். வாய்ப்புக் கொடுத்தால் அதை நடைமுறை சாத்தியமாக எப்படி நம் மொழி, இன நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வது என்று பேரம் பேசலாமே. வாய்ப்பைப் பெற்றத் தனி நபர்களும் அவரின் இனத்தைச் சார்ந்த படித்த, விவரமறிந்த பொது மக்களும் இவ்வண்ணம் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வதே முன்னேற்றப் பாதை. அதை விட்டு விட்டுக் 'கூரை ஏறிக் கோழி பிடிக்கா முடியாத போது (உள்ள வாய்ப்பு, அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்வது) வானம் ஏறி வைகுண்டம் போவதைப் (தனி நாடு/சுயாட்சி பெற்றுப் புரட்சிகரமாக முன்னேறுவது) பற்றிக் கனவில் மயங்கினால் பிற இனத்தினர் நம்மை ஓரங்கட்டி விட்டு உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.

பால் விலை தெரியாத பணக்காரப் பயல்கள்
http://www.bbc.co.uk/news/uk-politics-17815769

பிரிட்டனின் (கன்சர்வேடிவ் கட்சி) பிரதமர், நிதியமைச்சர் இருவரையும் 'பால் விலை தெரியாத பணக்காரப் பயல்கள்' என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நதின் டோரிஸ் என்ற பெண்மணி குற்றம் சாட்டியுள்ளார். 'உட்கட்சி ஜனநாயகம்' என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்தியத் திரு நாட்டில் இது போன்று பேச்சுச் சுதந்திரத்தை யாரும் தவறிக் கூடப் பயன்படுத்தி விட முடியாது.

இங்குள்ள மூன்று பெரும் கட்சிகளிலும் (கன்சர்வேடிவ், லேபர், லிபரல் டெமாக்ரெட்) பின்னிருக்கை (back bench) பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  அவர்கள் கலகக்காரர்கள் போல் இருந்து கட்சித் தலைமையோ அரசாங்கமோ எதேச்சதிகாரமாகப் போய் விடாது 'கலவரம்' செய்து கொண்டே உள்ளார்கள். அவர்களை, கட்சித் தலைவர்களுக்குப் பயந்து கொண்டோ கட்சிகளிடம் 'கவர்' வாங்கிக் கொண்டோ, ஊடகங்கள் புறக்கணிக்காது உள்ளன. அரசு விளம்பரங்கள் கிடைக்காது என்று பயப்படும் நிலையிலும் இங்குள்ள ஊடகங்கள் இல்லை. அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டுப் புடைக்கச் சொன்னால் (கட்சித் தலைமையோ, அமைச்சர்களோ) அதை 'மாற்றலு'க்குப் பயந்து கொண்டு பணிந்து செய்யும் காவல் துறையும் இங்கு இல்லை. இவ்வாறு இங்கு இல்லாததெல்லாம் நம் நாட்டில் எவ்வளவோ உள்ளன! இங்கிலாந்து பாராளுமன்ற மக்களாட்சி நம்மிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்!

அப்படி அந்தக் 'கலகக்காரப்' பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கக் காரணம் அவரவர் தொகுதி மக்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளும் அவற்றைக் காப்பாற்ற அவர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்காவிடில் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க முடியாது என்பதும் ஆகும். ஆக, மக்களாட்சியில் மக்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தான் எல்லாம் உள்ளன.

பிரிட்டனில் பொருளாதார அமைப்பை 180 டிகிரி திருப்பிப் பல சாதனைகளையும் வேதனைகளையும் சாதித்தவர் பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர். ஆனால் அவர் மூன்றாம் முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமர் ஆனாலும் (அவரின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து) அவர் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் தான் பதவி விலக வேண்டியதாயிற்று. நாட்டில் ஜனநாயகம் நிலவ கட்சிக்குள் ஜனநாயகம் வேண்டும்; வீட்டில் ஜனநாயகம் வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/Margaret_Thatcher

தமிழ்நாடி
ஆனி 8  திருவள்ளுவர் ஆண்டு 2043 (22 சூன் 2012)

கடல் கடந்த மடல் 1

ஆனி 9, திருவள்ளுவர் ஆண்டு 2043 (23 சூன் 2012)

தமிழ் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வெளியாகி வரும் 'முகம்' என்ற சிற்றிதழுக்காக எழுதுவது இங்கு பகிர்ந்து கொள்ளப் படுகிறது.

***

கடல் கடந்த மடல் 1

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நாம் தமிழ்நாட்டின் நலம் நாடுவோர். அதனால் நாம் தமிழ்நாட்டு நலத்தின் 'நாடி'கள். நம் நாடித் துடிப்பில் தமிழ்நாட்டின் நலம் நாடுதல் உள்ளவரை வீடும் நாடும் நானிலமும் நனி சிறக்கும்!

போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் சுருங்கியிருக்கலாம். ஆனாலும் உள்ளம் விரிந்ததா? பல வகை ஊடகங்கள் வழித் தகவல்கள், இன்று நம் வீட்டிற்குள், அணுகுவதற்கு இலகுவாகக் குவிந்திருக்கலாம். ஆனால், இன்றைய வேலைச் சுமையும் வாழ்க்கை ஓட்ட வேகமும் கேளிக்கை வாய்ப்புகளும் அவற்றைப் படித்து, கலந்து, தேர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் ஓய்வு நேரத்தையும் உள ஆற்றலையும் குறைத்து விட்டனல்லவா? துரித உணவுப் (fast food culture) பண்பாடு, துரிதத் தகவல் (fast / ready / immediate information) தேவையையும் உருவாக்குகிறது.

இம்மடல் ஒரு துரிதத் தகவல் பலகணி. உலகச் செய்திகளை, எழுதுபவர் அறிந்து உணரும் வண்ணம், இதன் வழியாக வாசகர்கள் அறியலாம். ஒருவரின் பார்வை என்பதால், அவரின் மனநிலையைப் (அறிவு, அனுபவம், பக்குவம்...) பொறுத்து ஓரப் பார்வையாக, ஒரு பக்கப் பார்வையாகத் தான் இருக்கும். சிந்தித்துப் பார்த்து மெய்ப்பொருள் காண்க!

பிரான்ஸ் - பிரிட்டன்

பிரான்ஸ் நாட்டில், புதிய குடியரசுத் தலைவர் பிரான்சுவா ஒலண்ட் பதவி ஏற்கும் முன்பே, அவர் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு விட்டன. பாரீஸ் நகரிலும் வேறு ஒரு சுற்றுலா நகரிலும் அவருக்குள்ள வீடுகள், அவற்றின் மதிப்புகள், அவரின் வங்கிக் கணக்குகளின் விவரங்கள், எல்லாம் பொதுமக்கள் பார்வைக்கு அரசிதழில் வெளியிட்டுள்ளார்கள். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை முன்னிட்டு, தன் சம்பளத்தை 30% குறைத்துக் கொள்வதாகப் புதிய குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற சில இடைத் தேர்தல்கள், பல உள்ளூராட்சி தேர்தல்கள் இவற்றில் ஆளும் கன்சர்வேடிவ், லிபரல் டெமாகெரட் கட்சிகள் பல தோல்விகளைத் தழுவிக் கொண்டுள்ளன. இவ்விரண்டுக் கட்சிகளும் கூட்டணி அரசை நடத்தி வந்தாலும் தேர்தலில் தனித் தனியாகவே (கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது போல்) போட்டியிட்டன.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமறூன் (பிரிட்டிஷ் பிரதமர்), லிபரல் டெமாகெரட்க் கட்சித் தலைவர் நிக் கெளுக் (பிரிட்டிஷ் உதவிப் பிரதமர்) இருவரும் சேர்ந்து, நிலவும் பொருளாதார வீக்கத்தால் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்று நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; அதைச் சரி செய்து கற்றுக் கொண்டு செயலாற்றுவோம் என்று அறிவித்துள்ளார்கள்.

உலகில் இப்படியும் நாடுகள் இருக்கின்றன. இப்படியான தலைவர்களும் இருக்கின்றார்கள் என்பது, இந்தியாவும் இப்படி ஒரு நாள் ஆகும், இந்தியாவிலும் இப்படியான தலைவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. பிரான்சிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிகள் எல்லாம் இந்தியாவிற்கு வரும் போது, அவர்களின் மனப்போக்கில் உள்ள வளர்ச்சிகளும் இந்தியாவுக்கு வரக் கூடாதா; வர முடியாதா? தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கொண்டும் வரும், கற்றுக் கொள்ளும் முயற்சிகள் போல் இவற்றைக் கொண்டு வரவும் நடைமுறைப் படுத்தவும் முயன்றால் முடியாமலா போய் விடும்?

ருசிய நாட்டு டால்ஸ்டாயால் இந்திய காந்தி ஊக்கம் பெற்றார். இந்திய காந்தியால் அமெரிக்க மார்டின் லூர்தர் கிங் ஊக்கம் பெற்றார். அது போல், இன்றைய மேற்குலக மக்களாட்சி நடைமுறைகளிலிருந்து நாம் கொள்வன கொண்டு தள்வன தள்ளுவோமாக.

தமிழ்நாடி.

வைகாசி 24  திருவள்ளுவர் ஆண்டு 2043 (6 சூன் 2012)

யார் தமிழர்?

ஆனி 9 திருவள்ளுவர் ஆண்டு 2043 (23 சூன் 2012)
 
'சிறகு' இணைய தள இதழில் 'யார் தமிழர்?' என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. 
http://siragu.com/?p=3527