Monday, 1 November 2021

தத்துவம் - தர்க்கம் - அறிவியல் - பொது அறிவு - மெய்யுணர்வு

தத்துவம் - தர்க்கம் - அறிவியல் - பொது அறிவு - மெய்யுணர்வு


26-Oct-2021


தத்துவம் சரி தவறு என்ற வரையறைக்குள் வாதிடுவது. அதற்குத் தர்க்கம் பயன்படும்.

 

அறிவியல் என்பது பரிசோதனையில் நிரூபிக்க அல்லது பொய்ப்பிக்கப் படுவது.

 

ஆனால் மெய்யுணர்வு என்பது தத்துவம் அன்று; தர்க்கமும் அன்று. அறிவியலும் அன்று. பொது அறிவும் அன்று

 

ஆனால் மெய்யுணர்வு உண்மையைச் சுட்டிக் காட்டத் தத்துவம், தர்க்கம், பொது அறிவு, பரிசோதனை அறிவியல், கருதுகோள் அறிவியல், இலக்கியம், புராணம், இதிகாசம், நகைச்சுவை, கிண்டல், கேலி, விளையாட்டு... என எல்லாமும் பயன்படுத்தப்படும். 

 

மேலும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை, எதிரானவை கூடப் பயன்படுத்தப்படும்.

 

மெய்யுணர்வின் நோக்கம் சரி, தவறு போன்ற இருமை வரையறைகளைத் தாண்டி, அவை எழும் இரண்டற்ற‌ பின்புலத்தைச் சுட்டிக் காட்டுவதே. அதுவே நம் ஒவ்வொருவரின் உண்மை இருப்பு (சுயம்) என்பதை உணர்ந்து கொள்ள உதவுவதே. 'நான்' என்ற பிறவற்றிலிருந்து தூண்டித்த பிரிவினை உணர்வின் பொய்மையைப் புரிந்து கொள்ள உதவுவதே.

 

சுட்டிக் காட்டப்படுவது என்னவென்றால், எங்கிருந்து அவ்விதம் சுட்டிக் காட்டப்படுவது (மற்றும் எல்லாமும்) எழுகின்றது என்பதே.

 

அதனால் வழக்கமான படிப்பு, கேள்வி பதில், சிந்தனை ஆராய்ச்சியில் தொடங்கினாலும் மெய்யுணர்வுத் தேடல், அவற்றில் மட்டுமே நிற்கும் வரை தடைப் பட்டுத் தேங்கி விடும். மேலும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வதாகத் தோன்றும். 'நீ இல்லை' என்றும் அதே சமயம் 'நீயே எல்லாம்' என்றும் பிதற்றுவதாக இருக்கும். மாயை என்பதே ஒரு மாயை என்று வாய்க்கு வந்தபடி உளறுவதாகவும் குழப்புவதாகவும் படும்.

 

நீளத்தை அளக்க கிலோ கிராம் அலகைப் (unit of measure) பயன்படுத்த மாட்டோம். வெப்பத்தை அளக்க மீட்டர் அலகைப் பயன்படுத்த மாட்டோம்.

 

அதே போல், தத்துவத்தின், தர்க்கத்தின், பரிசோதனை அறிவியலின்... அலகுகளைக் கொண்டு மெய்யுணர்வு உண்மையை சரி / தவறு என்று அளக்க முடியாது.

 

மெய்யுணர்வு உண்மையின் அலகு / சான்று மெய்யுணர்வே தான்.

 

அப்படியென்றால் ஏன் தத்துவம், தர்க்கம், அறிவியல் போன்றவை மெய்யுணர்வுத் தேடலில் பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்வி எழும். அவை ஏற்கனவே உள்ள நம்பிக்கைகளை அசைப்பதற்கும் அவற்றின் அனுமான அடிப்படைகளை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

 

கீழ்க்கண்டது போல் ஒப்புமை, உவமைகளுக்காகவும் அவை பயன்படுத்தப் படுகின்றன.

 

கடற்கரையில் இருந்து பார்க்கும் போது கரையை விட்டுச் செல்லும் கப்பலின் அடிப்பகுதி முதலிலும் அதன் பாய்மரம் கடைசியிலும் மறைகிறது. கரையை நோக்கி வரும் கப்பலின் பாய்மரம் முதலிலும் அடிப்பகுதி கடையிலும் தெரிகின்றது.

 

இந்த தரவைக் கொண்டு பூமியின் மேற்பரப்பு வளைந்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவது போல், மெய்யுணர்விலும் தர்க்கம், தத்துவம் எனப்பல வழிகளில் சுட்டிக் காட்டப்படுவதை உய்த்து உணர (அப்படி உணருவதே அது) வேண்டும்.

 

அதே சமயம் கீழ்க்கண்ட உவமைகளால் அறிவுணர்வுப் பின்புலத்தை உய்த்துப் புரிந்து கொள்ளலாம்.

 

கட்புலன் இருப்பதற்குச் சான்று காண்பது. செவிப்புலன் இருப்பதற்குச் சான்று கேட்பது. இது போல் மற்ற புலன்களுக்கும்.

 

எதையும் காணாவிடில் கட்புலன் இல்லை என்று ஆகி விடாது. எதையும் கேட்காவிடில் செவிப்புலன் இல்லை என்று ஆகி விடாது. அப்புலன்கள் இருக்கவே செய்யும்.

 

அதே போல் அறிவுணர்விற்குச் சான்று அறிவது. எதையும் அறியாத போதும் (கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில், மயக்கத்தில்...) அறிவுணர்வு இருக்கவே செய்யும்.

 

அதே போல் பயன்படுத்தப் படும் மற்றோர் உத்தி தோற்ற இருப்பு / மாயை (as-things-appear), உண்மை இருப்பு (as-things-really-are) என்ற பிரிவு ஆகும். தேடலின் முதல் கட்டங்களில் ஏற்கனவே உள்ள நான், உலகப் பார்வைகளின் கதைத் தன்மையை உணர்த்த அப்பிரிவு பயன்படுத்தப்பட்டாலும் தேடலின் இறுதியில் அப்பிரிவும் பொய்யே (அதாவது உள்ள இருப்பு ஒன்றே, அதுவே தோற்றமாகவும் அத்தோற்றத்திற்கு அப்பாற்பட்டதாகவும் ஒளிர்கிறது) என்று உணர்ந்து கொள்வதில் வந்து முடியும்.

 

அடுத்து இதை உணருவதால் என்ன பயன், உணராவிடில் என்ன நட்டம் என்று கேட்கலாம்.

 

இதை உணர வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உணர்ந்தாலும் உணராவிடிலும் உள்ளது உள்ளபடியே உள்ளது.

 

பயன் / நட்டம் என்பன தோற்றத்திற்குள் உள்ள கருத்துகள். அவை அப்படியானவை (தோற்றத்திற்குள் உள்ள கருத்துகள்) என்று உணர்வதே அதன் பயன் என்றும் அப்படி உணராததே நட்டம் என்று ஒரு வகையில் சொல்லலாம்.

 

தங்கத்தின் மதிப்பு என்று தனியாக எதுவும் இல்லை. மனிதர்களிடம் மட்டுமே தங்கத்திற்கு மதிப்பு உண்டு. மனிதர்களிலும் 'நாகரிக' சமுதாயத்தோடு தொடர்பற்ற‌ வேட்டையாடி வாழும் காட்டு வாசிகள் சமூகத்தில் அதற்கு மதிப்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை.

 

அதே போல் அன்றாட வாழ்வில் ஒரே சமுதாயத்திற்குள் ஒரு குழுவினருக்கு முக்கியம் என்று படுவது பிற குழுவினருக்குப் படுவதில்லை.

 

அதே போல் மெய்யுணர்வுப் புரிதல் எல்லோருக்கும் முக்கியமில்லை என்றும் சொல்லலாம்.

 

என்றாலும் எல்லாக் குழுவினரும் முக்கியம் என்று கருதுபவையும் (சாலை விதிகள் போன்றவை) உள்ளன.

 

சாலை விதிகள் முக்கியம், பயனுடையவை என்று எல்லோரும் கருதினாலும் அதைப் பின்பற்றுவதில் பெரும்பாலோர் கவனம் செலுத்தினால் தான் அதன் பயன் கூடும்.

 

அந்த வகையில் மெய்யுணர்வுப் புரிதல் எல்லோருக்கும் முக்கியம் இல்லை என்றாலும் எல்லோரும் (சமுதாய அளவில்) அதனால் (அது வாழ்வின் வளர்ச்சி, முதிர்ச்சிக் கட்டத்தில் பரவலாக வரவில்லை என்றால்) பாதிக்கப்படுவதால் (நட்டம்) கணிசமானோர் அதைப் புரிந்து, உணர்ந்து, பின்பற்றி வாழும் போது அதன் முக்கியத்துவம் பயன் கூடும். ஆனால் அது பக்கவிளைவே தவிர, மெய்யுணர்விற்குப் பொருட்டன்று. மெய்யுணர்விற்கு மெய்யுணர்வே பயன்.


Friday, 20 August 2021

மனதைக் கட்டும் முன் மனதைக் காட்டு!

மனதைக் கட்டும் முன் மனதைக் காட்டு! - சரியாரந்தம்

2021-Aug-19

மனம் என்று தனியாக எதுவும் இல்லை. அஃது ஒன்றன் பின் ஒன்றாக வரும் சிந்தனைகளின் தொடர்ச்சியே.

ஆறு என்று தனியாக, ஓடும் நீரைத் த‌விர்த்து எதுவும் இல்லை என்பது போல் தான் இதுவும்.

ஆனால் நீர் ஓடாத போதும் அது ஓடிய‌ மணல் தடத்தை ஆறு என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம். அது சரியான பயன்பாடு இல்லை. 

நாம் சொற்களைக் கறாரான பொருளுடன் (அர்த்தம்) பெரும்பாலும் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்த முனைந்தால் கோடி கோடியான புதுச் சொற்கள் தேவைப்படும். எனவே நாம் நம்மிடம் இருக்கும் சொற்களையே இடம், பொருளுக்குத் தக்கவாறு மீளப்  பயன்படுத்துகிறோம்; புரிந்து கொள்கிறோம்.

நம்மை இவ்வுடல், சிந்தனைகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பதில் தொடங்கி எல்லாவற்றையும் நாம் பொருண்மைப் படுத்திப் (objectification) பார்க்கிறோம். 'பொருண்மைப் படுத்தி', 'பார்க்கிறோம்' என்று சொல்லும் போது (இது மொழியின் சிக்கல் / கட்டுமானம், அதைப் பிறகு பார்ப்போம் - subject - verb - object structure) ஏதோ இரண்டு தனித்தனியான செயல்களாகத்  (two separate processes) தவறான பொருளைத் தருகின்றது.

உண்மையில் பொருண்மைப் படுத்துவதும் (objectification) பார்ப்பதும் (perception) ஒன்றே. பொருண்மைப் படுத்துதலே பார்த்தல்; பார்த்தலே பொருண்மைப் படுத்துதல்.

இலைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'மரம்' என்ற ஒரே சொல்லைக் கொண்டு குறிக்கிறோம். இது நாம் செய்யும் மற்றொரு ஏமாற்று (தனக்குத் தானே) வித்தையைக் காட்டுகிறது. அதாவது ஒன்றைப் பொருண்மைப் படுத்த நாம் அதைச் சாராம்சப் படுத்தவும் (abstract) வேண்டும்.

ஆறு, மரம்... என்று சொல்லும் போது ஒரு குறிப்பிட்ட நிலையான வடிவத்தை நாம் சொல்வதில்லை. பலவிதமான வடிவங்கள், நிலைகளின் தொகுப்பில் நாம் சாராம்சமான கூறுகளை, பண்புகளை மட்டுமே குறிக்கிறோம். இதை நாம் எந்தவிதமான தன்னுணர்வு (conscious / intentional effort) முயற்சி இல்லாமலே செய்கிறோம், குழந்தைப் பருவத்திலிருந்தே.

எனவே நம்மால் அந்தச் சொல்லை எல்லா மரங்களையும் எல்லா ஆறுகளையும் அவற்றின் எல்ல நிலைகளையும் (நீர் ஒடுவது, ஒடாதது, இலைகள் உள்ளது, இல்லாதது, கிளைகள் உள்ளது, இல்லாதது...) குறிக்கப் பயன்படுத்தவும் புரிந்து கொள்ளவும் முடிக்கின்றது.

இதை நாம் பயன்படுத்தும் எல்லா சொற்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்: நாற்காலி, வண்டி, விலங்கு, பூ, பழம், மேகம், மலை...

[In reality, there are no objects / things; they are never static; all such objects are concepts (abstractions); what exists includes such concepts and beyond (not captured by such) concepts. As concepts they are 'real'; as reality they are just concepts. ]

இதற்கு மாறாக நாம் ஒன்றைக் குறிக்கப் பல சொற்களைப் பயன்படுத்தவும் செய்கிறோம். இதற்கும் நாம் சில வசதிக்கேற்ற எல்லைகளை வகுத்துக் கொள்கிறோம்.

ஒரே நீர் ஒட்டத்தை, அருவி என்றும், ஆறு என்றும், கால்வாய் என்றும் பல சொற்களால் இடம், பொருளுக்குத் தக்கவாறு குறிக்கிறோம்.

அதனால் மனம், நினைவு, சிந்தனை எல்லாம் ஒரே செயல் ஓட்டத் தோற்றத்தைக் (apparent process) குறிக்கப் பயன்படுத்தும் பல சொற்களே.

ஓர் அக உறுப்பாகப் பார்க்கும் போது 'மனம்' என்கிறோம். சில சிந்தனைகள் முன்பு நடந்ததானவை (அதுவும் தோற்றமே) பற்றி இருப்பதை 'நினைவு' என்கிறோம். மற்றவற்றை 'சிந்தனை' என்று பொதுவாகச் சொல்கிறோம். பகல் கனவு, கற்பனை என்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை அனைத்தும் எண்ண ஓட்டங்களே. எண்ண ஓட்டங்களைப் பற்றிச் சிந்திப்பதும் எண்ண ஓட்டங்களே. 

எனவே மனத்தைக் கட்டுப் படுத்துவது என்பதும் சிந்தனைகளைக் கட்டுப் படுத்துவது என்பதும் ஒன்றே.

எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றனவோ (இந்த சொல்லே 'எண்ணங்கள் எங்கோ ஓர் இடத்தில் தங்கி இருப்பது போலவும் அங்கிருந்து எழுந்து வருவது போலவுமான' ஒரு பொய்யை / மாயையைக் கொண்டுள்ளது) அதே மூலத்திலிருந்து அவ்வெண்ணங்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்ற எண்ணங்களும் எழுகின்றன.

மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாவிடில் மகிழ்ச்சி என்பதும் இல்லை. எனவே மகிழ்ச்சி என்பதும் எண்ணமே.

"If you are happy and you don't know you are happy, there is nobody home" - Alan Watts

We can also reverse this as: if you don't know (think) you are happy, you are not happy at all!

இது துன்பத்திற்கும் பொருந்தும். துன்பப்படுகிறேன் என்ற எண்ணம் இல்லாவிடில் துன்பம் இருக்குமா?

இதை ஒத்துக் கொள்வதோ, மறுப்பதோ எல்லாம் எண்ணங்களே.

எல்லாம் (நான், பிற, உலகம், பிரபஞ்சம், மகிழ்ச்சி, துயரம், நன்மை, தீமை, நீதி, அநீதி, அடிமைத்தனம், விடுதலை...) எண்ணங்களாக உள்ளதை புரிந்து கொள்வதும் ஓர் எண்ணமாக இருந்தாலும் அவ்வெண்ணம் எண்ணங்களின் காலை வாரிவிட்டு வீழ்த்துவதாகும்; முள்ளை முள்ளால் எடுப்பது போல்; எடுத்தவுடன் குத்திய முள்ளையும் எடுக்க உதவிய முள்ளையும் தூக்கி எறிந்து விட வேண்டும்.

அதுதான் நாம் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய தேவை.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
அல்கா நல்குரவு அவா எனப்படுமே (குமரகுருபரர்)

சிந்தனை (மனம்) நிறைவு என்பது தான் செல்வம் (பொருள் செல்வம், அருள் செல்வம், அறிவுச் செல்வம், உறவுச் செல்வம், புகழ்ச் செல்வம், சாதனைகள், வீடுபேறு... எல்லா வகைகளுக்கும் பொருந்தும்).

அதற்கு மாறாக ஆசை (அவா) இருப்பது தான் தீராத (அல்கா) வறுமை (நல்குரவு) ஆகும். இது எல்லா வகை ஆசைகளுக்கும் (சிந்தனைகளைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பது உள்பட) பொருந்தும்.

The aim is not, to be happy (not, to think) but to be free from the need to be happy (to think).

நம் தேவை மகிழ்ச்சியாக இருப்பதன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருப்பது ஆகும்.

நம் தேவை சிந்திப்பதைக் கட்டுப்படுத்துவது அன்று; சிந்திப்பதைக் கட்டுப்படுத்தும் தேவை (ஆசை) இல்லாமல் இருப்பது ஆகும்.

குழப்பமான தெளிவு இதுதான்!

கேட்கிறவருக்குப் புரியவில்லை என்றால் அது சித்தாந்தம்; சொல்பவருக்கும் புரியவில்லை என்றால் அது வேதாந்தம்!

புரிய வேண்டிய தேவையே இல்லை என்றால் அது சரியாரந்தம் ('சரி யார்?'  என்பதன் அந்தம்/முடிவு).

சரியார் என்றால் சரி யார் (யார் சரி)?
சரியார் என்றால் சரிய (வழுக்கல், வீழ்தல் இல்லாத‌ வழி) மாட்டார்.

Tuesday, 17 August 2021

குழந்தைகளுடன் தத்துவ உரையாடல் Philosophy With Children

குழந்தைகளுடன் தத்துவ உரையாடல் Philosophy With Children

22.05.2021

https://aeon.co/essays/how-to-do-philosophy-for-and-with-children

அனுப்புகிறவரின் அளப்பு - Sender’s Measure

பிடிவாதம் யாருக்கு?

மூன்று வயது பேத்தி பாட்டியுடன் வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பியவுடன் தன் ஆடையை மாற்றும் படிக் கேட்கிறாள். பாட்டியோ வேறு வேலைகளில் மூழ்கித் தட்டிக் கழிக்கிறார்.

'இராத்திரி ஆயிடுச்சு, இந்த டிரஸுடன் படுத்தால் என்ன? இப்ப எதுக்கு மாத்தனும்?' என்று சில முறைகள் சொன்னாலும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் பேத்தி, சட்டென்று, உள்ளங்கைகளை விரித்து மேலும் கீழும் ஆட்டிக் கொண்டு, 'ஏன் பாட்டி இப்படி பிடிவாதம் பிடிக்கிறே? டிரெஸ மாத்துன்னு சொன்னா மாத்த வேண்டியதுதானே?' என்று கடிந்து கொள்கிறாள். யாருக்குப் பிடிவாதம் என்பது நொடியில் மாறி விடுகிறது. இது அடவியின் இரண்டாம் மகள் வாகையின் வாய்த் தோகை.

யார் கண்டு பிடித்தார்கள்?

அதே போன்ற வயதில், நம் குழுவில் இருக்கும் நண்பன் சண்முகசுந்தரத்தின் மகன், ஓசூரில் வாழும் போது, ஒரு நாள் கேட்டான், 'பெங்களூரை யார் கண்டு பிடித்தார்கள்?'. குழந்தைகள் தான் இப்படியெல்லாம் கேட்க முடியும். வளர்ந்தவர்கள் வளைய முடியாதபடி முற்றிக் கெட்(டு)டிப் பட்டு விட்டோம்.

எஞ்சின் டிரைவரின் பிரச்னை

என் தம்பி திருவள்ளுவன் மூன்று / நான்கு வயதில், ரயிலில் போகும் போது, 'எஞ்சின் டிரைவர் எங்கு ஒன்னுக்குப் போவார்?' என்று கேட்க, எங்கள் அப்பா அடுத்த நிறுத்தத்தில் அவனுடன் சென்று இஞ்சின் டிரைவரிடமே கேட்க, டிரைவர் சிரித்துக் கொண்டு, 'ரயில் நிற்கும் போது ஸ்டேஷனில் அல்லது அடுத்த பெட்டியில் போவோம்' என்று சொன்னார்.

ஏன் எல்லாம் இலவசமாக இருக்கக் கூடாது?

அளவறி தொடக்கப் பள்ளிப் பருவத்தில், 'நான் ஏன் பள்ளிக்குப் போக வேண்டும், நீங்களே வீட்டில் சொல்லிக் கொடுக்கலாமே?' என்றான். ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு அப்பாதான் உலக மகா ஜீனியஸ்!

அவனே உயர்நிலைப் பள்ளி வயதில், 'ஏன் எல்லாம் இலவசமாக இருக்கக் கூடாது?' என்று கேட்டான். அவனுக்குப் பண்டமாற்று முறையை விளக்கி விட்டு, நான் படித்த எரிக் டெக்ஸ்லரின் புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வரும் காலத்தில் அது எல்லாம் இலவசமாக ஆகலாம் என்று நானோ (nano) தொழில்நுடபப் புரட்சியைப் பற்றி அளந்தேன்.

https://en.wikipedia.org/wiki/K._Eric_Drexler - Engines of Creation (Foreward by Marvin Minsky).

யோசித்து வாழணுமா?

மேல்நிலை பள்ளிப் பருவத்தில் அளவறி, 'நாம் ஏன் யோசித்து எதையும் செய்ய வேண்டும்? அவ்வப்போது தோணும் படி வாழ்ந்தால் என்ன?' என்று கேட்டான். 'அப்படியும் வாழலாம். எப்படி வாழ்ந்தாலும் தொடர் விளைவுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று நம்முடைய தத்துவச் சாறைப் பிழிந்தேன்.

அப்படி கேட்ட அளவறி கல்லூரிப் பருவத்தில், அவனுடைய முகநூலில், சாக்ரடிஸின், 'யோசித்து வாழாத வாழ்க்கை பயனற்றது' என்ற பொன்மொழியைப் போட்டிருந்தான்; கெட்டு விட்டான்!

"The unexamined life is not worth living" (Socrates)

குழந்தைகள் வளராத பெரியவர்கள் என்பது நம்மிடையே ஊறி உள்ளது. ஆனால் அவர்களும் மக்களே. இதைப் பத்து வயது சிறுவன் கூறியதாகக் கீழ்கண்ட கட்டுரையில் இப்படி உள்ளது:

“குழந்தைப் பருவம், பெரிய‌ பருவம் என்பன வெறும் கருத்துகளே. அவை  உண்மையில் இல்லாத பிரிவினைகளை உண்டாக்குகின்றன. எல்லோரும் மக்களே.”

பிள்ளைகளிடம் தத்துவம் பேச என்றே அமெரிக்காவில் வாஷிங்டனில் பள்ளி நடத்தி வரும் ஜானா மோர் லோன் என்ற வாஷிங்டன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியையின் கட்டுரை மேலே உள்ளது.

தத்துவம் என்பது இல்லாமல் யாரும் வாழ இயலாது. அதை அப்படித் தெரிந்து புரிந்து வைத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதர் ஒவ்வொருவரும் எதைச் செய்யலாம், செய்யக் கூடாது, எது நல்லது, எது கெட்டது, எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துகள் கொண்டிருப்பார்கள். அதற்கு பண்பாடு, பழக்க வழக்கம், மரபு, உலகப் போக்கு போன்றவை காரணங்களாக நாம் நினைத்துக் கொண்டு இருந்தாலும் அவற்றிற்கும் அடித்தளமாக தத்துவம் என்பது இருக்கவே செய்கின்றது.

இது வளர்ந்த பெரியவர்களுக்குத் தீடிரென்று ஒரு குறிப்பிட்ட வயதில் வந்து உதித்து விடுவதில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே அந்த பார்வையும் புரிதலும் இருந்து வளர்ந்து வருகிறது.

அதில் குழந்தைகளின் கற்பனை வளம் கொண்ட, கட்டற்ற, திறந்த மனதுப் பார்வையைப் பெரும்பாலோர் பெரிய வயதில் இழந்து இறுகி விடுகிறோம்.

குழந்தைகளுடன் வழக்கமான பெரிய மனிதத் தனமாக உறவை விடுத்து, இருவருமாக சேர்ந்து புதிய உறவில், உரையாடலில் நாம் குழந்தைகளாகப் பெற்றிருந்து இழந்த விட்ட ஆர்வம், ஆச்சரியம், ஆக்கம், கற்பனை போன்றவற்றை கொஞ்சமாவது மீட்கலாம்.

நம் வியர்வை நம்மைக் காட்டிக் கொடுக்கும் - கட்டிக் காக்கவும் செய்யலாம்

 நம் வியர்வை நம்மைக் காட்டிக் கொடுக்கும் - கட்டிக் காக்கவும் செய்யலாம்

13-Aug-2021

அனுப்புகிறவரின் அலம்பல்:

சேலை கட்டும் பெண்ணுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தனித்துவமான வாசம் உண்டு.

மனிதன் மட்டும் தான் பெயர் வைக்கிறான். 'மனிதன்' என்ற பெயரை விடப் 'பெயரன்' என்ற பெயர் மனிதனுக்குப் பொருத்தமானதாகும்.  மற்ற உயிருள்ள, உயிரற்றவற்றிற்கும் மனிதனே பெயர் கொடுக்கிறான். நாமம் (பெயர்) இல்லாது ரூபம் (வடிவம்) இல்லை. 

மற்ற உயிரினங்கள் தனி நபரை அறிந்தும் தெரிந்தும் வைத்துள்ளன என்பதை மனிதன் விலங்குகளோடு கொள்ளும் உறவாலும் அறிவியல் ஆய்வுகளாலும் அறிகிறோம். ஒரு மாடு/ஆடு/நாய்/சிங்கம்/புலி/எறும்பு... தன் இனத்தை/குழுவைச் சேர்ந்த மற்றொரு தனி நபரை அடையாளம் கண்டு கொள்வது வேதியியல் சமிஞ்கைகள் மூலமே. அதாவது ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவமான வாசனை இருக்கிறது. மனிதனும் இப்படி தான் பிறப்பில் இருக்கிறான். மனிதக் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்வது பார்வையால் அன்று. அதற்குச் சில மாத வளர்ச்சி தேவை. அதற்கு முன் அது தாயின் வாசனையைக் கொண்டே அறியும். அதே போல் தொடுதல் மூலமும் அறியும்.

'ஔவை சண்முகி' திரைப்படத்தில் கமல், 'சண்முகி' வேடத்தில் தன் மகளுக்குக் குளித்த பின் துவட்டி விடும் போது, சிறுமி கமலை அடையாளம் கண்டு கொள்ள, 'கள்ளி, எப்படிக் கண்டு பிடிச்சே' என்று 'சண்முகி' கேட்க, சிறுமி, 'அப்பா வாசனை எனக்குத் தெரியுமே' என்பாள். கதை வசனம் எழுதிய கிரேஸி மோகன் நிச்சயம் கிரேஸி (crazy) இல்லை.

சிந்திக்கத் தொடங்கும் மனிதன் படிப் படியாக வாசனை நுட்பத்தை இழக்கிறான். மேலும் வாசனைக் குழப்பதை/ஏமாற்றதை உண்டு பண்ண பலவிதமான வாசனைப் பொருள்களைப் பூசிக் கொள்கிறான்.

கூந்தலுக்கு இயற்கையான‌ வாசனை (திருவிளையாடல்) இருக்கிறதோ இல்லையோ, மண்டையில் வேர்த்தால் அது கூந்தலுக்கும் வாசம் தரும். மண்டை காச்சல் வேறு மண்டை வேர்த்தல் வேறு என்று சொல்லாமலே நமக்குத் தெரியும்!

மற்ற விலங்குகள் தனி நபரை அடையாளம் கண்டு கொண்டாலும் அந்தத் தனி நபர் எதிரில் இல்லாத போது எப்படி அதை அடுத்த தனி நபருக்குக் குறிப்பிட்டுத் தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பதை இதுவரை அறிவியலால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. எடுத்துக் காட்டாக, குழுவாக வேட்டையாடும் காட்டு நாய், ஓநாய், சிங்கம் போன்ற விலங்குகள் குழுவின் உறுப்பினர்கள் கண்ணுக்குத் தெரியாமல் (புதர் மற்ற மறைவுகளில்) இருக்கும் போது எப்படியான தகவல் பரிமாற்றம் செய்து வேட்டையாடுதலை ஒருங்கிணைக்கின்றன என்பது வியப்பே. 

சில விலங்குகள் பல குட்டிகள் போடுகின்றன. அவை தாயைத் தொடர்ந்து செல்கின்றன. சில தாய் விலங்குகள், பாதுகாப்பு கருதி, தங்கள் குட்டிகளை ஒவ்வொன்றாக அடிக்கடி வெவ்வேறு மறைவிடத்திற்கு எடுத்துச் சென்று சேர்க்கின்றன. தாயைப் பின்பற்றும் குட்டிகளில் ஒன்று பின் தங்கி விடுகின்றது; வழி தவறி விடுகின்றது.

இது போன்ற நேரங்களில் அத்தாய் விலங்குக்குத் தனக்கு எத்தனை குட்டிகள் உள்ளன என்ற எண்ணிக்கை எப்படித் தெரிகின்றது? அதற்குக் கணக்கு (1,2, 3...) தெரியுமா?

குட்டிகளுக்குப் பெயர் வைப்பதில்லை; வருகைப் பதிவு எடுப்பதில்லை. வாசனையைப் பயன்படுத்தினாலும் எத்தனை விதமான வாசனை என்ற கணக்கு தெரிய வேண்டுமே.

ஆனால் எப்படியோ குட்டிகளைத் தவற விடாமல் தாய் பாதுகாக்கின்றது.

டிஸ்கவரி, பிபிசி போன்ற டிவி ஆவணப்படத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது: ஆப்பிரிக்கப் புதர் மனிதர்கள் (bush people), வேட்டையாடி வாழ்பவர்கள் (hunter-gatherer) பற்றியது. அப்பழங்குடிக் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் வாசனையும் மற்ற எல்லோருக்கும் தெரியும் என்று சொல்கிறார்கள். அக்குழுவைச் சேர்ந்த ஒருவர், மணலில் உள்ள ஒரு கால் தடயத்தை முகர்ந்து பார்த்து, இன்னார் இத்தனை மணி நேரத்திற்கு முன்பு இத்திசையில் சென்றார் என்று சொல்கிறார்.

சரி, ஆலாபனை எல்லாம் முடிந்து இப்ப கச்சேரிக்கு / கட்டுரைக்கு வருவோம்.

வியர்வை வெளிப்படுத்தும் இரகசியங்கள் பற்றியது.

நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் (லண்டனில்) ஒரு பிப்பைன்ஸ் பெண்மணி (மேலாளர்), இந்தியர்கள் அருகில் வந்தால் you smell spicy என்று கேலி செய்வார். அவரால் அந்த அளவுக்கு நுட்பமாக நுகர முடிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் நாம் சாப்பிடுவது வியர்வையில் ஒழுகுகின்றது (leaks out).

அதைக் கொண்டு ஒருவரின் பால், வயது, அவருக்கு வர வாய்ப்புள்ள நோய்கள் எனப் பலவற்றை அறிய வாய்ப்புள்ளது; அத்தகைய ஆய்வுகளும் கருவிகளும் வந்து கொண்டுள்ளன; விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம்.

படித்துப் பாருங்கள்.



அறிவாலுக்கு அளவில்லை

 அறிவாலுக்கு அளவில்லை


09-July-2021


 

தேவா:

 

Aware that things happen as they happen because the world is as it is.

 

The known is accidental, The unknown is the Home of Real.

 

To live in the known is bondage, To live in the unknown is Liberation.

 

தொல்:

 

புத்தர் ஆசைதான் துன்பங்களுக்குத் தோற்றுவாய் என்றார். ஆனால் அறிவு (அறிதல் - to know) தான் எல்லாத் துன்பங்களுக்கும் மூலம். ஆசையைத் துறக்க முடியாவிட்டாலும் வலிவிழக்கச் செய்யலாம். அறிவை அதுபோல் கூடச் (அதன் பிடியைத் தளர்த்துவது) செய்வது மிக மிகக்  கடினம்.

 

கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளைப்

பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே

            - தாயுமானவர் : பராபரக்கண்ணி

 

அறிவைக் கொள்ளைக் கொடுக்காமல் இருப்பின் உண்மை (கருத்துத் திரை இல்லாமல்) இயல்பை 'அறிய' முடியாது. இந்த 'அறிய' என்பது அதுவாகவே இருத்தல் என்ற பொருள் படும்.

 

எடுத்துக்காட்டாக, எந்த மொழி ஒலி, வரி வடிவத்தையும் அறியும் (தெரிந்து கொள்ளும்) முன் நாம் அதை எப்படிக் கேட்டிருப்போம், பார்த்திருப்போம் என்பதை நம்மால் மீண்டும் கொண்டு வர முடியாது. இது மற்ற எல்லா அறிதலுக்கும் பொருந்தும்.

 

ஒரு மரத்தை 'மரம்' என்ற கருத்து இல்லாமல் நம்மால் (அச்சொல்லை, கருத்தை அறியும் முன்பு பார்த்தது போல்) இனிமேல் (தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும்) பார்க்க முடியாது.

 

அறிவைப் பெறுவது என்பது உயர்வு அன்று; வீழ்வு. அதனால் தான் பைபிள் கதையில் அறிவுக் கனியை (கடவுள் உண்ணக் கூடாது என்று தடுத்ததை, பாம்பு ஆசையைத் தூண்டி) உண்டவுடன், ஆதாம் ஏவாள் தாங்கள் நிர்வாண‌த்தை உணர்கின்றனர்; மரண பயம் கவ்விக் கொள்கிறது; ஆனால் அறிவு வளர்கிறது.

 

அறிவால் வந்த வீழ்ச்சியை உணரவும் அறிவே உதவுகிறது என்பது அதன் முரண்பாடு.

 

'அறிவு' தான் நம்முடைய வால்; மனிதக் குரங்கிற்கு வெளி வால்; மானிடக் குரங்கிற்கு உள் வால்; வெளி வாலுக்கு அளவு உண்டு; உள் வாலுக்கு எல்லை இல்லை.

 

அறிவால் நமக்கு வந்த மற்றொரு வீழ்ச்சி என்னவென்றால் முட்டாள்தனம்; பேதைமை. அறிவு இல்லாவிடில் பேதைமையும் இருக்க முடியாது.

 

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

கோவிந்தம் பஜ மூடமதே (ஆதிசங்கரர்)

 

அறிவு வளர வளர முட்டாள்தனமும் வளரும்.

 

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு (திருக்குறள்: 1110)

 

அறிவைக் காமத்திற்கு ஒப்பிட்டு அதை அனுபவிக்க அனுபவிக்க (அறிவார்வம், காமம்) அறியாமை (அடங்காமை) வெளிப்படும் என்று கூறியுள்ளார்.

 

தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே - ஒரு

தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே (வள்ளலார்).

 

தன்னை அறிவது என்பது இருப்பின் (தன்னின்) உண்மை இயல்பை உணர்ந்து அதுவாகவே இருப்பது.

 

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (திருக்குறள்: 130)

 

கற்று (அறிந்து; அறிவு வளர்ச்சி பெற்று) பின் அடங்க வேண்டும்.

 

எதைச் செய்யலாம்; எதைச் செய்யக் கூடாது என்ற அடங்குதல் இல்லை என்றால் 'அறம்' (ஒழுங்க‌மைதி) அங்கு இருக்காது.

 

"The highest possible stage in moral culture is when we recognize that we ought to control our thoughts". - Charles Darwin

 

நம்முடைய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்.

 

பெரியாரின் தொண்டு எல்லாம் நம் சிந்தனை விடுதலைக்குத்தான்.

 

'விடுதலை' என்றால் மனம் போன போக்கில் இருப்பது என்ற பொருளும் உண்டு. மனத்தை, அறிவை ஆளுமை செய்து அதற்கு (கருத்துகளுக்கு) அடிமையாக இல்லாமல் இருப்பது என்ற பொருளும் உண்டு.

 

பெரியார் தொண்டன் (பகுத்தறிவு) ரமணர் அடியான் (மெய்யறிவு) ஆகி விட்டதாகத் தோன்றும். உண்மைக்கு வழி கிடையாது (Truth is a pathless land - JK). அல்லது எவ்வழியும் உண்மைக்கு வழியாகலாம். பெரியார் வழி வராவிடில் ரமணரைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 'அறிவுக்கு விடுதலை தா' என்ற பெரியார் வழி ரமணரின் 'அறிவுக்கு உன்னிடமிருந்து விடுதலை கொடு அல்லது நீ அறிவு மாயையிலிருந்து (பொருளல்லவற்றை பொருளாக உணரும் மருள்) விடுதலை பெறு' என்று விளங்கியது.

 

விடுதலை என்பது தலை / தளை (துன்பம், அடிமைத் தனம், இக்கட்டு, விலங்கு) விடுபடுதல்.

 

கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்

பற்று மதப்பேயின் பால் உய்ந்தார் - சுற்றுபல‌

சிந்தைவாய் நோய் உய்ந்தார் சீர்தேடி ஓடல் உய்ந்தார்

உய்ந்தது ஒன்று அன்று என்று உணர்.

            - ரமணர் : உள்ளது நாற்பது

 

[நூல்கள் கற்றும் (ஆன்ம விசாரணையினால்) அகந்தை அடங்கப் பெறாதவர்களை விடக் கல்லாதாரே பிழைத்தவர்கள், பிடித்துக் கொள்ளும் மதமென்னும் பேயினின்றும் தப்பினார்கள். சுழல்கிற பல சிந்தை, வாக்கு இவ்விரண்டின் நோயினின்றும் தப்பினார்கள். சீரைத் (செல்வத்தை) தேடி நாடு எங்கும் அலைதலைனின்றும் தப்பினார்கள். இப்படியாகக் கல்லாதவர்கள் தப்பின கேடுகள் ஒன்று அல்ல, எத்தனையோ என்று உணர்.]

 

'ஆட்டுக்கு வாலை அளந்து வைச்சவன் - ஆளுக்கு 

அறிவாலை அளந்து வைக்கல' (சரியாரின் இன்றைய உளறல்)


Shan:

 

என் வீட்டுக்கு வெளியே சமயங்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். சமயங்களில் நான் நினைப்பதுண்டு நிம்மதியான வாழ்க்கை, எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாத,  எதிர்காலம் என்ன என்று தெரியாத,  மரணம் பற்றிய அறிவு இல்லாத,  கவலையில்லாத வாழ்க்கை. ஆனால் ஒரு மாடு போல வாழ நீ தயாரா என்றால் யாரும் சரி என்று சொல்ல மாட்டார்கள்.

 

Thol:

 

உண்மைதான். மாடு போல் வாழச் சரி என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அப்படி வாழ்வதும் வாழாமல் இருப்பதும் நம் கையில் இல்லை. அறிவுதான் தடை என்று அறிவால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அத்தடையை நீக்கிக் கொள்ள அறிவால் முடியாது.

 

இஃது ஒரு பக்கம் இருக்க, மாடுகள் உண்மையில் அப்படி ஓர் உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன‌. அவற்றின் வாழ்விலும் போட்டிகளும் தலைமைச் சண்டைகளும் உள்ளன.

 

ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு பறவையும் தவளையும் வெட்டுக்கிளியும் ஒவ்வொரு மனிதர்களைப் போல் தனித்த இயல்புகளைக் கொண்டுள்ளன என்பதையும் அறிவியல் ஆய்வுகளின் மூலம் அறிகிறோம். அவற்றிலும் பயந்த சுபாவம், புதியவற்றை ஆராயும் துணிவு, புதிய வழிகளில் உணவைத் தேடும் ஆர்வம்/முனைப்பு என்று பலவிதமாக ஒவ்வொரு தனிஉயிரியும் (individual animal / insect...) உள்ளன.

 

I have watched many documentaries regarding this - The Secret Life of Chickens, Farm Animals, Pet Cats, Pet Dogs... all presented with a scientific approach.

 

We idealise their lives. They have their own problems / tensions / suffering (elephants mourn their dead relatives). Pet dogs cry when left alone (locked) in their house when the owner goes to work. They get all sorts of diseases.

 

As per cows, to increase the milk yield we feed them rich food, which results in their udders growing very big and rubbing against their legs; they are not able to walk properly and get arthritis. I saw a documentary on the BBC in which they said this problem is still unresolved due to our greed for productivity.

 

தன்னுடை கொட்டடியில் புதிதாக வரும் கோழி, குதிரை, குரங்கு... எல்லாம் குழுவில் உடனடியாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அவை துன்புறுத்தலுக்குள்ளாகின்றன. உணவுக்கு வரிசையில் (pecking order) காத்திருக்க வேண்டும்.

 

டால்பின்கள் பிற இளம் டால்பின்களை ராகிங் (ragging) செய்கின்றன.

 

ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். மனிதனைத் தவிர பிற விலங்குகள் துன்பத்தை நினைத்து நினைத்து வருந்துவதாகவும் இன்பத்தை நினைத்து நினைத்து ஏங்குவதாகவும் தெரியவில்லை. அது மனிதர்களுக்கே உள்ள சாபமும் வரமும் ஆகும்.

 

பெரியார் இன்றும் என்றும் (விடியல் பதிப்பகம், கோவை, ஏழம் பதிப்பு, பிப்ரவரி 2019) பக்கம் 25

 

 

 

 


தக்காளி பூத்திருக்கு

தக்காளி பூத்திருக்கு

2021-06-28

ஜூம் சந்திப்பில் வாகை (அடவியின் இரண்டாம் மகள்; முதல் மகள் வெண்பா), வீட்டுத் தக்காளிச் செடியில் தக்காளி காய்த்திருப்பதைத் தக்காளி பூத்திருக்கு என்று சொன்னதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தோம்.

தக்காளிக்காய் பூத்ததால் வந்த பாடல் (உளறல்)


தக்காளி பூத்திருக்கு
தாழம்பூ பழுத்திருக்கு
பாப்பாளி கொழுத்திருக்கு
பாகல்குலை தள்ளி(யி)ருக்கு

வெண்டைக்காய் வெடித்திருக்கு
வெள்ளரிக்காய் வீங்கி(யி)ருக்கு
சுண்டைக்காய் சுருங்கி(யி)ருக்கு
சுரைக்காய் படர்ந்திருக்கு

அவரைக்காய் அரும்பி(யி)ருக்கு
ஆவக்காய்  மலர்ந்திருக்கு
துவரைகாய் துவண்டிருக்கு
தூதுவளை துளிர்த்திருக்கு

மாங்காய் மறைந்திருக்கு
மாதுளங்காய் மண்டியிருக்கு
தேங்காய்த் திரண்டிருக்கு
தெளிவாய்க் கருத்திருக்கு
(நம்ம கடையில் தெளிவான கருத்துகள் இருக்கு. சந்தடி சாக்கில் கொஞ்சம் 'தற்புகழச்சி'க்காய்!)

பூசுனைக்காய் பொங்கியிருக்கு
புடலங்காய் சுருண்டிருக்கு
பொல்லாங்காய் பரவியிருக்கு
புரட்சிக்காய்க் காத்திருக்கு
(உலகில் பொல்லாங்கு ஒழிந்து புரட்சி மலருமா?)

முருங்கைக்காய் முகிழ்ந்திருக்கு
முளைக்கீரை மொட்டுவிட்டிருக்கு
பருவங்கள் குழம்பி(யி)ருக்கு
பலகாய்கள் வெதும்பி(யி)ருக்கு 

வாழைக்காய் வளர்ந்திருக்கு
வாசமல்லி விளைஞ்சிருக்கு
வாழ்க்கை வளைஞ்சிருக்கு வாகை-வெண்பா
வாய்நல்லா முளைச்சிருக்கு